Monday, December 7, 2020

ஒரு கணம்

 


அன்புள்ள ஜெ 

வணக்கம் 

அப்பா உடன் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துக்கொண்டு சிதம்பரம் வந்தேன்.  அப்பா என்னை இறக்கிவிட்ட இடம் கீழரதவீதியும், தெற்கு ரதவீதியும் சந்திக்கும் இடம். அப்பா “இதுதான் சிதம்பரம் நடராஜர் தேருலா வரும் ரதவீதி”  என்றார்கள். தெற்கு வீதியில் நின்று மேற்கேப்பார்க்கிறேன். இதுதான் சிதம்பரமா? காலுக்கு கீழே புழுதிமண், தலைக்குமேலே வெளுத்தவானம். சில பாத்திரக்கடைகள், வீடுகள். நடந்தும், வாகனத்திலும் சிலமனிதர்கள், வீதிகள் சந்திக்கும் மூலையில் ஒரு அரசமரம். தூரத்தில் நடராஜர் கோவில் தெற்கு கோபுரம்.  

இவ்வளவுதான் சிதம்பரமா? அரசமரத்திற்குகீழே ஒரு கல்மண்டபம். காவல் மண்டபமாக இருக்கலாம். காவல் அற்றுக்கிடந்தது. முத்துக்குடை முத்துசிவிகை தங்கத்தாளம் அடியார் குழாத்துடன் சின்னஞ்சிறுபாலகன் திருஞானசம்பந்தர் சின்னஞ்சிறுபாதம் சிவக்க நடந்தசிதம்பரம் இதுதானா? ஐயன்  நடராஜபெருமான்  வாமபாகத்தாளோடும் வளரிரு குழந்தையோடும் சண்டிகேசுவரர் சேவையோடும் வலம் வருவதற்கு  திருநாவுக்கரசபெருமான் உருண்டு தன்மேனியையே பாயாக விரித்தவீதி இதுதானே சிதம்பரத்திற்கு போகனும் சிதம்பரத்திற்கு போகனும் என்று சிதம்பரம்போவதையே தன்வாழ்நாளின் குறிக்கோளாக கொண்டு பக்தி என்னும் தகுதியால் தன்னையே ஓமகுண்டமாக்கிய நந்தனார் நடந்தவீதி இதுதானா? 

பாண்டிய மன்னனின் பெரும் அமைச்சனாக இருந்ததுபோதும்    பரமனை பாடுவதே போதும் என்று மாணிக்கவாசகர் மணிவாசகம்பாடி நடந்தவீதி இதுதானா? ஈசனுக்கு வானுயர  கோயில்  கட்டி பூமாலை சூட்டி புகழ்ந்தது போதாது என்று திருமுறைமாலை சூட்ட ராஜராஜசோழன் நால்வரோடும் நாடந்துவந்த வீதி இதுதானா? பெரியபுராணம்  பாடியதற்காக சேக்கிழார் பெருமானை அனபாய சோழன் யானைமேல் உட்காரவைத்து கவறிவீசி உலாவர வைத்தது இந்த சிதம்பரவீதியில்தானா? ஆணா? பெண்ணா? நீயா? நானா? என்று அன்னை காளி மாநடம்புரியும் தில்லை இதுதானா? புலியும் பாம்பும்  தேடியும் நாடியும் ஆடியும் பாடியும் திருநடம் கண்ட சிதம்பரம் இதுதானா? 

வைகுண்டம் விட்டு வந்த கோவிந்தன் ஆடல்கண்டு ஆனந்தசயனம் கொள்ளும் சிதம்பரம் இதுதானா? கையில் மாட்டிய ரப்பர் பாண்டை இழுத்து இழுத்து அடிக்கும்போது கைநரம்பு தெறிக்குமே அதுபோல் உள்ளுக்குள் ஒரு தெறிப்பு. அது சிதம்பரம்  இது சிதம்பரம்,  அப்படிப்பட்டது சிதம்பரம்  இப்படிப்பட்டது சிதம்பரம் என்று கதை கதையாக  உள்ளுக்குள் மாட்டப்பட்ட ரப்பர் பாண்டுகள் இழுத்து இழுத்து உள்ளத்தில் அடிக்கிறது. சிலமணித்துளிகள் காலசக்கரத்தில் சுழன்று நின்றபோது. இதுதான் சிதம்பரம், இவ்வளவுதான் சிதம்பரம் என்று தெளிவு வந்தது. காலுக்குகீழே புழுதி, தலைக்குமேலே வானம். சில கடைகள் சில வீடுகள் சிலமரங்கள் சில மனிதர்கள். அவ்வளவுதான் சிதம்பரம். எனக்கு சிதம்பரம், சிலருக்கு கங்கைகொண்ட சோழபுரம். சிலருக்கு காஞ்சி, சிலருக்கு மாமதுரை, சிலருக்கு புகார். சிலருக்கு விஜயபுரி. சிலருக்கு காசி. ஆதனுக்கு அஸ்தினாபுரி. கதைகளாக வரும் ஊர், கற்பனையாக வளர்கிறது. 

அந்த கதைகளின் வழியாக நாம் அதற்குள் பல்லாயிரம் முறை சென்று கற்பனையாக வாழ்ந்துவிடுகிறோம்.  கதைவேறு, கற்பனை வேறு, கதை நம்மை உள்ளுக்கு இழுக்கிறது. கற்பனை நம்மை உலகவெளியில் பறக்கவைக்கிறது.  இவை இரண்டிற்கும் அப்பாலோ அல்லது இப்பாலோ நிற்கும் நிஜம்வேறு. அதுதான் யதார்த்தம். நம் ஐம்புலன்களுக்கு உரியது. அதை அறிந்து அனுபமாக்கும்போது முழு தயிர்கலையத்தையும் கடைந்து துளி வெண்ணைய் எடுப்பதுபோல நிறைவை அளிக்கவில்லை. அந்த நிறைவின்மை ஏமாற்றத்தை தருகின்றது. அந்த நிறைவின்மையை தாங்கிக்கொள்ளமுடியுமா? என்ற கேள்விக்கு விடைதேடித்தான்  ஆதன் அஸ்தினாபுரி வந்தும் அதன் உள்ளே செல்லாமல் தவிக்கிறான்.  ஒரு சிறு மனப்போராட்டம்தான். அதைத்தாங்கிக்கொள்ள மனிதன் எத்தனை ஊசலாட்டம் ஆடவேண்டி உள்ளது என்பதை களிற்றியானை நிரை-08 அழகாக விளக்குகின்றது. 

ஆதன் போன்று, அழிசிப்போன்றவர்களுக்கு எந்த கதையும் கற்பனையும் வாழ்க்கையில் இல்லை. அதனால் குறிக்கோளும் தேடலும் இல்லை. குறிக்கோளும் தேடலும் வருவதால் ஏற்படும் அறிவுமுனைப்பு இல்லை.  அவர்கள் அந்த அந்த காலத்தில் அந்த அந்த சந்தர்ப்பங்களுக்கு தகுந்தபடி கிடைப்பதை கொண்டு வாழ்ந்துவிடுவார்கள்.  அவர்கள் சிறுவாழ்க்கைக்குள்  கிடைக்கும் சுகத்தையே பெரும் சுகமாக ஏற்றுகொள்ள தெளிவாக இருக்கிறார்கள். ஆதன்போன்றவர்கள்தான் சிக்கித்தவிக்கிறார்கள். எதிர்காலம் என்ன? என்ற பெரும்கேள்வி அவர்களை சுமையாக கூனவைக்கிறது. 

அனல்நதியாக எதிர்நின்று அக்கினி பிரவேசம் செய்ய சொல்கிறது. அதற்காக அவர்கள் அழிசி போன்று சிறுவாழ்க்கைக்குள் சிக்கிவிட மாட்டார்கள். அக்கினி பிரவேசம் செய்தே தன்னை நிறுவிப்பார்கள். கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது அழிசிகளுக்காக அல்ல ஆதன்போன்றவர்களுக்காகத்தான் வள்ளுவர் இந்த குறளை சொல்கிறார். “நான் எட்டாவது பாஸ்ண்ணே, நீங்கள் எஸ் எஸ் எல் சி பெயிலுண்ணே” என்று காமடிச்செய்யும் உலகம் இது. அஸ்தினபுரிவரை வந்துநகர் நுழையாமல் தவிக்கும் ஆதன் மனநிலையை அந்த காமெடியன்களுக்கு முன்நிற்கும் நிலை. களிற்றியானை நிரை-08 ஆதன் மனநிலையை அற்புதமாக படம்பிடித்து காட்டுகிறது. 

ஒவ்வொரு தேடலுக்கு முன்னும் நாமும் அப்படிதான் நிற்கிறோம். கானமுயல் எய்தஅம்பு ஏந்துவதா? யானைக்கு குறிவைக்கும் வேல் ஏந்துவதா? என்று நிற்கிறோம். முயல் எய்தால் வயிற்றுப்பசி போகும். யானையை வென்றால்தான் அரசனாக முடியும். அஸ்தினபுரி நகரை விளக்கும்போதே அசுரநகர்களைவிளக்கும் வன்மையில் கதை அதன் எதிர் துருவத்தை நெருங்கி  நுணுங்கி காட்சிப்படுத்துகின்றது. மூதாதையர்கள் தேவைக்குமேல் எதையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. அசுரர்கள் தங்கள் ஆணவத்திற்கு உரியதை உருவாக்கிக்கொண்டார்கள் என்பதை கதை தெளிவுப்படுத்தும் இடத்தில் மனம் அசைவற்று நின்று எழுகிறது. வாழ்க்கை என்பதே எண்ணங்களின் பருவடிவம். 

அதில் எதைகலக்குகின்றோம் என்பதில் அதன் வண்ணமும் சுவையும் எழுகின்றது. எண்ணங்களே வாழ்க்கையாக மாறுகிறது என்பதை உணர்ந்து அதில் அன்பு அருள் காதல் கருணை ஒழுக்கம் பண்பாடு பக்தி ஞானம் கலக்கும்போது உலகை அது தெய்வீகசோலையாக செய்கிறது. ஆனந்தஜோதி எழுந்து புவியை விடியவைக்கிறது. நல்லுயிர் தோன்றி புவியை கோகுலமாக்குகிறது.  புவியின் ஆயுள் ரேகையை நீளவைக்கிறது.  அதற்குமாறாக எண்ணங்களாக மாறும் வாழ்க்கையில் ஆணவம் கலக்கும்போது அந்த ஆணவக்கோட்டைகள் பூமியில் இருந்து தனது வேர்களை பிய்த்துக்கொண்டு   வானுக்கு எழுந்து வானை அடையமுடியாமல் விழுந்து நொறுங்கி பூமியில் இருந்த சுவடே   தெரியாமல் அழி்ந்துவிடுகிறது. அஸ்தினபுரி அரக்கர் நகர் அல்ல, மானிடநகர்  அது உணவுக்கலம்போல ஒழிந்து விண்ணோக்கி வாய் திறந்து இருக்கிறது. 

அற்புதம். ஆனந்தம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெருவும் ஒரு உருப்பாக இருக்கிறது அதில் சில தெருக்கள் முகமாக இருக்கிறது அதனால் அது அதன் அடையாளமாக ஆகிறது.  சில தெருக்கள் இதயமாக இருக்கிறது அதனால் அதன் ஆயுள் வளர்கிறது. பாண்டிச்சேரி நேருவீதியில் நின்றுக்கொண்டு இருந்தபோது பண்டிகை ஆடை எடுக்க அலைந்துக்கொண்டு இருந்த மக்களைப்பார்த்த பரவசத்தில் அருகில் இருந்த சித்தப்பாவிடம் “எல்லோரும் ஏதோ நேரத்தில் நிர்வாணமாக இருப்பவர்கள்தான்” என்றேன்.  சித்தப்பா ஒரு கணம் மௌனமாக என்னைப்பார்த்துவிட்டு வெடித்து சிரித்தார்கள். அது ரகசியம் அல்ல. ரகசியம்போல இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சித்தப்பா நண்பன்போல உள்ளம் ஒன்றி என்னை வைத்திருந்தார்கள் என்பதால்தான் அது வெளிப்பட்டது. 

களிற்றியானை நிரை-08 தன்னில் ஆழ்ந்து கதை மாந்தர்களை தன்னில் லயிக்கவிட்டதால் உண்மையை நேர்த்தியாக வெளியிடுகிறது. //ஆரியவர்த்தத்தின் குளம் நோக்கி ஓடைகள் எனப் பாயும் விந்து” என்றான் ஆதன். அக்கோணத்தில் முதியவர் எண்ணியிருக்கவில்லை. திகைப்புடன் ஆதனை பார்த்த பின் வாய்விட்டு நகைத்து “நன்று! நீங்கள் உங்கள் மைந்தர் பிறக்கும் நிலம் நோக்கி செல்கிறீர்கள்” என்ற பின் சூழ நோக்கி “எத்தனை ஆயிரம் பல்லாயிரம் பிறவா உயிர்கள். அவைதான் இவ்வுடல்களை ஊர்தியாகக் கொண்டு அங்கே சென்றுகொண்டிருக்கின்றன. தங்கள் இலக்கை நாடி பொறுமையிழந்து கொண்டிருக்கின்றன. பிரம்மத்தின் ஆணை” என்றார்.//-களிற்றியானை நிரை-08 மனம் ஒரு கணம்  மௌனத்தில் விளையாடும் மனசாட்சியானது.

 

அன்பும் நன்றியும்

ராமராஜன் மாணிக்கவேல்

 

ஒரு புரவி

 


அன்பின் ஜெ...


"லாடவளைவு தெரிய ஒற்றைமுன்னங்கால் தூக்கி நின்று ஒரு புரவி நீள்மூச்செறிந்தது."
 இது வெய்யோனில் வரும் ஒரு வாக்கியம். இதற்காகவே (மற்றும் ஏராளம் இருப்பினும்) , ஒரு குதிரிரையேற்றம் தெரிந்தவன் என்ற முறையில் தங்கள் பாதம் தொட்டு சென்னி சூடுகிறேன். வாழ்த்துங்கள். 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தங்கபாண்டியன்

தோல்வி


 அன்புள்ள ஜெயமோகன்,


சில பல நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் வெண்முரசைப் படித்தேன். "கர்ணனிடம் அனைத்து சிறப்புகளுடன் இணைந்து தோல்வி நோக்கிச் செல்லும் சரிவொன்று இருந்தது." என்ற வரிக்கு அப்புறம் படிக்கவே முடியவில்லை. ஒரு வாசகம் என்றால் திருவாசகம் என்பது இன்று தேய்வழக்காக மாறிவிட்டது, ஆனால் இது உண்மையிலேயே திருவாசகம் ஐயா!

வாழ்க்கை கடந்த சில வருஷங்களில் எப்படி எப்படியோ சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கழுத்து வரை இருக்கும் தண்ணீரில் முழுதாக முழுகாமல் இருக்கச் செய்யும் முயற்சிகள் மட்டுமே. மீள்கிறேன் என்று நினைத்துக் கொள்ளும்போதெல்லாம் மீண்டும் முழம் சறுக்கிவிடுகிறது. என்னிடமும் தோல்வி நோக்கிச் செல்லும் சரிவு இருக்கிறதோ என்று தோன்றுகிறது...

மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்...

அருண்மொழிக்கு என் அன்பு...

அன்புடன்
ஆர்வி

பிறழ் உறவு


                            


                 இனப்பெருக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள ஒன்றாகும். ஒருசெல் உயிரினங்கள் தன்னை தானே இரட்டிப்பு செய்துகொண்டு பெருகுகின்றன. பல தாவரங்கள் தன்னிலிருந்து மற்றொரு தாவரத்தை கிளைத்து வளரவிட்டு கொள்கின்றன. ஆனால் இத்தகைய இனப்பெருக்க ங்களில் ஒரு உயிர் அப்படியே மற்றொரு உயிராக பதிவு எடுக்கப்படுகிறது ஒன்றுக்கொன்று வேறுபாடுகள் இருப்பதில்லை அதன் பண்புகளில் எவ்வித முன்னேற்றமும் நிகழ்வதில்லை. ஆனால் இயற்கை சூழல் உயிர்களுக்கு இடையே பலத்த போட்டியை உருவாக்கி   வைத்திருக்கிறது.    காலம் செல்லச் செல்ல  போட்டி கடுமையாகி கொண்டே இருக்கிறது.  தன் வாழ்வை தக்கவைத்துக்கொள்ள அவை தன் பண்புகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாக உள்ளது.  
   
          தனித்தனியாக இரு உயிர்கள் வாழ்ந்து அனுபவித்து அதன்மூலம் மேம் படுத்திக் கொண்டிருக்கும் பண்புகளை  அடுத்த சந்ததிக்குக் கடத்த இரு உயிர்களில் இருந்து மற்றொரு உயிர் உருவாவது தேவையாகிறது. அப்படி ஒரு உயிர் உருவானால், அந்த இரு உயிர்களின் பண்புகளை அது கொண்டிருக்கும் அதன்மூலம் இயற்கைச் சூழலில் தன் இருப்பை  நீடித்து தக்கவைத்துக் கொள்வதற்கான அதிக வாய்ப்புகளைப்  பெரும். ஆகவே உயிரின பரிணாம வளர்ச்சியில் தாவரங்களில் அடுத்தகட்டமாக பூக்கள் தோன்றி விதைகள் உருவாகி அதன் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. தாவரங்கள் தம்  பூக்களில் மகரந்தம் மற்றும் சூலகம் என இருவேறு வகைகளை கொன்டிருக்கிறது. ஒரு தாவர இனத்தில் ஒரு தாவரத்தில்  இருக்கும் மலரிலிருந்து மகரந்தம் மற்றொரு தாவரத்தில் இருக்கும் மலரில் இருக்கும் சூலகத்தோடு சேர்ந்து உருவாகும் புதிய தாவரம் இவ்விரு தாவரங்களில் இருக்கும் பண்புகளை கொண்டு மேம்பட்டு இருக்கும். சில வகை தாவரங்களில் ஆண் தாவரம் பெண் தாவரம் என இரண்டாக பிரிந்து இருப்பதும் உண்டு.  ஆண் தாவரங்களில் பெண் மலர்கள் இருப்பதில்லை பெண் தாவரங்களில் ஆண் மலர்கள் பூப்பது இல்லை.   இதனால் ஒரே தாவரத்தின் மலரிலிருந்து மகரந்தம் அதில் இருக்கும் மற்றொரு மலரின் சூலகத்தில் இணைந்து விதை உருவாவது தவிர்க்கப்படுகிறது. 
 
         இவ்வேறுபாடு விலங்கினத்தில் முழுமையாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.   விலங்கினங்களில்  ஒவ்வொரு உயிரும் ஆண் விலங்கு  பெண் விலங்கு என இரு வகைகளாக பிரிக்கப் பட்டிருக்கின்றன. புதிய உயிர் ஒவ்வொன்றும் உறுதியாக இரு வெவ்வேறு உயிர்களின் இருந்து உருவாக்கப்படுவதால் அவை வெவ்வேறு உயிர்களின் பண்புகளை அது கொண்டிருக்கின்றது. அதன் மூலம் உயிர்களின் உடலமைப்பில் வாழ்வியல் முறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன.  இப்படி ஆண் பெண் என பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒரு தாய்க்கு பிறந்த குட்டிகள் பெரிதாக வேறுபடுவதில்லை. அவற்றுக்கிடையே மீண்டும் குட்டிகள் பிறக்குமானால் அவை புதிய பண்புகளை தம்மில் சேர்த்துக்கொள்ளுதல் என்ற காரணம் மீண்டும் அடிபட்டுப்போகிறது.  மேலும் தாய் தந்தைக்கு இருந்த உயிரியல் குறைபாடுகள் மேலும் தொடர அது வழி செய்து விடும்.  ஆகவே பெரும்பாலான  விலங்கினங்களில்  குட்டிகள் வளர்ந்தவுடன் தன் கூட்டத்தை விட்டு பிரிந்து விடுகின்றன. அல்லது ஆண் விலங்குகள் மட்டும்  தம் தாய் தந்தை இருக்கும்  குழுவை விட்டு விலகி தனித்து செல்வது பல  விலங்கினங்களில் நடக்கிறது. இப்படி நெருங்கிய உறவுகொண்ட விலங்கினங்களுக்கிடையே இனப்பெருக்கம் நடப்பது வெகுவாக குறைக்கப்படுகிறது. 

    மனித இனத்தில் எந்த ஒரு சமூக குழுக்களிலும் இப்படி இரத்த உறவு இருக்கும்  நெருங்கிய உறவுகளுக்கிடையே இனப்பெருக்கம் நிகழவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.  பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயும், சகோதர சகோதரிகளுக்கிடையேயும் முழுதுமாக தவிர்க்கப்பட வேண்டியதாக கிட்டத்தட்ட அனைத்து பண்பாடுகளும் கொண்டிருக்கின்றன.  இது  மனித உடலின் உயிரணுக்களில் எழுதப்பட்டிருக்கும் பண்புகளில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால்  இது மனித ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.  மனிதர்களில் இத்தகைய உறவுகளுக்கிடையே இனக் கவர்ச்சி ஏற்படுவதற்கான  மன விலக்கம் பெரிதாக இருக்கிறது. 

      மேலும் மனிதன் குடும்பமாக குழுவாக இணைந்து வாழ்பவன். அதே நேரத்தில் தான் பாடுபட்டு உழைத்து அடைந்ததை  முதன்மையாக பகிர்ந்து கொள்ள வேண்டியது தன் உதிரத்தில் உதித்த பிள்ளைகளை என சுயநலம் கொண்டவன். ஆகவே தன் இணைக்கு பிறக்கும் பிள்ளை தன் உதிரத்தில் உதித்தது தான் என உறுதியை அவன் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அதன் காரணமாக அவன் ஆண்-பெண் உறவுகளை மிகவும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன் ஆக உள்ளான். உலகெங்கும் பரவியிருக்கும் மனித சமூகத்தின் எந்தப் பிரிவிலும் ஆண் பெண் இடையே இல்லறம் தாண்டிய உறவு இருப்பது எதிர்க்கப்படுகிறது. அதன் காரணமாக ஆண்களும் பெண்களும் பழகுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணையும் ஆணையும் சமூகம் மிகக்கவனமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இரத்த உறவு இல்லாமலும்  கணவன் மனைவி என்ற உறவு முறை இல்லாமலும் இருக்கும்  ஆணும் பெண்ணும், ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஒரு வீட்டுக்குள்ளேயே  இருக்க வேண்டிய அவசியம் நேரிட்டிருக்கிறது.    அத்தகைய உறவுகளுக்கிடையே உடலுறவு மிகக்கவனமாக தவிர்க்கப்படுகிறது.  அதற்கான மனப்பயிற்சி ஒவ்வொரு மனிதருக்கும் சிறுவயதிலிருந்தே அளிக்கப்பட்டிருக்கிறது. 

   ஆனால் இயற்கையில் பிறழ்வுகள் என்பது எப்பொழுதும் நடைபெறுவதே.  ஒரு நிகழ்வு நடப்பதற்கான  நிகழ்தகவு மதிப்பு மிகக் குறைவாக இருக்கலாம்.   ஆனால் அது பூஜ்யமாக இல்லாதவரை அது நடப்பதற்கான சாத்தியம் எப்போதும் இருக்கிறது. ஆகவே மனித உறவுகளில் இத்தகைய முறை மீறிய உடல் உறவுகள் அரிதிலும் அரிதாக இருந்தாலும் அவை நிகழ்ந்திருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் மனித சமூகம் இதை வெளிப்படையாக பேசுவதில்லை இதன் விளைவுகளை வெளிப்படையாக வெளியே தெரிய விடுவதில்லை.  இப்படி நிகழ்ந்த பிறழ் உறவுகள் மந்தனமாக வெளியார் பார்வைக்கு வராமல் கவனமாக கையாளப்படுகின்றன, அதே நேரத்தில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுகின்றன.     இதை அறியவந்த நெருங்கிய சுற்றம் வெளிப்படையாக என்றும் விவாதிப்பதில்லை.  இப்படிப்பட்ட நிகழ்வை  மிகக் கெட்ட கனவாக கருதி அது மறக்க விழைகிறது.  இது பொது சமூகத்தால் மிகவும் தவிர்க்கப்பட வேண்டிய பேச்சாக இருக்கின்றது.  சீரிய இலக்கியங்களில் மிகக்குறைவாகவே பிறழ் உறவுகள்  பதியப்பட்டு இருக்கின்றன. 

    வெண்முரசு அனைத்துவித அரசியல், உளவியல்,  தத்துவ,  சமூக,  சிக்கல்களை தன்னுள் நிகழ்த்தி பரிசோதித்துப் பார்க்கிறது.   பிறழ் உறவுச் சிக்கல் ஒன்றை மிக நுண்மையாக சொல்லிச் செல்கிறது. அது அர்ஜுனன்   உத்தரை அபிமன்யு ஆகியோருக்கு இடையேயான உறவு ஆகும்.  இந்த உறவு பற்றி வெண்முரசு வாசகர்கள் இதுவரை அதிகம் எழுதவில்லை.  ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் மட்டுமே பேசிக்கொள்கின்றனர்.  ஆனால் இலக்கியம் வாசகன் உடன் மிகவும் அந்தரங்கமாக பேசுவது. அது வாசகனிடம் எதை வேண்டுமானாலும் பேசலாம்.  அதன் மூலம் அது என்ன உணர்த்த வருகிறது என்பதுதான்  முக்கியமானது.     எனக்கு விளங்கிய வகையில் அர்ஜுனன் உத்தரைக்கு இடையேயான  உடல்உறவு  அர்ஜுனனே அறியாமல் அவன்  உள மயக்கத்தில் இருக்கும்போது  நிகழ்ந்த ஒன்று.  அவன் தன் மகன் அபிமன்யுவிற்கு உத்தரையை மணம் முடித்து வைக்கையில் இந்நிகழ்வை அறிந்திருக்க மாட்டான் என்று எனக்குத் தோன்றுகிறது.  உத்தரைக்கு இத்திருமணத்தில் இருந்த விலக்கத்தைக்கொண்டு கண்ணன் இதை பின்னர் ஊகித்து இருக்கலாம்.   அதற்கு  பின்னர் திரௌபதி யூகித்து இருக்கிறாள்.  அபிமன்யு உடனான  உத்தரையின் திருமணம் தான் ஏற்கெனவே நடந்த இவ்வுறவை பிறழ் உறவென ஆக்கிவிடுகிறது. அல்லது அபிமன்யுவிற்கும் உத்தரைக்கும் கணவன் மனைவியென  வாழாது போனதால் அப்படி இல்லை என்றும் சொல்லலாம் என்றும்  தோன்றுகிறது.  ஆனால் அபிமன்யுவின் மனைவி என்றே உத்தரை சமூகத்தால்  கருதப்படுவதால் சமூக இதை பிறழ் உறவு என்றே சொல்லும். 

   எப்படி இருப்பினும் இந்தப் பிறழ் உறவு ஒரு சிலர் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தாலும் தொடர்புடையவர்களுக்கு பெரிதாக  உளச்சிக்கலை உருவாக்குகிறது.  அபிமன்யுவை தன் பாதுகாப்பை அலட்சியம் செய்து போரில் மிகவும் அதீத நிலைப்பாட்டை எடுக்க வைத்து அவன் இறப்பதற்கு காரணமாகிறது. அவனுடைய தாய் சுபத்திரைக்கு அர்ஜுனன் மேலும் உத்தரை மேலும் பெரும் மனக்கசப்பை கொள்ள வைக்கிறது. உத்தரைக்கு  அவள் உளத்தை பேதலிக்கவைத்து, அவள் உடல் நலத்தை சீரழித்து, அவள்  இறப்பிற்கு வித்திடுகிறது. 

     தனிமனித சுதந்திரத்திற்காக  சமூக நெறிகளை, பண்பாட்டு மரபுகளை மீறலாம் எனக் கூறுபவர்கள் மிகுந்துவிட்டனர்.  ஆனால் அந்த மீறல்கள் அவருக்கோ மற்றவருக்கோ சமூக இணக்கத்திற்கோ கேடு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.  பிறழ் உறவுகள் அதில் ஈடுபட்டவர்களுக்கும் அவருக்கு தொடர்புடைய சுற்றத்துக்கும், சமூகத்திற்கும் பெரிய அளவில் சிக்கல்களை உருவாக்குவதால் அவை முற்றிலுமாக தவிக்கப்படவேண்டியவையே என வெண்முரசு இதன் மூலம் உறுதிப்படுத்துகிறது என்று நான் கருதுகிறேன்.

த.துரைவேல்

அன்னை திரௌபதி



 

அன்புள்ள ஜெ வணக்கம்.

 

“சென்று சொல்க அரசரிடம்! நான் அஸ்தினபுரிக்கு வருகிறேன்” அன்னை திரௌபதி ஏன் இத்தனை நீளமாக பேசுகிறாள்?

 

ஒரு சொல், ஒரு குறிப்பு, ஒரு ரசம் அங்கு போதும்போல் இருந்தது. 

 

ஏன் இப்படி சொல்கின்றேன்?  அன்னையெழுகைக்குள் வடிக்கப்படும் திரௌபதி சித்திரம் மாபெரும் உலகோவியமாக எழுந்து நிற்கிறது. வாழ்க்கையின் தரியில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் உணர்ச்சிகளின் நுண்ணுணர்வுகளின் திரண்ட வடிவாக திரௌபதி எழுந்து வந்து நிற்கிறாள். 

 

கதையில் திரௌபதியிடம் மாபெரும் ஒரு உளப்பிரிவு துறவு பாசவிலகள் தோன்றி  திரௌபதியை கற்சிலையாக்குகிறது.  திரௌபதியை தனிமையில் கொண்டு செல்லும் வாழ்க்கையின் பொருளின்மையை உணர்த்தும் மனஉணர்ச்சிகளை அணிசெதுக்கென செய்து செய்து பெரும்வாழ்வின்  மௌனநாடகத்தில்  திளொபதியை உணர்ச்சி குவியலாக கட்டிவைக்கிறீர்கள். 

 

திரௌபதி முன் சொல்லாடும் தருமனின் மாபெரும் அறவோன் என்ற சித்திரம் உடைந்துவிழுந்து நுண்துகளாகிறது. திரௌபதி தருமனை தன்கால்பற்றி மகவென்று ஏற்றுக்கொள் என்ற நிலைக்கு தள்ளியவள் திரும்வி வருவாளா? என்ற ஏக்கத்தை எற்படுத்துகிறது.

 

திரௌபதி திரும்பி வரவேண்டும் என்றால் வாழ்வின் நீட்சியில் அரசின் அலையில்  உலகின் பெருவௌயில் உள்ளத்தின் நுண்வெளியில் அவள் எதை கண்டடையவேண்டும் என்று தேடி சென்று தொட்டு உள்ளீர்கள். அந்த நிலையில் கதை சென்று சேரும் இடம் மாபெரும் கண்டடைதல் தருணம். பரிட்சித்துக்காக என்று உச்சிபுள்ளியை தொடவைத்தீர்கள்.

 

திரௌபதியை நுண்அரசியல்வாதி, மானிட உள்ளங்களை தாயமென உருட்டி விளையாடக்கூடியவள் உலகத்தாய் என்று உயர்த்துகின்றீர்கள். அவள் ஆளுமையை யுயத்ஸு நினைவுகளின் வழியாக அடுக்கி அடுக்கி காட்டி உலகலாவிய ஓவியத்தை வரைந்துவிட்டீர்கள்.

 

//இரவின் நிறம்கொண்டவளே, உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா? நீ அவற்றைச் சூடிய முடிவிலியா என்ன? அன்னையே, நீ கரந்துள்ள மெய்மைகள் என்ன?” அந்த வரிகள் ஒரு மானுடப் பெண்ணைப் பற்றியவை என்று அவனால் எண்ண முடியவில்லை//

 

இத்தனை பெரிய சித்திரம் அன்னை திரௌபதிக்கு மாமகுடமாக அமைகிறது.  தழிழ் உலகு உள்ளவரை மாட்சிமையுடன் வண்ணம் செழிக்க வளர்ந்தோங்கும் //இரவின் நிறம்கொண்டவளே, உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா?// எல்லா கதிரவனும் அவளுக்கு விண்மீன்கள் மட்டும்தான். ஆகா..ஆகா..உலத்தாய் என்பது இதுதானா? இவளா, கர்ணனுக்கு ஏங்கி இருப்பாள்? இந்த வார்த்தையோடு தருமனின் இழிசொல் சேரும்போது அவன் எத்தனை பெரிய பாதாளத்தில் விழுந்தவன் ஆகிறான். உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா? இந்த ஒருவரியை வைத்துக்கொண்டு சாக்தர்கள் எத்தனை பெரிய உரையை எழுதி எழுதி ஆனந்தப்படமுடியும்.

 

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள-என்றுதான் வள்ளுவர் சொல்கிறார். யுயுத்ஸு அன்னை  திரௌபதி திருக்குறளையும் தாண்டிச்செல்கிறாள் என்று காட்டுகின்றான். அவள் முன் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான் அவளை அணுகும் வழி என்று சிறப்பாக கண்டு நிறைவடைகிறான். குலத்தால் வாழ்க்கையால் உடையால் சொல்லால்  நிறையாதவன் நிறையும் அற்புத தருணம்.

 

.

பகவான் யோகி ராம்சுரத்குமார் அன்னை ஸ்ரீஅமிர்தானந்தமயி திருவண்ணாமலை வந்தபோது காளியை தரிசித்தேன், தரிசியுங்கள் என்கிறார். என் உள்ளத்தில் அப்பாவால் அன்னை அமிர்தானந்தமயி கண்ணனாகவே இருந்தார். யோகி ராம்சுரத்குமாரின் வார்த்தைகளை வாசித்து முடித்தபோது கண்ணனே காளியாக மாறும் ஒரு கணம் உள்ளத்தில் எழுந்து வந்தது. யுயுத்ஸு கண்ணனுக்கு நிகராக திரௌபதியை வைக்கும் தருணத்தில் கண்ணனே திரௌபதியாக, திரௌபதியே கண்ணனாக உள்ளத்தில் தேரான்றும் கணத்தை வெண்முரசு எழுப்பியது.

 

எத்தனை பெரிய உளவியல், எத்தனை பெரிய நுண்ணுணர்வுகள் செறிந்த இந்த அன்னையெழுகை அத்தியாயத்தில் அன்னை திரௌபதி நீளமாக பேசியது நாம் பூமியில்தான் இருக்கிறோம். திரௌபதி மானிடபெண்தான் என்பபோல் காட்டியது. அதனால்தான் அந்த கேள்வியை எழுப்பினேன்.

தெய்வமாக இருந்தாலும் அன்னையாக ஆகும்போது அவள் மண்மீது நடப்பவள்தான்.

 

அன்னையெழுகையில் திரௌபதி உலகோவியம்.

 

அன்பும் நன்றியும்.

ராமராஜன் மாணிக்கவேல்.

Friday, October 30, 2020

தேவப்பிரயாகை

 அன்புநிறை ஜெ,



இன்று ஒரு பயணக்குழுமத்தில் தேவப்பிரயாகையின் இந்த பொற்கணத்தின் புகைப்படத்தை (இணைத்திருக்கிறேன்) ஒன்றைக் காண நேர்ந்தது. 

"சீதை எனப்பெயர் கொண்ட குளிரன்னை இங்கே துருவனுக்குக் கீழே மண்ணில் இறங்கினாள். வெண்பனிப் பெருவெளியாக ஆயிரம் மலைகளை மூடி விரிந்து கிடந்த அன்னையின் ஒளியைக் கண்டு சூரியன் விண்ணகத்தில் திகைத்து நின்றான். " (பிரயாகை-4)

அப்படி அவன் திகைத்து நின்ற தருணம் போலும் இது.

இந்த அத்தியாயத்தை கங்கையின் வினைவழிச்சுழலில் தன்னைத் தொலையாதிருக்க வழி கோருவதை கணக்கற்ற முறை வாசித்திருப்பேன். அதையே எனக்கு அருளப்பட்ட கேள்வியாகவும் பதிலாகவும் அகம் உணர்ந்திருக்கிறேன்.

“எந்தையே நான் நதி, பெண், அன்னை. ஒருகணமும் ஒரு நிலையிலும் நிலைகொள்ள என்னால் இயலாது. என் திசைகளை நான் தேர்வதில்லை. நான் செல்லும் இடமே என் வடிவும் வழியுமாகிறது. என்னை நோக்கி வரும் எதையும் இருகரம் விரித்து எதிர்கொண்டு அணைத்து அள்ளிக்கொள்வேன். என் கைகள் தொடும் தொலைவில் வரும் அத்தனை வேர்களுக்கும் வாய்களுக்கும் அமுதாவேன். எங்கும் எதிலும் பேதமென ஏதுமில்லை எனக்கு. இங்கிருந்து இறங்கும் நான் என்னாவேன் என்று அறியேன். என் வினைவழிச் சுழலில் எங்கு இருப்பேன் என்றறியேன். என்னை இழந்துகொண்டே செல்லும் அப்பெரும்பயணத்தின் இறுதியில் எப்படி நான் இங்கு மீள்வேன்?”

ஒவ்வொரு முறையும் இவ்வத்தியாயத்தின் ஒவ்வொரு வரியும் புதிதென ஒளி கொள்ளும். இன்று காட்சியென இது முழுதுள்ளத்தை ஆட்கொண்டது.

'பெருநிலை' என்ற மிகப் பொருத்தமான பெயர் கொண்ட இப்பகுதியை எழுதும்போது மனதளவில் எங்கு வாழ்ந்தீர்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.


வணக்கங்களுடன்,
சுபா