பூரிசிரவஸ் கண்ணீர்விடும்
இடத்தில் முடிந்து சாத்யகி புன்னகைக்கும் இடத்தில் தொடங்கும் கதை. எதிர் எதிர் மனங்களின்
நெருக்கத்தை அறிந்து அதிசயிக்கும் வாழ்க்கை கணம்.
பெண்ணால் கண்ணீர்விடும்
பூரிசிரவஸும், குப்பையும் கூளமும் கிடக்கும் வீதிகூட பெண்ணாகி தெரிய புன்னகைக்கும்
சாத்யகியும். இருவரையும் நெருக்கத்தில் காணும்போது உண்மையின் மையத்தில் நிற்கும் ஒரு சுகம். இன்பம்
துன்பம் இரண்டும் இருந்தாலும் உண்மை அப்படியேதான் இருக்கின்றது. வாழ்க்கை அப்படியேதான்
இருக்கிறது. மனதில் கனமும் கனமற்ற வெறுமையும் தோன்றி அதிசயக்க வைக்கிறது.
துச்சளையை விரும்புகின்றேன்
என்று துரியனிடம் ஒரு சொல் சொல்லமுடியாமல், அவளை இழந்து கண்ணீர்விடுகின்றான் பூரிசிரவஸ்.
தான் எடுத்து வரும் ஓலையில் தனக்கான பெண்பெயர் இருக்கின்றது என்பதைகூட அறியாமல் வரும்
சாத்யகி ஒவ்வொரு கனமும் பெண்ணை அறிந்து அறிந்து செல்கின்றான். அவன் அறியாவிட்டாலும்
அவன் அகம் அதை உணர்ந்து உள்ளது. யார் என்று தெரியவில்லை. முகிலின் ஒரு கூட்டம் ஒரு
உருவத்தை வரைவதுபோல பெண் ஓவியங்கள் அவனுக்கு தோன்றி தோன்றி மறைவது அற்புதம்.
//இடை வளைந்து கிடக்கும் பெண்போல என நினைத்ததுமே அவன் புன்னகைசெய்தான்//.
//ஒரு கணத்தில் அந்த செங்குழம்பு பட்ட பெண்ணின் உடலை அங்கே வண்ணமற்ற வெளியாக அவன் கண்டுவிட்டான். புன்னகையுடன் குதிரையை தட்டினான்//
பூரிசிரவஸை தொடர்ந்து வந்து காதலிக்கும் பெண்கள்
கை நழுவிப்போவதும், சாத்யகி தனக்கு திருமணம் வேண்டும் என்றோ, தனக்கென்று ஒரு பெண்வேண்டும்
என்றோ நினைக்காதபோதே அவனுக்கு ஒரு பெண் அமைவதும் எத்தனை அற்புதமான வாழ்க்கை விளையாட்டு.
முரண்பாடுகளால்
அமைந்த இந்த இரண்டுபாத்திரங்கள் வழியாக வாழ்க்கை விளையாடும் விளையாட்டை ஜெயமோகன் கதையாக்குகின்றார்
என்றாலும் அவை வெறும் கதைதானா? வாழ்க்கையின் பெரும் சிக்களை, தீர்க்கமுடியாத இந்த
புதிரை பக்கத்தில் வைத்து பார்க்கும் தருணத்தை கொண்டுவந்த உங்களுக்கு நன்றி என்று சொல்ல
மட்டும்தான் வார்த்தை உள்ளது.
இந்த வாழ்க்கையின்
பெரும் சிக்கலை அறிந்தாலும் இதை வென்று செல்வது முடியக்கூடியகாரியமா? “நான்றே வருகினும்
தீதே விளைகினும் நானறிவது ஒன்றேயும் இல்லை” என்று அபிராமிப்பட்டர் சொல்வதை ஏற்றுக்கொள்வதைவிட
வேறு என்ன இருக்கிறது.
சாத்யகி, பூரிசிரவஸ் இருவரையும் இங்கு நிறுத்திவிட்டு,
கண்ணனை நாம்பார்த்தால், கண்ணன் இப்போது எப்படி இருப்பான்? உண்மையின் மையத்தில் நிற்பவன்
இரண்டையும் அறிவான். பூரிசிரவஸின் கண்ணீரும் அவனுக்கு தெரியும், சாத்யகியின் புன்னகையும்
தெரியும். சாத்யகியின் புன்னகைக்காக அவன் சந்தோஷப்படுவானா? பூரிசிரவஸின் கண்ணீருக்காக
அவன் கண்ணீர்விடுவானா? இறைவனாக இருப்பதுதான் எத்தனை பெரிய கஷ்டம். ஒருவன் புன்னகைக்கும்போது,
மற்றொருவன் கண்ணீர்விடுகின்றான்.
துரியன்போல இது
உனது தவறு இளையவனே என்று சொல்லிச்செல்லமுடியுமா? அப்படி சொல்லிச்செல்வதுதான் மனித இயல்பு.
ஆனால் தாய் இயல்பு என்பது தனது இடுப்பு வலிக்காக கண்ணீர்விட்டுக்கொண்டு, குழந்தையின்
புன்னகைக்காக பால்ஊறும் தனம் பூரிப்பது. இறை இயல்பு என்பது தாயின் இயல்பிலும்இருக்கமுடியாமல்,
தவளையின் உயிர் போராட்டத்திலும், பாம்பின் பசிவெறியிலும் அல்லவா கிடந்துக்கொண்டு அமைதிக்காக்கவேண்டும்.
சாத்யகி
நான் இளவரசன் இல்லை, வெறும் யாதவன்
என்கின்றான். நான் கண்ணனின் அடைமை என்கிறான், என் தகுதி அது மட்டும்
என்கிறான். வானத்தின் ஒரு துண்டு நீலமாகி துவாரகை வாயிலை நிறைப்பதை
காண்கின்றான். இப்படி சாத்யகி ஒரு சிறு வழியில் தனது நான் என்னும் ஆணவத்தை
இழந்து நிற்கின்றான்.
சிறியதாக இருந்தாலும் பெரிதுடன் இணைந்தவன் என்ற பக்தியில் நிற்கின்றான்.
இந்த பக்திதான்
அவனுக்கு வாழ்க்கையில் அவன் விழையாத நலன்களையும் செய்கின்றதோ?
நான் உங்களுக்கு
கடன் பட்டவன் மூத்தவரே என்று சொல்லும் பூரிசிரவஸின் பக்திக்கும், சாத்யகின் பக்திக்கும்
இடையே உள்ள வித்தியாசம் தான் எத்தனை பெரியது. பக்திகூடாத இடத்தில் வைக்கும் பக்தி துன்ப
கண்ணீரையும், பக்தி வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும் பக்தி ஆனந்த கண்ணீரையும் தருகின்றது.
எத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் தரவேணும்
தப்பாமர் பாடி சேவிப்பார்
தம்தாம் வினையை களைவோனே –என்று அருணகிரி நாதர் சுவாமிகள் துப்பார்
அப்பு என்ற திருப்புகழில் சொல்கின்றார்.
சாத்யகியை பார்க்கும்போது “நம்பினவருக்கு
நடராஜா”.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.