அன்புள்ள ஜெயமோகன்
காந்தாரியின் மஞ்சத்தில் இளவரசிகள் நடுவே குழல் வாசிக்கும் கண்ணனை திரும்ப திரும்ப வாசித்தவண்ணம் இருக்கிறேன். அவன் குழலொலி என்காதில் கேட்டவண்ணம் இருக்கிறது. உங்களால் ஒரு குழலொலியை எழுதியே எங்கள் காதில் கேட்க வைக்க முடிகிறது.
எனக்கு இசை விவரணைகள் அதன் சொற்றொடர்கள் எதுவும் தெரியாது. நீங்களும் இசை சம்பந்தமான கலைசொற்களை எதையும் பயன்படுத்தவில்லை. இறுதியில்தான் அந்தப்பண்ணின் பெயரை குறிப்பிடுகிறீர்கள். ஆனாலும் அந்தப்பண் காதில் ஒலிக்கிறது நீரில் விழுந்த குருதிச்சொட்டு என்று ஒரு உவமை ஆன்மாவில் கரையும் குழலிசையை கண்முன் நிறுத்துகிறது. இப்பிறவியில் நீ அடைந்த இன்ப்ங்களை கூறு என்று என என் இறுதிக்காலத்தில் கேட்டால் இந்த குழலிசையை கூறுவேன் என நினக்கிறேன். இசையின் மூலமாக பரப்பிரம்மத்தை காட்டும் வரிகள்.
"ஒன்று பிறிதிலாது பன்னரும் பெருங்கோடிகளெனப் பெருகுவது இது. ஒன்றுபிறிதிலாத முடிவிலி. அந்த அச்சம் ஆயிரம் இறப்புக்கு நிகர். பல்லாயிரம் இன்மைக்கு நிகர். பலகோடி வெறுமைக்கு நிகர். ஒன்றுபிறிதிலா வெளியில் சென்று மறைந்த எதுவும் பொருளிலாதாகிறது. பொருளிலாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன? இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும் என்ன?"
அவ்வறைக்கு வெளியே நடக்கும் அத்தனை அரசியல் திட்டங்களையும் அர்த்தமிழக்கச்செய்யும் இசைப்பெருவெளி.
பின்னர் அவன் பேசுவதும் இசை தான்.
“நழுவிச்செல்வதெல்லாமே ஊழால்தான்” என்று சொன்ன கிருஷ்ணன் துச்சளையிடம் “அந்த ஒரு சொல் இல்லையேல் எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது?” என்றான்"
ஒரு இசை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒவ்வொரு உணர்வை உருவாக்குவதைப்போல் இந்த வாக்கியம் துச்சளைக்கு மட்டுமல்லாமல், பூரிசிரவஸ்ஸுக்கும், பானுமதிக்கும் காந்தாரிக்கும் ஏன் அங்கிருக்கும் அத்தனை இளவரசிகளுக்கும் என தனித்தனியே பொருள் பொதிந்து அடைகிறது. கண்ணன் பேசுவதெல்லாம் கீதையாகிறது.
சட்டென்று இக்கடிதத்தை அழித்துவிடலாம் எனத்தோன்றுகிறது. என் உள்ளத்தை என் உணர்வை மிகவும் குறைத்துக்காட்டுகிறது இக்கடிதம். இருந்தாலும் என் சிற்றறிவைக்கொண்டு என் உணர்வை வெளிக்காட்ட இவ்வளவுதான் முடியும் எனும்போது என்னால் வேறு என்ன செய்ய முடியும்.
த.துரைவேல்