எனக்கென்னமோ கர்ணன் பிறப்பு ரகசியம் குந்தியை தவிர அஸ்தினாபுரியில் பீஷ்மருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். விதுரருக்குக் கூட தெரிந்திருக்காது. ஏனென்றால் இந்த ரகசியம் பாண்டவர்களுக்கு உண்மையென வெளியாகும் என்றால் கதை முழுதுமாக மாறிவிடும். துரியோதனனுக்கு தெரிந்தால் கர்ணனின் உடன்பிறப்புகள் என பாண்டவர்களை ஏற்றுக்கொண்டுவிடுவான். ஆகவே துரியோதனனுக்கும், பாண்டவர்களுக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமானால் இது கண்டிப்பாக ஊரறிந்த ரகசியமாக இருந்திருக்காது. இந்த ரகசியம் காப்பாற்றப்பட வெகு சிலர் மட்டுமே இந்த உண்மை தெரிந்தவர்களாக இருக்கமுடியும். அதுவும் குந்தியின் நலன் நாடுபவர்களாக இருக்க வேண்டும். ஆகவே என் கணிப்பு: பீஷ்மர், குந்தியின் சகோதரரான வசுதேவர், அவர்மூலம் கண்ணன் ஆகியோருக்கு மட்டுமே இவ்வுண்மை தெரிந்ததாக இருந்திருக்கும்.
மேலும் குந்தி அவ்வப்போது கர்ணனைப்பற்றி வெளிப்படையாக விசாரிப்பதும் கவலைபடுதலும் இந்த ரகசியம் வெகுவாகக் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்ற பதட்டம் அவளிடம் இருக்கிறது. ஆனாலும் தேர்ந்த ஒற்றர் படையை கொண்டிருக்கும் அவள் இந்த ரகசியத்தை காப்பாற்ற தகுந்த முன்னேற்பாடுகள் செய்திருப்பாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பீமன் இள வயதில் கர்ணன் மேல் காட்டும் கோபத்திற்கு காரணம் அவனுக்கு தோன்றும் இனம் தெரியாத ஒரு சந்தேகம்தான். அது உண்மையாய் இருந்துவிடக்கூடாது என்ற பயம் என்றுகூட சொல்லலாம். அதுவே அவனுக்கு உண்மையென தெரிந்திருந்தால் அவனுடைய நடவடிக்கை முற்றிலும் மாறானதாக இருந்திருக்கும். கதை இப்படி வளர்ந்திருக்காது. ஆகவே வேறு ஒரு சிலருக்கு சிறிதாக சந்தேகம் இருந்தாலும் அது உறுதிப்படாததாக காலத்தில் மறக்கப்பட்டிருக்கும்.
தண்டபாணி துரைவேல்