Wednesday, October 30, 2019

வெண்முரசு - குருஷேத்திரப் போர் - தர்மனும் அறமும்.




அறம் யார் பக்கம்?

    ஒரு செவ்வியல் நாவலின் நோக்கம்  வாசகனை மகிழ்விப்பது  அல்ல. அவன் மனதை கலைத்து அடுக்குவது. நல்லதை மட்டுமே காட்டுவதும் தீமை நன்மை, தீயவர் நல்லவர் என இரு தரப்பாக பிரித்து கதை சொல்வது எல்லாம் குழந்தைக் கதைகள், அல்லது வெகுஜனக் கதைகள். ஆனால் செவ்விலக்கியத்தின் உயர்  கதைகளில்  இந்தப் பிரிவினை மழுங்கிபோய் விடுகிறது. ஒருவன் செய்வது அறமா அதற்கு மாறானதா என்பதின் தெளிவின்மையை வாசகனின் மனதில் தோற்றுவிக்கிறது. இக்குழப்பத்தில் உள்ளாடும் கதா பாத்திரங்களை உருவாக்கி கண் முன் காட்டுவதே செவ்விலக்கியங்கள் செய்கின்றன.

   அதே நேரத்தில் கதையில் இரு தரப்புக்கள் மாறுபட்டு நிற்கும் போது வாசகன் ஏதோ ஒரு தரப்பின் வழி நின்று கதையை வாசிப்பது இயல்பானது. ஆனால் அத்தரப்பு அறம் தவறுகையில் அவன் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.  தானே அறம் தவறியதாக அவன் உணர்கிறான். அதைப் போன்ற சமயங்களில் சிலர் அக்கதையை வாசிப்பதைக்கூட  நிறுத்திவிடுவதுண்டு.

    மேலும் வெண்முரசு அனைவரும் அறிந்த வியாச பாரதத்தின் கதையை விரித்தும்  நவீனப்படுத்தியும் எழுதுகிறது.  ஆகவே பெரும்பாண்மை  வாசகர்கள் படிப்பதற்கு முன்பாகவே ஒரு தரப்பின் வழி நிற்பவர்களாக  இருப்பார்கள்.  அவர்கள் அனைவரையும்  வெண்முரசு  பல இடங்களில் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பது ஐயமில்லை. தான் பெரிதென நினைக்கும் தரப்பு அறத்திற்கு மாறாக நடக்கையில் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆட்பட நேரிடுகிறது.

   வெண்முரசு  குருஷேத்திரப்போர் ஆரம்பித்த நாளிலிருந்து துரியோதனன் தரப்பில் நின்று பேசுவதாக உள்ளது.   கௌரவர்களுக்காக போரிடும் வீரர்களின் மேன்மை அதிகம் சொல்லப்படுகிறது. அவர்களின் ஒவ்வொருவர் கொல்லப்படுவதற்கு  பாண்டவர் பக்கத்து வீரர்கள் நெறி மீறல்கள் காரணமாகக் காட்டப்படுகின்றன.  வெண்முரசின் குருஷேத்திரப் போரைப்பற்றிய நிகழ்வுகளை  படிப்பவர்கள் அறிவது:  பாண்டவர்களை ஒற்றுமையற்ற சகோதரர்கள், ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்பவர்கள்போர் நெறியை மீறுபவர்கள்.   தம் பிள்ளைகளிடம் இருந்து கூட இந்த நெறிமீறல்களுக்காக நிந்திக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.  வெற்றி பெற  தகுதியற்றவர்கள்   மற்றும்  கிருஷ்ணன் வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக நடத்தும் போரில் தம்மை பகடைக்காய்களாக ஆக்கிக்கொண்டவர்கள் எனவும் அவர்கள்  தோன்றுகிறார்கள்.

2. தருமர் கொள்ளும் தாழ்வு

         குருஷேத்த்திரத்தில் அனைவரின் வெறுப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகுபவராக தருமர் உள்ளார்.  அவரை பெரிதும் மதிக்கும் அவருடய தம்பிகளே அவர்பால் கடுமை காட்டுகின்றனர். இடித்துரைக்கின்றனர். பீமன் தருமரை மதிப்பதே இல்லை. அர்ச்சுனன் முகம் கொடுத்து பேசுவதில்லை.  கண்ணன் நேர்கொண்டு தருமரிடம் பேசுவது மிகக் குறைவு.   சகாதேவன் தருமனை அறிவுரை சொல்லி திருத்தி வழிநடத்தவேண்டிய சிறுவனாக கருதுவதாகத் தெரிகிறது.  எதிர்  நின்று  போரிடுபவர்கள் அவர் இருப்பையே உணராதவர்களாக இருக்கிறார்கள்.

   ஆனால் பாருங்கள்இந்தப் போரே தருமருக்காகத்தான் நடப்பதாக அனைவரும் கருதுகிறார்கள்.  தருமருக்கு அரசை பெற்றுதரவேண்டியதற்கான போர் இது என்று அவன் தரப்பினர் உள்ளனர். அவன் எதிர் தரப்பினர் அந்த அரசுக்குரியவன் இவன் இல்லை என்ற நிலையெடுத்தவர்கள்.    ஆகவே  போர் தருமர் பொருட்டே நடக்கிறது. ஆனால் வெண்முரசின் தருமர் போர் செய்யத் தெரியாத ஒருவராகபதட்டத்தில் தவறுகள் பல செய்பவராக, செய்வதறியாது திகைத்து நிற்கும் ஒரு அறிவிலியாக, ஒவ்வொரு கணமும் மற்றவர் பாதுகாப்பை வேண்டி நிற்கும் ஒருவராக இருக்கிறார்.  இந்தப் போரில் பெயர்கொண்டு சுட்டப்படும் ஒவ்வொருவரும் எதோ  ஒரு விதத்தில் அதீத திறன்கொண்டவர்கள். அந்தத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. அவர்கள் இறந்துபோவது வருத்தமளிப்பதாக  இருக்கிறது. ஆனால் தருமர்  எவ்விதத்  திறனிலும் தேர்ந்தவர்  இல்லை. அவரால் போரில் ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.  அவர்  இருப்பை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. 

    மேலும் போரில் தன் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பில் மிகப் பெரிய ஆளுமை உடையவரோ வீழ்ந்து மற்றவர்கள் பெரிதும் கலங்கி நிற்கும் போது அப்படியொன்றும் அதற்காக கலங்குபவராகத் தெரியவில்லை.  போரில் ஈடுபட்டு இறக்கும்  இள மைந்தர்களுக்காக  பெரிதாக அவர் கலங்கி நின்றதில்லை.  சிலசமயம் அவர் பாசம் அற்றவராக, மற்றவரின் இறப்பை அலட்சியப்படுத்துபவராக எப்படியாவது போரில் வெற்றி கிட்டினால் போதும் என நினைப்பவராகத் தெரிகிறார்.  தம்முடைய அல்லது எதிர் தரப்பைச் சார்ந்தவர்களில் பெரு வல்லமையை பற்றி ஒரு சொல்லும் சொல்பவராக அவர் இல்லை.  ஏன் இன்னும் போர் முடிந்து வெற்றி கிட்டவில்லை என சிடுசிடுத்தவண்ணம் இருக்கிறார். மேலும் தன் படையினரின் அற மீறல்களை காணாது  விடுகிறார். அல்லது பேருக்கு வருந்துவதாகத் தெரிகிறார். அவரே அறமீறல்களைச் செய்கிறார். அவருடைய தெய்வமான அறம் அவரை கைவிட்டு அவர் தேரின் கால்கள் மண்ணில் பதிகின்றன.வெறும் நூல்கள் வழி அறத்தை அறிந்து அதை சொல்லில் மட்டுமே நிகழ்த்துபவராக தருமர் இருக்கிறாரா

    பீமன் தன்னை விலங்கெனவே காட்டிக்கொள்கிறான். போர் நெறிகளை சற்றும் மதிக்காதவனாக, எவ்வித உணர்ச்சியுமற்று ஒரு கொலை விலங்கினைப்போல  கௌரவ மைந்தர்களையும் , நூறு கௌரவர்களையும் கொல்பவனாக காட்டப்படுகிறான். மனிதத் தன்மையை முற்றிலும் இழந்து போர் புரிபவனாக இருக்கிறான்.

   அர்ச்சுனன் சுய புத்தியற்று கிருஷ்ணனின் சொற்படி மட்டுமே நடப்பவனாக காட்டப்படுகிறான்.  அவன் கர்ணனுக்கு நிகரற்றவனாக மட்டுமல்லாமல் அஸ்வத்தாமனுக்குகூட நிகரானவன் தானா என ஐயம் எழும்படி அவன் போர்த்திறன் உள்ளது. நகுலனும் சகாதேவனும்  போரில் முதிராத சிறுவர்களைப்போல நமக்கு தோன்றுகிறார்கள்.  திருஷ்டத்துய்மனும் சாத்யகியும் பெறிய  நெறி மீறல்களைச் செய்து போர்க்களத்தில் அனைவரின்  தூற்றுதலுக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். 
 இப்படி இருக்கும் பாண்டவர் தரப்பு போரில் வெல்வதற்கு தகுதியானதுதானா என்ற கேள்வி ஒரு வாசகன் மனதில் எழுகிறது.

  3. துரியோதனனின் மேன்மை  
    
 அதே நேரத்தில் துரியோதனன் தன் பிள்ளைகளின் இறப்புக்காக வருந்துவதைவிட பாண்டவ மைந்தன் அபிமன்யுவின்  இறப்புக்கு  வருந்துகிறான். அவன் போரிடுவதே தன் பிள்ளைகளின் தம்பிகளின் இறப்புக்கு ஈடு செய்யத்தான் என்று  கருதுபவனாகத்  தெரிகிறான்.   .துரியோதனன் தன் தம்பிகளை ஒவ்வொருவராக இழந்து வந்திருக்கின்றான். அவன் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர். அப்படியிருந்தும் அவன் பாண்டவர்களின் பிள்ளைகளைக்கொல்ல மிகவும் தயங்குகிறான். அவன் தம்பிகள் அவனுக்கெதிராக ஒரு சொல்கூட எழுப்புவதில்லை.  அவர்கள் எண்ணத்தில்கூட எதிர் சொல் எழுவதில்லை.  சகோதரர்களின்  அத்தகைய அன்பைப் பெற்றவனாக துரியோதனன் இருக்கிறான்.  அவனுக்காக துணை நிற்பவர்களாக பிதாமகர் பீஷ்மர், குரு துரோணர், மற்றும் பெரும் வீரர்கள் பலர் இருக்கின்றனர்.  அவனிடம் உயிரிலும் மேலாக நட்பு பாராட்டுபவர்களாக பெரு வீரர்களான கர்ணன் , அஸ்வத்தாமன், கிருதவர்மன் ஜெயத்ரதன், பூர்வசிரஸ்  போன்றோர் இருக்கின்றனர்.
    
   அத்தகைய துரியோதனனை வீழ்த்தி   இப்போரில் தருமன் வெற்றி பெற்று அஸ்தினாபுரத்தின் அரியணையில் அமர்வதற்கான தகுதி இருக்கிறதா?. பாண்டவர் தரப்பு இப்போரை முறையற்ற வழியில் வெற்றிகொண்டார்களாஅப்படியென்றால கண்ணன் ஏன் அவர்களுக்கு துணை நிற்கின்றான்? போர்க்களத்தில் தருமனின் சிறுமை வெளிப்படுகிறதா? அவன் தம்பிகள் அவன் மேல் கொண்டிருந்த மதிப்பை இழந்து விட்டார்களா?    .  இந்தப் பேரழிவுப் பெரும்போரில் வெற்றி பெறுவதற்கு  சற்றேனும் தகுதியானவனா தருமன்?

 வெண்முரசின் குருஷேத்திர போர்க்கள காட்சிகளைப் படிசக்கும் வாசகனுக்கு இக்கேள்விகள் எழுவது வியப்பில்லை. 
  
இக்கேள்விகளுக்கு  வெண்முரசின் எல்லைகளுக்குள்ளிருந்து விடை ஏதாவது இருக்கிறதா எனக் காண்போம். தருமனுக்கு உண்மையில் இப்போரை நடத்துவதற்கான நியாயம்  இருக்கிறதா என முதலில் பார்ப்போம்.

தண்டபாணி துரைவேல்