Sunday, January 1, 2017

நான்காமாண்டு



ஜெ

இன்று நான்காமாண்டு தொடங்குகிறது வெண்முரசுக்கு. நான்கு ஆண்டுகள் ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம். ஒரு அத்தியாயம்கூட போகிறபோக்கில் எழுதப்படவில்லை. எண்ணித்தேர்ந்த சொற்கள். பலசமயம் ஒரு சொற்றொடரிலேயே நின்றுவிடுவேன் . வெண்முரசையே நினைத்து நினைத்து என் மொழியும் அதுவாகவே ஆகியிருக்கிறது.

இதுவரையிலான அத்தியாயங்களை எண்ணிப்பார்க்கையில் திகைப்பாக இருக்கிறது. சத்யவதி சின்னப்பெண்ணாக இருக்கும்போது வாசித்த கதை. இன்று அவள் கொள்ளுபேரன்கள் பெரியவர்களாக ஆகிவிட்டார்கள். எத்தனை எத்தனை கிளைக்கதைகள். எத்தனை துணைக்கதைகள். நினைக்க நினைக்க பிரமிப்பாக இருக்கிறது

வெண்முரசை இப்போது எவரும் மதிப்பிட முடியாது. இது எங்கே செல்கிறதென்றே எவருக்கும் தெரியாது. அந்தந்த அத்தியாயங்களை வாசித்துப்பிரமிப்பது மட்டும்தான் நம்மால் முடிவது. ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வதற்கு இன்னும் நெடுநாட்களாகுமென நினைக்கிறேன்

வாழ்த்துக்கள் ஜெ

சரவணன்

வியாசனின் பாதங்களில்http://www.jeyamohan.in/43681#.WGiIqXpppdg

விளையாடியவர்



ஜெ

நீங்கள் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் பேசியதைக் கேட்டப்பின்னர்தான் நான் அந்த அத்தியாயத்தை வாசித்தேன். மிகத்தெளிவாகச் சொன்னபின்னரும்கூட அதில் அவ்வளவு nuance இருந்தது. ஆழ்ந்துசெல்பவர் மந்திரத்தை அடைந்தார். அகன்றுசென்றவர் கவிதையை அடைந்தார். இரண்டும் அறியமுடியாத ஞானத்துக்குச் சமம்தான். ஆனல் சொந்தம் கொண்டாடியவர் விளையாடியவர் சும்மா கமண்டலத்திலே அள்ளிக்கொண்டுவந்துவிட்டார் . அது மேலும் முக்கியமானது என்று நினைத்துக்கொண்டேன்

சத்யமூர்த்தி

உக்ரன்



ஜெ

இரண்டு கதைகளை உக்ரன் சொல்கிறான். ஒன்றில் தந்தையைத் தேடிச்செல்கிறார்கல். அல்லது ஆசிரியரை தேடிச்செல்கிறார்கள். அடிமுடி கானமுடியாது திரும்பி வருகிறார்கள். அது தத்துவக்கதை.

இன்னொருகதை குழந்தைக்கதை. அதில் அன்னையைத்தேடிச்செல்கிரது ஒரு சின்னக்குழந்தை. அன்னையை பெருகிநிறையும் காடாகவே அடைந்துவிடுகிறது

இரண்டு உக்ரர்கள் இருக்கிறார்க்ள். ஒன்று அன்னைதேடும் குழந்தை. இன்னொன்று தந்தையை குருவைத்தேடும் மாணவன்

உக்ரன் நீங்கள் படைத்த அற்புதமான கதாபாத்திரம்

ஈஸ்வரன்

அடிமுடியில்லாமை




அடிமுடியில்லா பேர் இறை ஒரு முகமாக  ஒரு பொருளாக ஒரு சொல்லாக ஒரு விளையாடலாக ஒரு ஆனந்தமாக  எனறு ஐந்தாக  தன்னை காட்டி நடிக்கிறது என்ற புரிதலை ஏற்படுத்தும் அத்தியாயம் அற்புதம். ஐந்துக்கும் அப்பால் அது தன்னில்தானாய் முழுதாய் குறைவின்றியும் நிற்கிறது.

அடிமுடியில்லா பேர் இறையை ஆணவம் அறிவு ஆர்வம் விளையாட்டு என்று நான்கு திசைகள் வந்துமோதி அகழ்ந்து பறந்து நின்று விளையாடி காணமுல்கிறது. நான்கும் நான்கை அறிகிறது. நான்கும் நான்கை அறிந்ததால் அறிந்த நான்கும் அர்ததப்படுகிறது. எது எதற்கு எப்படியோ அது அதற்கு அப்படியே என்று பேர் இறை நிற்கிறது. 

ஆணவம் கொண்ட நான்முகனுக்கு செந்தாழம்பூ என்னும் பொருளாக நின்று திசைமணக்கிறது. ஆழ்ந்து ஆழ்ந்து அளந்து அளந்த அறிந்து அறிந்து பணிந்து பணிந்து செல்லும் திருமாலுக்கு பொருள் உறங்கும் மந்திரச் சொல்லாக. எது எப்படியோ அது அப்படியே இருக்கட்டும் என்று ஆர்வத்துடன் காணவந்த நாரதருக்கு நடனமாக. தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன் விளையாடலை முன்னிலைப்படுத்தும் அகத்தியருக்கு உள்ளொளி பெருக்கும் கமண்டலதீபமாக. நான்கிலும் அது முழுதாக நிற்கிறது. நான்கிலும் அது ஆனந்தத்தை பொதிந்து வைத்து தான் குறையாமல் முழுதாக நிற்கிறது.

நான்கிற்கும் அப்பால் அது ஆணவத்தாலோ அறிவாலோ  ஆர்வத்தாலோ விளையாட்டாலோ காணாத ஒரு உணர்வுநிலைக்கு தன்னை பதி என்று அவளில் பதித்தும் காட்டுகிறது. அவள் மற்றதை அறியவில்லை அறிய முயலவும் இல்லை. முயலுதல் தேவை இல்லை என்று வேலுடைவனுக்கு வேலும் தருகிறாள்.
ஐந்தாகி நிற்கும் அந்த பேர் இறை முற்றும் தான் தனியாகவும் நிற்கிறது. தன் வல்லமை அது என்று காட்டுகின்றது.
ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே  -திருமந்திரம்

அறிந்த கதைதான் இன்று  அரிபுதுபொருள்கொண்டு வந்து பூத்து அழகு செய்கிறது அறியவைக்கிறது. அற்புதம் ஜெ. நன்றி பல.

அன்புடன்
ராமராஜன் மாணி்க்கவேல். 

Maharudram



Dear Jeyamohan

An amazing story of Arjuna's solo journey intertwined with magical moments in different "lokas".
Equally one learns a lot about "sol" from Chandan, Bailan, Jamini, Vaisampayana and the adorable Ugran. 

The evolution of Maharudram and the invocation of Mahakalanadhar provide a plausible explanation to the birth, death and existence. Overall, it is Mystical  & magical Kiratam raises questions to explore self and existence. The beauty of this chapter is one forgets the core Mahabharata to concentrate on the "Sivoham". 

Thanks as always.

Warm regards
 
 

Sobana Iyengar

மறுமுகங்கள்



அன்பு ஜெமோ சார்,

                 கடந்த இரண்டு வருடங்களாகவே எனக்கொரு கிறுக்கு, வெண்முரசு கிறுக்கு. எங்கே எதைக் காண்பினும் வெண்முரசோடு   தொடர்புபடுத்தி யோசித்து விடுவேன். விருதுவிழாவில்   தாங்கள் பேசிய வேறு வேறு அணில்கள் பற்றி கேட்டவுடன், ஏற்கனவே  பலமுறை அசை போட்ட ஒன்று தீவிரமானது.

          வெண்முரசில் வரும் திரௌபதி-மாயை, சகுனி-கணிகர், திருதராஷ்டிரர்-விப்ரர்  இவர்கள் ஒருவரே இருவராக வருவதாகத் தோன்றுகிறது. சிந்தனையின் போக்கு சரியா? பிழையா? சரி அல்லது பிழை என்று ஒற்றை சொல்லிலாவது பதில் சொல்லி  விடுங்க சார். ஏனென்றால்  'சிவஹோம்' என்ற ஊழ்கச்சொல் 'சிவமேயாம்' என்றானதை
‘அஹம் பிரம்மாஸ்மி' என்ற ஆப்தவாக்கியம் அவ்வாறானது என்று புரிந்து கொண்டது போல் ஆகிவிடக்கூடாது.


இரா.சிவமீனாட்சிசெல்லையா


அன்புள்ள சிவா 

ஒருவரை பலராகக் காட்டுவதென்பது புராணங்களின் வழிமுறை. ராவணனின் அம்சங்கள்தான் கும்பகர்ணனும் இந்திரஜித்தும். அதை கம்பனே சொல்லவும் செய்கிறான்

இது உண்மையில் நிகழ்வதும்கூட. ஆல்டர் ஈகோ என்று அதைச் சொல்வார்கள். அது ஓர் உத்தி. அதனூடாக எது வெளிப்படுகிறதென்பதே முக்கியமானது

ஜெ