Tuesday, August 29, 2017

வெண்முரசு கலந்துரையாடல்



அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,


                                                                           இந்த மாத (ஆகஸ்ட்) சென்னை வெண்முரசு கலந்துரையாடல் சிறப்பாக அமைந்தது. இரண்டாவது முறையாக அதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நிகழ்ந்துக் கொண்டுயிருக்கும் நீா்க்கோலமே தலைப்பாக இருந்தது. திரு. மாாிராஜ் அவா்கள் பேசினாா். நல்ல பேச்சு. ஒரு நல்ல உரையாடலாகவே நிகழ்ந்தது. இன்னும் நீா்கோலத்தை தொடாத எனக்கு கரவுகாடு பற்றி ஒரு கனவு உதித்துவிட்டது. அதுவும் அந்த பகுதியை காடு நாவலோடு ஒப்பிட்டு திரு. காளிபிரசாத் அவா்கள் பேசிய பிறகு தீவிரமாகி விட்டது. மகாபாரதம் நிகழ்ந்த காலத்தின் போது இருந்த நில அமைப்பை இப்போது உள்ள நில அமைப்போடு ஒப்பிட்டு பாா்க்கலகாது என்றும் பல்லவா்கள் அங்கே எப்படி வந்தாா்கள் என்றும் ஏற்றுக்கொள்ளும்படியான தகவல்களுடன் உரையாடினாா்கள். அனைத்தையும் விட எல்லாவற்றையும் புன்னகையோடு செய்ய முடிகிறது.  திரு. செளந்தா் அவா்களின் தந்தையாா் மறைந்து சில தினங்களே ஆகி இருந்த நிலையில் அவாின் பங்களிப்பும் உபசாிப்பும் வியப்பில் ஆழ்த்தின. நண்பா்க்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தொிவித்துக் கொள்கிறேன்.  நண்பா்கள் அனைவா்க்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.....


மிக்க அன்புடன்,
தேவி.  க
ஆவடி.

கலி விலகும் கணம்



அன்புள்ள ஜெ

கலி விலகும் கணம் மிக முக்கியமானது. எதுவுமே தேவையற்றவனாக வெறுமே இருப்பவனாக ஆகிவிடுகிறான். ஞானமோ முக்தியோ கூட வேண்டாம். அதன்பின்புதான் காளைவடிவ கலி விட்டுவிட்டுச் செல்கிறது. அது புஷ்கரனை காளைவடிவத்தில் வந்து பிடித்த அந்தக்காட்சியிலிருந்து ஆரம்பித்தால் ஒரு சீரான கதை இதில் உள்ளது. கலியை அடையாளம் கண்டு அதைக் கொன்றபின் இன்னும் ஆழத்திற்குச் சென்று இறுதியில் மீண்டு வருகிறான் எல்லாவற்றையும் கைவிட்டபிறகுதான் மீட்பு

புஷ்கரன் ஒரு அபாரமான கதாபாத்திரம். சந்தேகமே இல்லை. ஜராசந்தனுக்கும் இவனுக்குமான ஒப்புமை முக்கியமானது அவன் ஏன் மீளவில்லை என்றால் அவனுக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டி. இவன் முழுதாக அமிழ்ந்து முழுதாக மீள்கிறான்

செல்வராஜ்

மீறிச்செல்வதே தவமெனப்படுவது



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

துள்ளும் சொற்கள் பலவும்
தொகுக்க முயல்கின்றேன்

அவனே அழைக்காமல்
அவன் பேர் சொல்லாதே
அவனே கொல்லாமல்
நீயொன்றும் சாகாதே

தெய்வமொன்றும் துணையில்லை என்னுங்கால்
செயல் ஒன்றே தெய்வமென்று கொள்ளல் வழி

திசை எதுவெனினும்
விசையின்றி வாழ்வதுமோர் வாழ்வாமோ?
வசையோ வந்தனையோ
பிறர்பால் வந்தணைதல் கூடுமோ?

வெற்றகந்தை எனினும் விரித்துச் செல்லல் நன்று
இப்பெரு மைதானத்தில் யாதொன்றும் பிழையில்லை
தீதகற்ற எதிரொரு தெய்வம் நிகழக்கூடும்
உதைத்து திசைதிருத்தி மெய்மையின் பால் செலுத்தவுங்கூடும்

யாதொன்றும் பிழையில்லை - உள்ளதொரு
வாழ்வில் விசையின்றி வாழ்தல் பிழை

விரிவெல்லை இல்லாததொரு பெருங்கடல்

- எனப் பலவும் தோன்றுகையில் -

"சுத்த அயோக்கியர்கள்.  கொடுஞ்செயல்களுக்கு வேதாந்தஞ் செய்து விழுங்கச் சொல்கிறார்கள்"
"ஆமாம் ஆமாம்.  அன்றேல் அசுத்த அயோக்கியர்கள் ஆவோம்.  கொடுஞ்செயல்களுக்கு சித்தாந்தஞ் செய்து புரட்சி-போராட்டம்-தலைவன் என்று செய்து விழுங்கிச் செல்வோம்.

வேதாந்தமேனும் வருந்தவும் திருத்தவும்
பெருந்தவம் கருணை என்று தெய்வம் பொருந்தவும் வழியுண்டு
தன்னை விட்டு வெகுதூரம் சென்ற பின்னும்
தன்னை நோக்கித் திரும்பவோர் வழிமுண்டு
ஓர்த்துள்ளம் உள்ளது உணர்வோர்ப்படும் நெறியொன்றுண்டு
வான்மீகி-விசுவாமித்திரன் என்று வழித்துணையும் உண்டு 
ஆனாதினால் அமைதி கொள் மதியே
ஆம் அவ்வாறே

புஷ்கரனுக்கு தன் தவறு தெரிந்தே இருக்கிறது ஆனால் நடுவே நிறுத்திவிட, மாற்றம் கொள்ள அவன் எண்ணவில்லை, எல்லை வரை செல்கிறான்.  தீமைதான், கொடிது தான் தெரிந்தும் ஏன் நிறுத்திக் கொள்ள விளைவதில்லை? அதன் உளவியல் என்ன? "இதுகாறும் செய்து வந்தோம் இனி நிறுத்தினால் நல்லவர் என்று ஒருபோதும் நம்மை எண்ணப் போவதும் இல்லை, மேலும் அச்சுறுத்தியே வந்தோம் அந்த அச்சம் அகன்றால் நம்மை பழிதீர்க்க கருதுவர்" என்பதா? இனி கிடைக்கப் போகாத நன்றின் தரப்பு என்ற இடத்திற்காக திசை மாற்றி ஏன் செல்ல வேண்டும் எல்லைவரை சென்றபின் எதிர்விசை ஒன்று வந்து முடிக்கட்டும் என்ற ஒரு எண்ணமா?.  தன்னைத்தானே மன்னிக்க இயலாத முடியாத அளவு நெடுந்தொலைவு சென்ற பின் மற்றவரிடம் அதை எவ்வாறு எதிர்பார்க்க இயலும் ?.  இனி விளைவது, வேண்டுவது ஒன்று உண்டு என்றால் கொடும் தண்டனை மட்டுமே.  அது வெறும் மரணம் என்று அல்லாமல், தராசு தட்டினை ஓரளவேனும் சமன் செய்யும் விதமாக, பெரியதாக இருக்க வேண்டும் - வதம் என்று இருக்க வேண்டும்.  இறைவனே வந்து தம்மை வதைத்து அழிக்க வேண்டும் என்பது அரக்கரின் ஆசை போலும்.  உச்ச தண்டனை வேண்டும் என்று ஏங்கும் அத்தகைய மனதிற்கு உண்மையிலேயே மிக உச்ச தண்டனை அப்படியே தண்டிக்காமல் சும்மா விட்டு விடுவதுதான் என்று எண்ணுகிறேன்.  ஏனென்றால் எல்லா அயோக்கியனுமே அடிப்படையில் நல்லவன் தான்.

“நன்றோ தீதோ எல்லைக்குள் நிற்பவர்கள் எந்த முழுமையையும் அடைவதில்லை. ஆடுகளங்களுக்கு அப்பாலுள்ளதே மெய்மை. மீறிச்செல்வதே தவமெனப்படுவது. முற்றிலும் கடப்பதே வீடுபேறு”



அன்புடன்
விக்ரம்
கோவை

புஷ்கரனும் உத்தரனும்



அன்புள்ள ஜெ,

புஷ்கரனுக்கும் உத்திரனுக்கும் கிட்டதட்ட ஒரேமாதிரியான இளமைப்பருவம்தான் வாய்த்தது.
இருவருமே இளமையின் அறியாமையிலும், வேகத்திலும், பாவனையிலும் திளைக்கின்றனர்.
என் கல்லூரி நண்பண் புஷ்கரனைப் போலவே மாறியதைப் பார்த்திருக்கிறேன்.

நம் குழுமத்தில் புஷ்கரனில் கலியின் நிழல் படிந்ததாலும் உத்திரனுக்கு இந்திரனின் மைந்தர் துணையிருந்ததுமே அவர்களின் மாற்றத்தின் காரணம் என வாசித்தேன். 
உண்மையில் புஷ்கரன் தவறவிட்டது என்ன அல்லது உத்திரனைக் காத்தது என்ன?

கிரி

அன்புள்ள கிரி

புனைவுக்கு வெளியே நின்று நான் அதைச் சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன். பொதுவாக வாழ்க்கை என்பது எந்த அளவுக்கு சம்பந்தப்பட்ட மனிதரின் இயல்புகளால் ஆனதோ அதே அளவு வாய்ப்புகளாலும் ஆனது என தோன்றுகிறது

ஜெ

விழி திறப்பு (நீர்க்கோலம் - 86)



ஊரில் புதிதாக கோயில் கட்டும்போது அதில் சுதை சிற்பங்களை அமைப்பார்கள் . அது உருவாகி வருவதை அருகிருந்து பார்ப்பது சிறுவனாக இருக்கும்போது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சிமென்ட் கலவைகளால் சிறிய செங்கற்களை ஒட்டி ஒட்டி உருவாக்குவார்கள். பின்னர் அச்சிலைகளின் மேற்பகுதி வழவழப்பாக்கப்பட்ட பின்னர்தான் அவை ஏன்ன என்ன சிலைகள் என்று விளங்கும். அதன்பின் சிலைகளுக்கு வண்ணம் பூசுவார்கள். எல்லாம் முடிந்த பிறகும் ஒரே ஒரு வேலையை முடிக்காமல் வைத்திருப்பர்கள். சிலைகளின் விழிப்படலம் வெண்மையாக இருக்கும். அதில் இன்னும் கருவிழி வரையப்பட்டிருக்காது. கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஓரிரு நாட்கள் முன்புதான் விழிளை முழுமை செய்வார்கள். அதற்கு முன்பு வரை வெறும் பொம்மைகளாக இருந்த அவை விழி திறப்புக்குப் பிறகு தெய்வாம்சம் குடிகொன்ட வழிபாட்டுக்குரிய சிலைகளாக ஆகிவிடுகின்றன. எங்கள் கண் முன்பு உருவாகிவந்த வெறும் சிலைகள் கைகூப்பி வணங்கவேண்டியவையாக அந்த விழி திறப்பின் பின்னே மாறிவிடுகின்றன.


மனிதர்களில் சிலர் மக்களின் போற்றுதலுக்கு உரிய நபர்களாக உருவெடுக்கிறார்கள். கோடிக்கணக்கான மக்களில் ஒரு சிலர் மட்டும் எப்படி அந்த நிலைக்கு ஆளாகிறார்கள் என்பது யாராலும் சொல்ல முடியாது. அவர்கள் இருந்த சூழல் மட்டும்தான் காரணம் என்று கூற முடியாது. ஏனென்றால அதைப்போன்ற சூழலில் இருந்த மற்றவர்கள் அவரளவுக்கு சிறப்படைய முடியாமல் போவதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் தாம் சிறப்புற்ற துறையில் செல்வதற்கான சரியான தூண்டல் அல்லது வழிகாட்டல் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அது புறத்தே மட்டுமல்லாமல் அவர்கள் அகத்திற்குள்ளும் நடந்திருக்கும். தங்கள் தன்னறத்தை கண்டுகொள்வதற்கான அவர்களின் விழி திறக்கப்பட்டிருக்கும். அந்த விழிதிறப்பு ஒரு ஆசிரியரால் கொடுக்கப்படிருக்கலாம். அல்லது ஒரு நிகழ்வால் எற்படுத்தப்படிருக்கும். அந்நிகழ்வு சிலசமயம் பெரும் துன்பம் தந்த இழப்பாகக்கூட இருக்கலாம். பெரும் அச்சத்தை ஏற்படுத்திய ஒன்றாகவும் இருக்கலாம். அல்லது பெரும் ஐயத்தை ஏற்படுத்தியதாகவும் இருக்கலாம். அதற்கு முன் மற்றவர்களைப்போல் மிகச் சாதாரணமானவர்கள். இப்போது அவர்கள் தன் தன்னறத்தை கண்டுகொண்டு அதில் மேம்பட்டு சிறப்புறப்போகிறவர்கள். ஒரு விளக்கில் திரியும் எண்ணெயும் இருப்பதைப்போல ஒவ்வொருவருக்கான் தன்னறம் இருந்துகொண்டு இருக்கிறது, எதோ ஒரு தீக்குச்சியின் நெருப்பு அவ்விளக்கில் தீபத்தை ஏற்றிவிடுகிறது.

அவர்களின் சிறப்பை நாம் அறிய சில நேரம் ஆகலாம். ஆனால் அவர்களுக்கன மாறூதல் அந்த விழி திறப்பின் கணத்திலேயே நடந்துவிட்டிருக்கும். அந்த நேரம் அவர் தன்னறத்தை கண்டுகொண்டதற்கான கீதா முகூர்த்தம் எனச் சொல்லலாம். அந்நிகழ்வு சிலசமயம் வெகு சாதாரன நிகழ்வாக அவரறியாமலேயே நடந்திருக்கலாம். அவர்கள் கருத்தறியாத மழலைப்பருவத்தில்கூட நேர்ந்திருக்கலாம். இரமணருக்கு ஒரு நாளில் இறப்பைப்பற்றிய தீவிர சிந்தனையில் அந்த விழித்திறப்பை அடைந்தார். அவர் அடைந்த அனைத்து ஞானமும் அந்தக் கணத்திலேயே நடந்ததாக கூறுகிறார். அதன் பின் தான் பெரிய தத்துவ நூல்களில் கண்டதெல்லாம், அந்நிகழ்வின்போது தான் அடைந்த ஞானத்தை சரியென்று காட்டுவதாக இருந்தனவேயல்லாமல் தாம் அதற்கபுரம் புதிதாக எதையும அறிந்துகொள்ளவில்லை என அவர் கூறியிருக்கிறார் . கணித மேதை இராமானுஜன் போன்றவர்கள் தம் மேதமைக்கான விழிதிறப்பை இளைய வயதிலேயே அடைந்துவிட்டிருகிறார்கள். அவையெல்லாம் எப்படி ஏற்பட்டது என்று நமக்கு தெரியவில்லை.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் நமக்கான துறையில் நம்மைத் திருப்பி சரியான வழிகாட்டலைக் கொடுக்கக்கூடிய விழிதிறப்பை அடையாமலேயே போய்விடுகிறோம் என்று நினைக்கிறேன். அதனால் பெரும்பாலானோர் வெறும் பிறந்து இருந்து இறந்துபோகும் வெற்று மானிடர்களாக இருந்துவிடுகின்றனர். அவர்கள் எல்லாம் விழி திறக்கப்படாத சிலைகள், தீபமேற்றப்படாத விளக்குகள். பொருள் நிரப்பப்படாத வெற்று பாத்திரங்கள். ஆனால் அதிலொருவருக்கு ஒரு கணத்தில் விழி திறக்கப்படலாம். அவர் தன்னறத்தை அறிவதற்கான தீபம் ஏற்றப்படலாம், சட்டென்று அருமணிக்குவியல் போன்ற திற்ன்களால் நிரப்பட்டு பாத்திரம் நிரப்பப்படலாம். எப்போதாவது மிக அரிதாக அனைவரும் அறிய நடந்த அத்தகைய நிகழ்வு ஒன்றை வெண்முரசு நமக்கு காட்டுகிறது. அது உத்தரனின் விழி திறப்பு. அவன் தன் தன்னறத்தை அறிந்து கொள்ளும் நிகழ்வு. வெற்று பாத்திரமாக இருந்த தன்னை வீரத்தாலும் விவேகத்தாலும் நிரப்பிக்கொள்வது கண நேரத்தில் நடக்கிறது. ஒரு கணத்திற்கு முன் வரை பெரும்கோழையாக அச்சத்தில் நடுங்குபவனாக, சிறிதளவும் ஊக்கமில்லாதவனாக இருந்தவன், ஆனால் கண நேரத்தில் அவனுக்கு விழிதிறப்பு நேரிடுகிறது. அணிஅணியாக ஆயுதங்களோடும் கவசங்களோடு தனக்காக உயிர் கொடுத்து போர் புரிய கடியிருக்கும் போர் வீரர்களால் அவன் விழி திறக்கப்பட்டிருக்கலாம். அல்லது பிருகந்நளையென உருமாறி இருக்கும் அர்ச்சுனன் என்ற வீறுகொண்டு எரியும் வீர நெருப்பின் பொறி பட்டு அவன் அகத்தினுள் தீபம் ஏற்றப்பட்டிருக்கலாம். இப்போதும்கூட அவனுக்கு போதுமான பயிற்கிகள் இல்லாமல் இருக்கிறது. போதுமான அனுபவங்களை அவன் அடையவில்லை. இருப்பினும் அவன் பெரு வீரன் ஆவதற்கான விதை அவனுள் அக்கணத்தில் ஊன்றப்பட்டுவிட்டது. தன் அக விழி திறப்பைப்பற்றி உத்தரன் இவ்வாறு கூறுகிறான்.


“எப்போது நீங்கள் உங்களை அறியத்தொடங்கினீர்கள் என்று நான் கூறவா?” என்றாள் பிருகந்நளை. “படைநிரைகள் முன் தேரில் வந்து நின்றபோது.” உத்தரன் சிரித்து “ஆம், முதற்கணம் என்மேல் ஓர் எடைமிக்க பொருள் வீசப்பட்டது போலிருந்தது. கால்கள் நடுங்கலாயின. எண்ணங்களில்லாமல் நெஞ்சு நிலைத்திருந்தது. பின்னர் நிலம் வில்லென்றாகி என்னை வானோக்கி எய்தது” என்றான். “நான் அணிவகுத்து படைக்கலம் ஏந்தி நின்றிருக்கும் போர்ப்படைத்திரளை அதுவரைக்கும் கண்டதில்லை… அது வெறும் காட்சி அல்ல… எப்படி சொல்வேன்? நான் அறியவேண்டிய ஒரு முதல் நூலின் பக்கங்கள் முழுமையாகத் திறந்துகிடப்பதுபோல. ஒரே கணத்தில் நான் அதை வாசித்துவிட்டதுபோல.” அவனுக்கு மூச்சிரைத்தது. சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை என உணர்ந்தவன்போல “எப்படி சொல்வதென்று தெரியவில்லை… நாகத்தைக் கண்டால் புரவி சிலிர்க்குமே அதைப்போல ஒரு பதற்றம்… அப்போது விதையிலிருந்து கீறி எழுந்து ஒரே கணத்தில் மரமாக ஆனேன்” .
இத்தகைய விழித் திறப்பை தன் இளவயதிலேயே பெற்று இன்பமும் துன்பமுமாக பலவித அனுபவங்களைப்பெற்று, பயணங்களின் மூலம் பாரதப் பண்பாட்டை பயின்று, சிறந்த குருவை அடைந்து இந்திய ஞானங்களில் தேர்ந்து சிறந்திருக்கும் ஒரு எழுத்தாளரின் வழியே ஊற்றெடுத்து பொங்கிவருகிறது வெண்முரசு என்றப் பெருங்காவியம். அந்தப் பேரருவியின் கீழ் நின்று என் சின்னஞ்சிறு உள்ளங்கைகளில் ஏந்தி எடுத்து என் உள்ளத்தில் ஞானத்தை நிறைத்துக்கொள்ளப்பார்க்கிறேன் நான்.

தண்டபாணி துரைவேல்

Monday, August 28, 2017

நகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை?


அன்புள்ள எழுத்தாளருக்கு...

மாமலரின் இறுதி அத்தியாயத்தை இன்று மீண்டும் ஒருமுறை படிக்கும் போது, ஒன்று தோன்றியது. (இந்திரநீலமும் மாமலரும் மட்டுமே மீண்டும் மீண்டும் படிக்க இனிமை. மற்றவற்றைப் படிக்கையில் ஏனோ ஒரு துயரம் - அத்தனையும் அத்தனை பேரும் ரத்தக்கடலில் அல்லவா சென்று விழப் போகிறார்கள் - என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றி திடுக்கிட வைக்கும்.)

மூத்தோர் மூவருக்கும் தனித்தனி பயணங்கள் அமைந்தன அல்லது அமைத்துக் கொண்டனர்.

சகதேவன் சென்ற அகப்பயணம் ‘நீர்க்கோலத்தில்’ சொல்லப்படாவிடினும், அரிஷ்டநேமியின் மாற்றுரு அவன் என்பதால், நேமியின் பயணத்தை ‘காண்டீபத்தில்’ ஓரளவு அறிந்து கொண்டதால், இங்கே ஒப்பிட்டுக் கொள்ள முடிந்தது.

நகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை? அல்லது அறியாமல் எங்காவது தவற விட்டு விட்டேனா?

நன்றிகள்,
இரா.வசந்தகுமார்.



அன்புள்ள வசந்தகுமார்

உண்மையில் இதை இப்போது சொல்லமுடியாது. ஒருவேளை நகுலனுக்கும் சகதேவனுக்கும் வேறு நாவல்கள் இருக்கலாம். அவர்கள் வேறுவகையில் கண்டடையலாம்

ஜெ