Friday, April 1, 2016

ஆண் பெண் ஆடல்



அன்புள்ள ஜெமோ

ரம்பகரம்பனின் கதையை இன்றைக்குத்தான் வாசித்தேன். ரம்பன் பாதாளத்துக்கு எருமையரசியுடன் செல்லும் இடம் திகைக்க வைத்தது. ஆண்பெண் உறவின் ஒரு நுட்பமான கரிய பக்கம்

சொல்லப்போனால் எல்லாமே கரியபக்கங்களினால் ஆன கதை இது. எல்லா கதையுமே இரட்டை ஆளுமையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. பயமூட்டுகிறது இது

அவள் பூர்ண அர்ப்பணிப்புடன் இருக்கிறாள். அவளை அவன் தான் சீண்டி எழுப்புகிறான். நீ கொஞ்சமேனும் எனக்கு தடையைக்கொடு என்கிறான்.

அவள் விஸ்வரூபம் கொள்ளும்போது அவளுக்குள் வாழ்ந்த பிறக்காத மகன் எழுகிறான். அவன் ரம்பனைக் கொல்கிறான்.

அந்தக்குற்றவுணர்ச்சியில் அவள் அக்குழந்தைகளை கைவிட்டுச்செல்கிறாள். ஆண் பெண் உறவின் நுணுக்கமான உளவியல்பின்னல்

சண்முகம்

பித்தம்- அகமும் புறமும்



ஜெ

பன்னிருபடைக்களத்தின் செறிவான வார்த்தைகளை ஒன்றுக்கு இருமுறை வாசித்துத்தான் முழுமைசெய்ய முடிகிறது. பல அத்தியாயங்கள் சிறியவை. ஆனாலும் பலமுறை வாசிக்கவேண்டியிருப்பதனால் நீளமானவை என்றஎண்ணமே எழுகிறது

இன்றுகாலைதான் இதை வாசித்தேன்


அகச்சொற்களுடன் அறியாச் சொற்கள் வந்து இணைந்துகொள்ளவே அவர்களின் உள்ளம் அவர்கள் அறியாத பேருருவம் கொண்டு விரிந்தது. தங்களுள் ஓடும் எண்ணங்களை தாங்களே உணரும் கணங்களில் அவர்கள் அலறியபடி தலையை கைகளால் அறைந்துகொண்டனர். கைகளை விரித்தபடி எழுந்து வெட்டவெளிநோக்கி ஓடினர். ஆடைகளை கழற்றிவிட்டு நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக்கொண்டு நடுங்கி உடல்குறுகினர். தங்களுக்குள் குடியேறியவற்றை பிடுங்கி வெளியே வீசுவதுபோல கைகளை அசைத்தனர். அவர்கள் வாயிலிருந்து அவர்கள் எண்ணாத சொற்கள் ஓயாது வெளியே கொட்டிக்கொண்டிருந்தன. 

சொற்கள் பொருளிழந்து ஒலிகளே என்றானபோது தானவத்தின் ஒவ்வொரு பருப்பொருளும் பெயரை இழந்தது. பெயரிழந்தவை பொருளையும் இழந்தன. பொருளிழந்த பொருட்கள் வெற்றிருப்பாயின. வெற்றிருப்புகள் அவர்கள் மேல் முட்டின. அவர்களை வீழ்த்தின. அவர்களைச் சூழ்ந்து உளம்பதைக்கச்செய்யும் அமைதியுடன் அமர்ந்திருந்தன. மொழிப்பொருளென்றாகி அவர்களைப் பிணைத்திருந்த ஒவ்வொன்றும் சிதற உருவாகி வந்த பெரும் பொருளின்மையில் ஒவ்வொருவரும் முழுத்தனிமையை அடைந்தனர். ஒருவரோடொருவர் விழிமுட்டாது உடலுரச அங்கே அவர்கள் சுற்றியலைந்தனர்


பைத்தியம் என்று ஒற்றைவரியில் சொல்லிவிடலாம். ஆனால் இப்படி வாசிக்கையில் மனம் திடுக்கிடுகிறது. கொஞ்சமேனும் இந்த அனுபவம் அத்தனை பேருக்கும் அமைந்திருக்கும்

முதல் பத்தியில் அகம் குலைவது எப்படி என்ற விளக்கம். இரண்டாம் பத்தியில் அதை ஒட்டி புறவுலகும் எப்படிக் குலைந்துவிடுகிறது என்னும் விளக்கம்.

பயமுறுத்தும் நாவல்

சாரங்கன்

பிளவுறுவதன் கதை



அன்புள்ள ஜெமோ

முற்றிலும் வேறுபட்ட வகையில் சென்றுகொண்டிருக்கிறது பன்னிருபடைக்களம். இந்த அமைப்பே இறுக்கமானதாக உள்ளது. உளவியல் சிக்கல்களிலிருந்து உளவியல்சிக்கல்களை நோக்கிச் செல்கிறது

ரம்பகுரம்பனின் கதையை உண்மையில் அப்படியே எவருடைய வாழ்க்கையுடனும் ஒப்பிடலாம்

முதலில் ஒன்றாகப்பிறக்கிறார்கள். ஒன்றாகவே உணர்கிறார்கள். உண்மையில் இரண்டு. அது தெரியாமலிருக்கிறார்கள். ஒருவன் உள்நோக்கியவன் ஒருவன் வெளிநோக்கியவன்

பெண்கள் வழியாகவே தன்னை இரண்டென அறிகிறார்கள். அதுதான் அடல்ட் பருவம்

இரண்டாகப்பிளந்தபின் இரண்டாக இருப்பதன் பெரும் துன்பம்

அதன்பின் ஒன்றாக நினைக்கிறார்கள். ஒன்றாக ஆகமுடியவில்லை. அது மேலும் துன்பம்

ஏதேனும் ஒன்றைப்பற்றிக்கொள்ளவிரும்புகிறார்கள். அதுவே பிள்ளைப்பேறு

ஸ்கிஸோபிர்னிக் என்பது சாதாரணமான அனைவருடைய மனநிலையும்தான். இரண்டுக்க்கு நடுவே பிளவுண்டு துன்புறுவது தான் அது. அது உச்சநிலையில் அவர்களை ஆட்டுவிக்கிறது

ராஜாராமன்

அன்னையைக் கொல்லும் அரக்கன்.(பன்னிரு படைக்களம் -6)



    வெண்முரசு காவியம்  இன்றைய காலத்திற்கேற்ப எழுதப்படுகிறது. மூல கதைகளில் வரும் மாய நிகழ்வுகள் பொருத்தமான யதார்த்த நிகழ்வுகளாக  மாற்றப்படுகின்றன. அவை  மூலகதைகளின்போக்கிற்கு  எவ்வித முரணையும் அளிக்காமல் உறுத்தலுமின்றி நாவலில்  இணைகின்றன.  சில மாய நிகழ்வுகள் உருவகங்கள் என மாறுகின்றன. அது உளச் சிக்கலை உருவகப்படுத்துவதாக, ஆன்மீக தத்துவங்களை வெளிபடுத்த, பிரபஞ்ச உருவாக்கம், இயக்கம் போன்றவற்றை விளக்க, மனித பண்பாட்டின் வளர்ச்சி போன்றவற்றை எடுத்துரைக்க  பயன்படுத்தப்படுகின்றன.


       இவை எதுவும் வெளிப்படையானவை அல்ல. வாசகன் தானே உய்த்துணரும்படி பூடகமாக விடப்பட்டுள்ளன.  இது இந்த நாவலுக்கு காவியத்தன்மையை அளிக்கிறது. நம் சிந்தனைக்கேற்ப இந்த உருவகங்கள் நமக்கு பலவாக  பொருள் தந்து நம் வாசிப்பின்பத்தை கூட்டுகின்றன.  ஒவ்வொரு முறை  படிக்கும்தோறும் ஒரு சிந்தனையை நாம் பெற முடிகிறது. இன்று அன்னையக் கொல்லும் அரக்கன் கதை வெளியாகியுள்ளது.  இக்கதையை நான் இப்படி ஒப்பிட்டுக்கொள்கிறேன்


   ஒரு கூட்டுக்குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். அதில் தாய் தந்தை மற்றும் பல குழந்தைகள்  இருப்பதாக கொள்வோம்.  அந்தக் குடும்பத்தையே ஒரு தாயென நாம் உருவகித்துக்கொள்ளலாம். அந்த குடும்ப நபர்கள் அனைவரும் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள். அக்குடும்பம் அக்குழந்தைளுக்கு உணவூட்டி வளர்க்கும் அன்னையென ஆகிறது.  அதைப்போல நாம் ஒரு சமூகத்தை அல்லது ஒரு நாட்டை  ஒரு அன்னையெனக் கொள்ளலாம். அது தன்னுள் கொண்டிருக்கும் மக்கள் யாவரும் அதன் குழந்தைகள் ,  அதை அழிக்க முற்படும் அரக்கன்  யாரெனக் காண்போம்.


       திருட்டு கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களா?   அவர்கள் மற்ற குழந்தைகளை தொந்தரவு செய்து விளையாடும் சண்டித்தனம் செய்யும் குழந்தைகள் போன்றவர்கள். அவர்களை அன்னை அதட்டி தேவைப்பட்டால் தண்டித்து சரி செய்யப்பட வேண்டியவர்கள். அவர்களல் சமூக அன்னைக்கு பெரிதான ஆபத்து ஏதுமில்லை.


      ஊழல்வாதிகளா? அவர்கள் மற்ற குழந்தைகளுக்கு சேர வேண்டிய உணவில் ஒரு பகுதியை தெரிந்தும் தெரியாமலும் எடுத்துக்கொள்பவர்கள். இவர்களால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் அன்னையும் தன் நலனிழப்பாள். இருந்தாலும் இவர்கள் சமூக அன்னையை கொல்பவர்கள் இல்லை. ஏனென்றால் சமூகம் இருக்கும்வரைத்தான் இவர்கள் உண்டு கொழிக்க முடியும். இந்த சுயநலனுக்காவது சமூகம் முன்னேற வேண்டும் என நினப்பார்கள்.   அதனால் சமூகத்திற்கு இவர்களால் நலிவு ஏற்படுமே தவிர சமூகம் அழியவேண்டும் என நினைப்பவர்கள் இவர்களில்லை.


  முதலாளிகளா? அவர்கள் மற்ற குழந்தைகளை தன்னுடன்  சேர்த்து குடும்பத்திற்கென பொருள் சேர்ப்பவர்கள். ஆனால் அந்த பொருள் பெரும்பகுதியை  தனக்குரியதென்று எடுத்துக்கொண்டு அன்னையின் குடும்பத் தேவைக்கு கூடியவரை குறைவாகத் தர நினைப்பவர்கள்  நினைப்பவர்கள்.  அன்னை சில சம்யம் அவர்களை அதட்டி வாங்க வேண்டி இருக்கும். இவர்கள் தான் உயர இந்த சமூகம் தேவை என நினப்பதால் சமூக அழிவதை எதிர்பார்க்க மாட்டர்கள்.


   இடதுசாரி சிந்தையுள்ளவர்கள், யார் எவ்வளவு பொருள் கொடுத்தாலும்  அனைவருக்கும் ஒரேஅளவு உணவுதான் அளிக்கவேண்டும் என வாதிடுபவர்கள். அவர்கள் சொல்வது சரிபோலத்தான் தோன்றும். ஆனால் அவர்களின் இந்த நிலை, குடும்ப உறுப்பினர்களின் பொருள் சேர்க்கும் ஊக்கத்தை வெகுவாக குறைத்து சமூகம்  வறுமையடைய காரணமாகிவிடுகிறது. இவர்கள் செய்கை சமூகத்தை நலிவாக்குகிறது என்பதை அறியாதவர்கள். 


   பின்னர் யார்தான் சமூகத்தை சாகடிக்க துணிபவர்கள்?    அவர்கள் சமூகத்தை வெட்டி எறிய நினைப்பவர்கள்.  இவர்கள் சமூகம் சிதைவடையவேண்டும் என நினைப்பவர்கள். மக்களுக்கு இனம் மதம், மொழி, சாதி என   பலவிதமான உணர்ச்சிகளைத்தூண்டி சமூகத்தை பிளக்க நினைப்பவர்கள். ஒருவருக்கொருவர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இவர்கள் ஒரு பிரிவின் காவலன் என்று தன்னை வரிந்துகொள்வார்கள். மற்றொரு பிரிவினரில் சில செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தி தன் பிரிவினரை அச்சமூட்டி மற்ற பிரிவினரின் மேல் வெறுப்பு பகை கொள்ள  வைப்பார்கள். அதே நேரத்தில் தன்னை சமூகத்தை காக்கவந்தவன் எனச் சொல்லிக்கொள்வர்கள்.  சமூக அமைதியை ஒற்றுமையை வேண்டி அதற்காக பணிபுரிபவரை எளனைப்படுத்தி பழிசொல்லி அழிக்க முயல்வார்கள்.  ஒன்றுபட்டு  ஒரு சமூகம் எச்சரிக்கைகொண்டு முதலில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது இவர்களிடம்தான்.   இவர்கள் சமூகம் என்ற அன்னைக்கு பேராபத்தானவர்கள். இவர்களே அன்னையைக் கொல்லத் துடிக்கும் அரக்கர்கள்.   


தண்டபாணி துரைவேல்

Thursday, March 31, 2016

பெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)



      சிறுவர்கள் மற்றவர் பொருளை ஒளித்து வைத்து விளையாடுவது வழக்கம். ஒளித்துவைக்கப்பட்டபொருள் அப்படி ஒளித்துவைக்கப்பட்டதாலேயே அது முக்கியமானதாகிவிடும். அதை எப்படியாவது  கண்டு பிடித்துவிட மற்றவர் முயல்வர்.  அந்த விளையாடலை பெண்கள் வளர்ந்த பின்னரும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். வளர்ந்த பெண்கள் இனி பொருட்களை ஒளித்துவைத்து விளையாடுவது இல்லை. அவர்கள் தன் உள்ளத்தை ஒளித்துவைத்து விளையாடுகிறார்கள். ஆண்களும் தம் உள்ளத்தை மறைக்கிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் அயலார்களிடம். நெருங்கிய உறவினரிடம்  நட்பினிடம், காதலியிடம் அவர்கள் தம் உள்ளத்தை மறைப்பதில்லை. அப்படி மறைக்க முயன்றாலும் பரிதாபமாக தோற்றுவிடுவார்கள். ஆனால் ஒரு பெண் ஒன்றை மறைக்க வேண்டும் என நினைத்தால் முற்றிலுமாக மறைத்துக்கொள்கிறாள். அவள் அப்படி தன் எண்ணங்களை கரவு கொள்வதற்கு காரணங்கள்கூட தேவைப்படுவதில்லை.


   அவள் பலசமயம் தனக்கு இதில் விருப்பம் என்ற எண்ணத்தைக் கூட மறைத்துக்கொள்வாள்.  அவள் குழந்தை முகமும் மென்மையான உடலும் நயமான பேச்சும் அவள் எண்ணங்களை முற்றிலுமாக நம்மிடமிருந்து மறைத்துவிடுகின்றன. முக்கியமாக அவள் தன் அறியாமையை என்றும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை.  ஒன்றை அறியாத போது அதை தனக்கு பிடித்தமில்லாதது என தெரிவிக்கிறாள். ஒன்றின்மேலான வெறுப்பை பயமென காட்டிக்கொள்வாள். அருவருப்பை வெறுப்பு என காட்டுவாள். நன்கு தெரிந்த ஒன்றை  தெரியாது என நடிப்பாள்.


  எவ்வளவு நெருங்கிப் பழகிய காதலினடமும் அவள் தன்  முழுக் காதலை திறந்து காட்டுவதில்லை. அப்படியே முழுமையாக காதலிப்பதாக சொல்லும் காதலியிடம் ஒரு விலகல் மிச்சமிருப்பதை காதலன் அறிந்து திகைத்து நிற்பான்.  எப்போதும் காதலனுக்கு மெலிதாக ஒரு ஐயம் இருக்கும்படி நடந்துகொள்வாள். ஒருவரிடம் தான் காதல்கொண்டிருப்பதைப்பொல் ஒரு உடல் மொழியிலும் மற்றொரு  உடல்மொழியில் அவனை அவள் அலட்சியம் செய்வதாகவும் காட்டி அவனை குழம்பவைப்பாள். அவள் உள்ளத்தில்  என்னதான் மறைந்திருக்கிறது என ஆண் தவித்துப்போவான்.  


   காமத்தில் ஒரு பெண் கொள்ளும் கரவு போல ஆணைக் குழப்புவது எதுவும் இல்லை. அவள் காம நுகர்வுக்கான மன நிலையில் இருக்கிறாளா என்பதை ஒருபோது முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. ஆண் அருகில் செல்லும் போது விருப்பில்லாததுபோல் விலகுவதும்,  விலகிச் செல்லும் போது சீண்டி அழைப்பதும்  என ஒரு கண்ணாமூச்சி ஆட்டம். அவள் அந்த நுகர்வில் நிறைவுற்றாளா, இல்லையா, அப்படி காட்டிக்கொள்கிறாளா என எதையும் ஒரு ஆண்மகன் அறிய முடிவதில்லை. இயற்கையாகவே ஆண் இதில் ஒரு பெண்ணிடம் எதையும் ஒளித்துவைக்க முடியாது. தன் துணைவன்  வேறொரு பெண்ணை காண்பதில் இருக்கும் காமத்தை ஒரு பெண் எளிதில் அறிந்துகொள்கிறாள்.  வெகுசில பெண்கள் வெளியுறவில் ஈடுபடுவதை,  யார்சொல்லியோ அல்லது நேருக்கு நேராக பார்த்தாலன்றி, அவர்கள் நடத்தையிலிருந்து அந்த கணவன்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.


  உறவுகளிடம் தான் கொண்டிருக்கும் கோபத்தை வஞ்சத்தை, வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் திறன் பெண்களுக்கிருப்பதைப்போல் எவருக்கும் இல்லை. சிறு விஷயங்களுக்கான் பகைகளைக்கூட பொறுத்திருந்து வஞ்சம் தீர்ப்பதில் அவர்கள் வல்லவர்கள். மாறாக ஒரு ஆண் தான் கொண்டிருக்கும் சிறு பகைளை மறைப்பதில்லை. அப்போதே வெகுண்டெழுந்து தன் கோபத்தை வெளிக்காட்டிக்கொள்வான்.


   ஒரு ஆண் தன்னை வலிமையனவனாக காட்டிக்கொள்வான். ஆனால் அவன் மனம் சீக்கிரம் தடுமாறும். மாறாக பெண் தன் மனத் திண்மையை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அது அவள் சிக்கலான தருணங்களில் இருக்கையில் வெளிப்படும் போது நாம் பிரமித்து நிற்போம்.  இத்தகைய துணிவு, உறுதி, அச்சமின்மை,  போராடும் உத்வேகம் அவள் பெற்றிருப்பதை நாம் அறிந்திருப்பது இல்லை.  துணையிழந்த ஆண்தான் துவண்டுவிடுகிறான். ஆனால் ஒரு பெண் அந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்துகிறாள். ஆண் இல்லாத குறையை அக்குடும்பம் உணராவண்ணம் போராடி வெல்லும் பல பெண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சிறு  கரப்பான் பூச்சிக்கு பயப்படுவதாக வெளிக்காட்டி தன் மனத்திண்மையை தன் பூவுடலுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள். 


  இப்படி தன் விருப்பை வெறுப்பை, அறிவை, அறியாமையை, காதலை, காமத்தை, மனத்திண்மையை வெளிக்காட்டாது இருப்பதால் அவள ஒரு மர்மமானவளாக ஆண்களின் கண்களுக்கு தெரிகிறாள். அவ்வப்போது மின்னலென வெளிப்படும் அவள் கரவுகொண்டிருக்கும் குணங்கள் ஒரு ஆணை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த அச்சம் ரம்பனின் உள்ளத்தில் எழுகிறது. அதுவும் முழுமை என்பது பூவுலகில் இல்லாத ஒன்று. அவளின்   முழுதளித்தல் என்பது அவனுக்கு கடும் ஐயத்தை கிளப்புகிறது, அவள் உண்மையில் கரவு கொண்டிருப்பது  எதுவென அறிய துடிக்கிறான்.  அந்தக் கரவுகொண்டிருந்த உண்மை மகிஷி என எழுந்து அவனை அழிக்கிறது. 


   பெண்ணில் ஒளிந்திருந்து எழும் இந்த பேராற்றலை உணர்ந்த நம் பெரியவர்கள் போர்க்கடவுளை, மனிதர்களை காவு வாங்கும் பெருநோய்களுக்கான இறையுருவை, தவறுகளுக்கு தண்டிக்கும் ஊர்தெய்வத்தை பெண்வடிவில் உருவாக்கி வழிபடுகிறார்கள். உண்மையில் யோசித்துப் பார்த்தால் பெண்தானே உலகின் உண்மைத் தேவை அவளே கருக்கொண்டு உயிர்களை படைப்பிக்கிறாள். உயிர்களுக்கு உணவளித்து ஊட்டி வளர்க்கிறாள். ஆண் அந்த வேலைக்கு உதவும் ஒரு சிறு உதவியாளன் மட்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவனோ ஒரு எஜமானன்போல் நடந்துகொள்கிறான்.   இந்த உண்மையை அறிந்திருக்கும் பெண் ஒரு புன்னகையுடன் இந்த உண்மையை தனக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள். அவனின் பணிப்பெண்போல் தன்னைக் காட்டிக்கொள்கிறாள். இராணித்தேனிக்காக உணவு சேகரித்துக்கொடுக்க. பாதுகாப்புக்கு தன் உயிர் கொடுத்து போரிட என்றே படைக்கப்பட்டுள்ள வெறும் வேலைக்காரத் தேனீக்கள் அல்லவா ஆண்கள். 

தண்டபாணி துரைவேல்

காளியின் களம்



ஜெயமோகன் அவர்களுக்கு,

பன்னிரு படைக்களம் திரௌபதி துகிலுரிதலைப்பற்றிய கதை. அதை காளியிலிருந்து தொடங்கியிருப்பதை க்கண்டு மகிழ்கிறேன். நீங்கள் உங்கள் நாவல்களை எத்தனை நுணுக்கமாக அமைக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது

மகிஷாசுரனும் ரக்தபீஜனும் பிறக்கிறார்கள். ஆனால் அந்த அசுரர்களை எல்லாம் உளவியல் சார்ந்து காட்டுகிறீர்கள். அதுதான் புதுமை. ரம்பகரம்பர்களின் மனநிலை ஸ்கிஸோபிர்னியாவாக உள்ளது

ஜெயராமன்