Sunday, April 26, 2015

குந்தியின் சொல்






அன்புள்ள வசந்த்,

நானே அக்கடிதம் பற்றி ஓர் விவாதம் துவக்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் எண்ணமே எனக்கும். குந்தி நிச்சயம் கர்ணனை வெறுக்கவில்லை. அவள், தான் சாத்யகி முன் வெளிப்பட்டுவிடக் கூடாது என்றே அச்சொற்களை நடிக்கிறாள். அந்த சொற்கள் எழுதப்பட்ட இடம் அப்படிப்பட்டது தானே. சாத்யகியும், குந்தியும் பீமனின் மனைவியர் முன்னிலையில் அரசியல் விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவள் முன் வர விரும்பாத அவ்விரு அரசியரையும் குந்தி கட்டி இழுத்து வரும்படி ஆணை இட்டிருக்கிறாள். அப்படியாக ஓர் விவேகம் மிக்க, கட்டுப்பாடு மிக்க, கண்டிப்பான பேரரசியாக அவர்கள் முன் தன்னை நிலைநாட்டியிருக்கும் குந்தி, கர்ணனைப் பற்றி சாத்யகி தவறாக எண்ணிவிடக் கூடாது என்ற பதை பதைப்பில், அதுவரை அவளிடம் இல்லாத விரைவுடன் “அவன் அவர்களை தடுக்கமுயன்றிருப்பான். அதில் அவனுக்கும் புண்பட்டிருக்கலாம்”என்கிறாள். ஏனென்றால் அதற்கு முன்பு வரை அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தது மானுடர் செய்யக் கூடுவதிலேயே மிகக் கீழ்மையான ஒன்றைப் பற்றி. பெற்ற தந்தையையே காடேகச் சொல்லும் மகன்களைப் பற்றி, அத்தந்தையைக் கொல்லவும் தயங்காதவர்களைப் பற்றி. அப்படிப்பட்டவர்களுடன் கர்ணன் இருந்திருக்கிறான் என்பதால் அவனையும் இச்சதியில் சாத்யகி சேர்த்து விடக்கூடாது என்பதற்காக அவள் கொண்ட விரைவு அது. உண்மையில் சாத்யகியை விட, பீமனின் மனைவியர் கர்ணனைத் தவறாக நினைத்து விடக்கூடாது என்பதும் காரணம். குழம்பிய சாத்யகி அவள் ஏன் கர்ணனை முறைமையில்லாமல் பேசுகிறாள் என்று கேட்கிறான். தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதையும், எங்கே இன்னும் ஓர் சொல் சொன்னால் தன் மந்தணம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும், தன்னைத் திரட்டிக் கொள்வதற்காக அவள் சொன்னதே, "அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை?". அதைச் சொல்லிவிட்டு எழுந்துவிடுகிறாள். இந்த எழுதலில் இருக்கும் அழுத்தமும், தேவையும் மாணிக்கவேல் அவர்களில்கடிதத்தில் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த நாள் படகில் சாத்யகியுடன் அவள் மீண்டும் கர்ணனைப் பற்றி பேசுகிறாள். அப்போது தன் மகன் வேறொருவரால் அடிக்கப்பட்டால் துடிதுடித்துப் போன ஓர் தாயாகவே அவள் உரையாடுவதை அறிய முடியும். அங்கும் கர்ணனை அவள் 'அவன்' என்று தான் சொல்கிறாள். குந்தி ஒருமையில் அழைக்கும் மற்றவர்கள் யாரென்று பார்த்தால் அவளது புத்திரர்களும், கிருஷ்ணனும் தான். அவர்களோடு, அவர்களின் அதே இடத்தில் தான் கர்ணனை அவள் வைத்திருக்கிறாள். அதை மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க அவன் சூதன் என்பதைப் பயன்படுத்திக் கொள்கிறாள். நிச்சயம் அவள் அவன் மீது மனம் புண்பட்டு அவ்வார்த்தைகளைச் சொல்லவில்லை. அது ஓர் அடவு.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்