அன்புள்ள ஜெ
கிருஷ்ணனின் இசையை காதால் கேட்காமல் கருத்தால் கேட்ட அனுபவத்தை அளித்த அத்தியாயம். பலமுறை வாசித்தேன். அதிலே ஒரு உச்சாடனத்தன்மை இருந்தது. என்னதான் சொன்னாலும் பாஷை என்பது காதுக்குரியதுதானே சொல்லிக்கேட்டால் வரும் இன்பம் நினைத்துப்பார்த்தால் வருவதில்லை. தமிழுக்கு இருக்கும் அற்புதமான சந்தத்தை உணரமுடிந்த வரிகள்
நீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம்.
அருண்