Tuesday, April 14, 2015

குருகு



அன்புள்ள ஜெயமோகன்,

வெண்முரசில் மனிதர்களின் அக ஆழத்தின் வெளிப்பாடாகப் பறவைகள் வருவது பல இடங்களில் நாம் காண்பது. கம்சனின் கண்முன் நீலக்குருவி வருவதும், அர்ஜுனன் கண்ணனை முதல்முறையாகக் காண்பதற்குமுன் கேட்கும் பறவைகளின் ஒலியும், கிருஷ்ணன் "புரிந்துகொள்ளும்" வஜ்ரமுகியும், இன்னும் பலவும் இதற்கான உதாரணங்களாகச் சுட்டலாம். இன்றைய பகுதியில் வரும் பகுளத்தையும் அவ்வாறு வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

துரியோதனின் அகம் காப்பியம் முழுக்கக் கரும்பாறையாகவே காட்டப்படுகிறது. இருளில் அசையாமல் அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கான பறவைகள் போலவே இருக்கும் அவன் அகம். பானுமதியைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே அவன் தன் அகத்தை மேலும் கூர்ந்து நோக்குகிறான். அப்போது அவனையும் அறியாமல் முளைக்கிறது அந்த வெண்பறவை. மிகச்சிறிய இடத்தை ஆக்கிர‌மித்திருக்கும் பறவை, அதாவது மலரின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி அளவு மட்டும். எத்தனை வேட்டை நாய்கள் (கௌரவர்கள்?) அருகிலிருந்தாலும் அதனால் புதரின் ஓரத்தில் (அந்தப்புர இருளில்) யாரும் உணராமல் அமர்ந்திருக்க முடியும். அவள் உருவமும் குருகின் உருவமாகவே காட்டப்படுகிறது. "குருகும் உண்டு தன் பள்ளியறை ஞான்றே" என்று துரியோதனன் பாடியிருப்பானோ?

எந்த‌வோர் இலக்கியத்திலும் ஒரு படிமத்தைக் கண்டடையும்போது பெறும் இன்பம் அலாதியானது. வெண்முரசில் அந்த‌ இன்பத்தைப் பலமுறை பெறுவதாகவே உணர்கிறேன்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.