Wednesday, October 30, 2019

நீர்சுடர் ஒளியில்



இனிய ஜெமோ சார் அவர்களுக்கு, 

அமெரிக்க பயணத்தில் இருந்து முழுமையாக உங்களை பிரித்து எடுத்து தங்களுக்காக காத்திருந்த பணிகள் உங்களை மூச்சு மூட்ட தழுவியிருக்கும். ஆனால் உங்கள் அண்மை கொடுத்த பொறி நன்றாக பற்றிக்கொண்டது உங்களோடு இங்கிருந்தவர்களை..

வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் சுமார் 10 மைல் தூரம் இருக்கும். போய் வர மூன்று வழிகள் இருந்தாலும், விரைவு கருதி எப்போதும் தேர்வுசெய்வது ஒரே பாதை தான்.  விழியிழந்தவன் தன் உடலறிவால் வழியடைவது போல் பலமுறை காலையில் ஒரு குருட்டு பயணம்.  அதிராத, சமநிலையோடு சமர் செய்யாத  பாடல்கள் இல்லையென்றால்  அலைபேசியில் இருந்தே மெய்நிகர் அலுவலக வேலைகள். அந்த நாளின் அலைக்கழிப்புகள் எந்த முனையில் இருந்தாலும் பல நேரங்களில் மாலையில் வீடு திரும்பும் போது  இருக்கும் மனநிலை அலாதியானது. இப்போதும் பாடல்கள் ஒலித்திருக்கும் ஆனால் சாய்ந்து நிற்கும் மரங்கள், அதில் இளமை பசுமை ஊறிய இலைகள், காற்றில் ஆடியபடி கீழே விழும் முதிர் இலைகள், சுருக்கங்கள் விழுந்த கைகளை விரலால் பிணைந்தபடி ஆழந்த அமைதியில்  வார்த்து எடுத்த முகங்களை கொண்ட நடைபயணம் செய்யும் முதியவர்கள், பிள்ளையின் கைப்பிடித்து நடந்து வரும் தந்தை, பின்னால் பொறுமையாக வரும் அன்னை, பதைபதைப்புடன் கடைக்கும் செல்லும் யுவதிகள் என ஒவ்வொரு காட்சியும் கவனமாய் கவனித்தபடி. அதே போல் விண்ணில் சூரியன் அடங்கும் அபாரமான அழகு அமைந்திருக்கும் வேளையில் இன்றலர்ந்த மலரென அப்போது மேகங்கள் பல உருவம், பல நிறம் மாறியபடி உடன் வரும். நிகழ்கணத்தில் வாழ்வது என்பது அது தான் என்பதை சற்றே தாமதமாகவே அறிவேன். அப்போது நான் எண்ணுவது ஒன்றே "இதை விட ஒரு சிறப்பான நிலை எதுவாக இருக்க முடியும்?  எத்தனை சலிப்பு தட்டினாலும், எப்படியெல்லாம் புலம்பினாலும், எவ்வளவு முறை சிலுவையில் அறையப்பட்டாலும், இதோ ஒரு காரணம் இருக்கிறது நாம் நிறைவுக் கொள்ள, மகிழ்ச்சியின் கணங்களில் திளைக்க, மானுட நிரையில் மற்றுமொருமுறை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்ற.."  

சற்றே பின்தங்கிய வெண்முரசு நீர்ச்சுடர் அத்தியங்களை இன்று தொடர்ச்சியாக படிக்க வாய்ப்பு கிடைத்தது என் நல்லூழ் :-) வாசித்தவைகளை தன் அனுபவங்களை  கொண்டு மீட்டுவதே / மீள் நிகழ்த்துவதே இலக்கிய வாசிப்பு என்ற உங்கள் வரிகளை நினைவுறுகிறேன். "மானுடர் எத்தனை உயர்ந்த நிலைக்கு செல்ல இயல்கிறது! எத்தனை படிகளை மானுடருக்கு தெய்வங்கள் திறந்து வைத்திருக்கின்றன! தெய்வங்களின் அருகே சென்று அமரும் வரை விண் விரிந்திருக்கிறது. துயர் மானுட உயிருக்கு இயல்பான ஒன்று அல்ல. உவகையே உயிரின் நிறைநிலை.  " - இந்த வரிகள் திறந்து வைத்த ஒரு கதவு தான் மேற்சொன்னது. இனி இது திறக்க போகும் கதவுகளை நான் அறியேன்.. ஆனால் இதையொட்டி அமைந்த பல வரிகள் அள்ளி தெளித்து இருந்தது 30 வது  அத்தியாயம். நம் உள்ளுறைந்த ஆணவமும், வன்மமும் அதிகம் காயப்படுத்துவது நம் இதயத்திற்கு அணுக்கமானவர்களை தான். அந்த கீழ்மை செய்யும் வரை இருக்கும் திமிரும், பெருமையும் செய்து முடித்த அடுத்த கணம் சோர்வாகவும், சுய அனுதாபமுமாய் மாறிவிடும் விந்தையை வியந்து வியந்து பார்க்கிறேன் ஒவ்வொரு முறையும் முதல் முறையென. அப்படி தொடங்கிய இந்த அத்தியாயம் ஒரு மிக பெரிய உச்சக்கட்ட உணர்வு நிலையில் நிற்கும் போதே அடுத்த அத்தியங்களை படிப்பதை தவிர்த்து விடவே எண்ணினேன். இந்த நிலையிலே இன்னும் சற்று நேரம் நீண்டிருக்க விழைந்து மீண்டும் மீண்டும் இதே அத்தியாத்தை படித்தேன். உறங்காது இருந்தால் பொழுது விடியாமல் போய்விடுமா என்ன?  ஒவ்வொரு முறை மகிழ்வோடு இருந்த போதெல்லாம் நான் எண்ணுவது இது எவ்வளவு நேரம் நீடித்திருக்கும் என்பதே.. எழும்பிய அலை இறங்கித்தான் ஆக  வேண்டும் அது மீண்டும் எழும். எஞ்சும் அனல் திறந்துகொண்டது அதில் என் மனநிலை யுயுத்ஸு வழியாக சீண்டப்பட்டதை பெரு மகிழ்வோடு படித்தேன்

"அந்த உவகைத் தருணம் கலையும்போது எழும் சீற்றம் மட்டுமல்ல அது. உவகைக்கு அடியில் ஓர் ஐயம் இருந்திருக்கும். எதையோ எண்ணி ஒரு பதற்றம் இருந்திருக்கும். அந்த உவகை எவ்வண்ணமோ கலையும் என்றே எண்ணியிருந்திருப்பார்கள். அதை கலைக்கும் பொருட்டு எழும் முதல் துளி என்பது அவர்கள் அஞ்சுவதும், வெறுப்பதும், அகல முயல்வதுமான அனைத்திற்கும் அடையாளமாக எழுவது. அதன் வடிவென வருபவர் எவரென்றாலும் அவர் மீது பெருஞ்சினம் கொள்வது இயல்பு."

அனைத்தையும் படித்து முடித்து மாலையில் என் கார் நோக்கி நடக்கும் போது  இயல்பாக எனக்குள் நானே பேசிக்கொண்டிருந்தேன்   - ஒரு பாதைக்குள் உறங்கி இருக்கும் ஓராயிரம் பயணங்கள். ஒரு கால்கள் அறிந்த ஒன்றை இன்னொரு கால்கள் அறிவதில்லை. அதே கால்கள் அடுத்த முறை அதே அனுபவத்தை அடைவதில்லை. காலற்ற மனம் கணக்கற்ற பயணங்களை ஒரே சமயத்தில் நிகழ்த்தியப்படி இருக்கிறது காலமற்ற காலத்தில்.

நன்றி 

வி.வெங்கட பிரசாத்