ஆசிரியருக்கு ,
வெண் முரசு மீது எனக்கு உள்ள முதன்மையான எதிர்மறை விமர்சனம் , இதில் உள்ள அதிகார அடுக்கு (hierarchy) ஒப்புக் கொள்ளும் படியாக இல்லை என்பதே. நாளுக்குத் தக , ஆளுக்குத் தக , சூழலுக்குத் தக ஆள் ஆளுக்கு உத்தரவிடுகிறார்கள். அப்போதெல்லாம் 'one bad general is better than two good generals' பழ மொழியை நினைத்துக் கொள்வேன்.
வெண் முரசில் தனி மனிதர்களுக்கு இருக்கும் ஒரு அன்பு அடுக்கு அதாவது திருதிராஷ்ட்ரன் காந்தாரியிடம் முதலில் விதுரன் பிறகு தான் நீ என்பது , துரியன் பலராமன், தந்தை , தம்பிகள் /கர்ணன் பிறகே பானுமதி என கொள்வது , கிருஷ்ணனுக்கு முதலில் அர்ஜுனன் பிறகே பிற பாண்டவர்கள் இப்படி .
ஆனால் இத்தகைய தெளிவான அடுக்கு நாடாளும் அலுவல்களில் இல்லை. போர்காலங்களில் யார் சொல் முதன்மையானது என்கிற தெளிவில்லை. காம்பில்ய போரில் திரௌபதி படகுகளை எரிக்க ஆணையிடுகிறாள், பெண்கேட்க அமைச்சர்கள் தூது செல்கிறார்கள், இன்னும் பட்டத்து அரசராகாமல் துரியன் திருதிராஷ் டிரன் மற்றும் விதுரருக்குத் தெரியாமல் பானுமதியை கவர்ந்து வர படையுடன் செல்கிறான் படை அவனுக்கு கட்டுப் படுகிறது, போர்களில் ஒரே சமயத்தில் துரியனும் கர்ணனும் படையை நடத்துகிறார்கள்.
இதற்கு மத்தியில் பீஷ்மர் - ஹச்தினாபுரியில் இவர் தான் தலையாய அதிகாரம் படைத்தவர் , ஆனால் அவர் அறியாமலும் அனுமதியின்றியும் முக்கிய முடிவுகள் எடுக்கப் படும், சில சமயம் அவர் கலந்து ஆலோசிக்கப் படுவார். மேலும் குடிச்சபைகள் , குலத் தலைவர்கள் ஆகியோர்களின் அதிகாரம்.
காந்தாரத்தில் சகுனி இளையவன் என்றாலும் அவனே அதிகாரம் மிக்கவன். மூத்தவன் அரசனுக்கு அடுத்தவன் என்கிற நிலையும் இங்கு கிடையாது.
இப்படி வெண் முரசில் வருகிற அரசியல் அதிகார அடுக்கு என்பது முரண்பட்டதாகவும் , நிலையற்றடாகவும் உள்ளது . நான் இங்கு Legislature- Administration-Judiciary யை எதிர்பார்க்க வில்லை. ஆனால் இவ்வளவு முறைமைகள் அறசூழ்தல்கள் நிகழும் நிலத்தில் அதன் அதிகார ஏணி குலைந்தே உள்ளது . விளக்கம் தேவை .
கிருஷ்ணன்.