அன்புள்ள திரு.ஜெ
வணக்கம்.
காந்தாரி என்னும் ராணித்தேனீயைச்சுற்றி நிறைந்த மருமகள் என்னும் தேனிக்கூட்டம். ஒன்றின்மீது
ஒன்று என நெருங்சி இணைந்து இரண்டில்லாமல் ஒன்றென தெரியும் ஒற்றைத்தேன்கூடு. பார்க்கும்போது உள்ளம்
பொங்குகின்றது. காந்தாரிதான் எத்தனைக்கொடுத்துவைத்தவள்.
வீட்டு வாசலில்
இரண்டு பெரிய பானையில் சோறும், பெரிய சட்டியில் குழம்பும் வைத்துக்கொண்டு ஆயாள்(அம்மாவின்
அம்மா) பரிமாற நாங்கள் (பேரபிள்ளைகள் மட்டும்) சுற்றி உட்கார்ந்து சாப்பிடும்போது பார்த்தால்
பெரிய படையல் நடக்கின்றது என்றே சொல்வார்கள். அது எங்கள் குடும்பத்தில் நித்தம் நடக்கும்
ஒரு எளிய சம்பவம். புதிதாக வரும் சிலர் கண்ணுபட்டுவிடப்போகின்றது
அண்ணி என்று ஆயாவிடம் சொல்வார்கள்.
”கண்ணு
என்னப்பா
கண்ணு, படைத்தவன் பார்த்துகிட்டு இருக்காம்ப்பா” என்று ஆயா சொல்லும். ஆயா
எங்களுக்கும் சுத்திப்போடவில்லை, நாங்களும் ஆயாவுக்கு சுத்திப்போடவில்லை.
ஜெ இன்று காந்தாரியை படைத்திருக்கும் அற்புதம் பார்த்து இன்றைக்கு
காந்தாரிக்கு சுத்திப்போடனுமுன்னு தோணுது.
“பக்கத்துவீட்டில்
அத்தனை இருக்கு அது உனக்கு தெரியவி்ல்லையா? ஒண்ணே ஒண்ணு அதை எடுத்துகிட்டு வந்துட்டியே“
என்று ஒரே ஒரு பிள்ளை பெத்தவள் அதை பரிக்கொடுத்த துக்கம் தாங்காமல் எமலோகம் சென்று
எமனிடம் சண்டைப்போட்டாளாம். எமன் அவளை சமாளிக்க ஒரு வழி செய்தானாம். எமலோகத்தில் இருந்த
வாழைத்தோப்பில் இருந்து ஒரு வாழைக்காய் பறித்து வரசொன்னானாம். இவளும் சென்று வாழைத்தோப்பை
பார்த்து இருக்கிறாள். ஒவ்வொரு தாரிலும் நூற்றுக்கணக்கான காய்கள். ஒவ்வொரு மரமா தேடித்தேடி
கடைசியில் ஒரு மரத்தில் ஒரே ஒரு சீப்பு, அதிலும் ஒரே ஒரு காய். பிய்த்துவந்து எமனிடம்
தந்து இருக்கிறாள். ஏன் இத்தனை நேரம் என்று எமன் கேட்க? ஒவ்வொரு தாரும் நூத்துக்கணக்கான
காயால் நிறைந்து இருக்கு பறிக்க மனசு வரவில்லை அதான் தேடி தேடி ஒரே ஒரு காய் இருந்த மரத்தில்
இருந்து பரித்து வந்தேன் என்றாளாம். எமன் சிரித்தானாம்.
காந்தாரியைப்பார்த்தாள்
இந்த
எமனுக்கு எப்படி இருக்கும்? எமனை அழவைக்கும்
அன்னையானவள் காந்தாரி. காய்த்து தொங்கும் பலாமரத்தைப்பார்க்கையில்,
முந்திரி மரங்களைப்பார்க்கையில்
மரம் மறைந்து அன்னைகள் புன்னகைக்கிறார்கள். அன்னைகளால் அன்னையாகி நிற்கும்
காந்தாரியை
பார்க்கையில் வானத்து அன்னை பெரியநாயகி எத்தனை மகிழ்வாள். காந்தாரிகள் நூறு
பிள்ளைகளைப்
பெற்றார்கள் என்று பார்த்தபோது நிறையாத மனம் இன்று மருமகள்களால் நிறையும்
போது நிறைகின்றது
ஜெ. பிள்ளைகளால் நிறைந்தவர், பேரப்பிள்ளைகளால் நிறைந்தவர்கள் என்ற
பிம்பங்கள் உருவாக்கும்
உயரத்தைவிட, மருமகள்களால் நிறைந்தவள் காந்தாரி என்னும் இந்த பிம்பம் நெஞ்சை
மலர்ச்செண்டால்
திசையெட்டிலிருந்தும் அடிக்கிறது. பாலாறு பொங்கி எழுந்து வந்து
இழுத்துப்போகும் பரவசம். குந்தி வந்து இந்த ஆனந்தகோலத்தைப் பார்க்கவேண்டும்
என்று நினைக்கும் காந்தாரி மனம் அவள் வந்து பார்க்கவேண்டாம் என்று
நினைக்கும் இடத்தில் நெஞ்சில் அறைகின்றாள். நானும் எளியப்பெண் என்று
காட்டிச்செல்கின்றாள். ஐந்துமகனுக்கு ஒரு மருமகளைப்பெற்றவளும், நூறு
மகனுக்கு நூறு மருமகள் பெற்றவளும், பொறாமையின் மையத்தை உணரும் தருணம்
அற்புதம்.
அம்மா அடிக்கடி
சொல்லும் ஒரு பழமொழி “ஒன்றுப்பெற்றால் உழக்கு செல்லம், பத்து பெற்றால் பதக்கு செல்லம்”
காந்தாரி நூறுப்பெற்றவள்.
ஜெ காந்தாரிக்கு சுத்திப்போடுங்கள்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.