அன்புள்ள ஜெ
அதிகார அடுக்கு பற்றி கிருஷ்ணன் எழுதியிருந்தார். அதிகார அடுக்குமுறை என்பது பழையகால அரசர்குலங்களில் இரண்டு வகையாக முடிவாகிறது. ஒன்று ஆசாரங்கள். இன்னொன்று பிறப்பு.. அல்லது ரெண்டும் சரியாக கலந்திருக்கிறது. இதில் தெளிவாக எதுவும் எழுதி நிலைநாட்டி வைத்திருக்க மாட்டார்கள். நெடுங்காலமாக இதுதான் முறை என்பதனால எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்கும்
பழைய மன்னர் ஆட்சிக்காலத்திலே மன்னர் ஒரு ஆசாரத்தால்தான் மன்னர் ஆகிறார். அதாவது பழைய அரசரின் முதல் மகன் மட்டுமே அரசன் ஆகமுடியும். இதிலே மாற்றமேதும் இல்லை. ஆனால் அதேசமயம் அவர்களின் தம்பிகளும் சமானமான அதிகாரத்துடன் இருந்திருக்கிறார்கல். உதாரணமாக திருமலைநாயக்கர் ஆட்சிக்காலத்திலே அவரது இரண்டு தம்பிகளான செவந்தியப்ப நாயக்கர் ரெங்கப்ப நாயக்கர் இருவருமே வலிமையானவர்கள். இருவருக்கும் புரோட்டாக்கால் படி எந்த பதவியும் இல்லை. ஆனால் அவர்களும் அரசர்கள்தான்.
தமிழகத்திலுள்ள ஏரிகளை வெட்டியவர் செவந்தியப்பர்தான். அதேபோல ரங்கப்பர்தான் மதுரைக்கோட்டையைக் கட்டியவர். அவர்களுக்கும் திருமலைக்கும் அதிகாரப்போட்டி வருமா என்றால் வராது. ஏன் என்றால் ஆசாரம். அண்ணனை எதிர்க்க மாட்டார்கள். அந்த எதிர்ப்பு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் ஆகவே அது நடக்காது. அதேபோல அரசகுடும்பத்தைச் சேராதவர்கள் அதிகாரம் அடைவதையும் ஆசாரமும் மகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
இதுதான் பழைய அடுக்குமுறை. ஆசாரம் மீறிப்போகும்போதுதான் கிளாஷ் வருகிறது. முகலாயர் ஆட்சிக்காலத்தில் அண்ணன் தம்பிக்கொலைகள் நடந்தன. பாண்டியவரலாற்றிலே வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் போர் மட்டும்தான் நாம் அறியக்கூடிய விதிவிலக்கு
சுந்தரலிங்கம் ஆர்