Wednesday, April 22, 2015

முரசின் ஒலி




இனிய ஜெயம்,

காலையின் தேனொளி, எனும்  வர்ணனயிலேயே  சிக்கிக் கிடந்ததால்,  தொலை முரசு  முதல் அத்யாயம்  இரவுகளில், கற்பனைகளில் மெல்ல மெல்லத்தான் விரிந்தது.  முகில் விலக  நிலவொளியில்  தெளியும்  கடற்க்கரை போல ..

பூரி சிரவராஸ்  காண்பதெல்லாம்  திருமணத்திற்கு  முன்பான பெண்ணின் சித்திரங்கள், சாத்யகி காண்பதெல்லாம்  மணத்திற்கு பிறகான பெண்ணின் சித்திரங்கள்,  சேதி நாட்டு இளவரசிகள், குந்தி, திரௌபதி  என  சாத்யகி காணும் பெண்களின் சித்திரங்களே வேறு.

அதிலும் குறிப்பாக இந்த முதல் அத்யாயம்  முழுமையான ஒரு சிறுகதை.

 ''எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.” 

இதை சொல்பவள் சாத்யகிக்கு யார்?   முதல்  பார்வைக்கு  திரௌபதி  கிருஷ்ணனை  சாத்யக்கிக்கு நினைவூட்டினாலும்,  சாத்யகி  இன்று  அடையும்  உளநிலை  வகுத்துரைக்க இயலா தனித்தன்மை கொண்டது.

கருமலர் இதழில்  எழுந்த செந்தழல்  போல இருக்கும் துர்க்கை  அன்னையின் உள்ளங்கையை சாத்யகி  பார்க்கும்போது, அதிர்வாக  மங்கல மணிகளின்  ஓசை அவனை தாக்குகிறது.   அந்த மணி ஒளியின்  வித விதமான  அதிர்வுகளே, அவனை  திரௌபதி வசம்  கொண்டு சேர்க்கிறது. 

அங்கே திரௌபதியின் கரங்களில்  அவன்  காண்பது  கண்ணனையா, அல்லது  துர்க்கை அன்னையயா?    அந்த சொல்லை  உரைத்தவள் , கருவறை  நிறைத்த  துர்க்கையா? அல்லது  கோவில் நிறை  துர்க்கையாக,    குறும்பாக சிரிக்கும் திரௌபதியாக,  எண்ணிறந்து  பல்கிப் பெருகி மாயம் காட்டும்   கிருஷ்ணனா?

பெரும் வெண்கல மணி  ஒன்றினுள், அதன்  ரீங்கரிப்பில்  சிக்கியதாக உணரும் சாத்யகியின் நிலை எனக்கும்தான்.
 
கடலூர் சீனு