எங்கிருந்தோ வந்த ஒரு ஜீவன்
இதயம் நுழையும்
அகமாகும்
இங்கிருந்தாலும்
இங்கிருப்பதில்லை இதயம்
வானத்தில்…
வானுக்கு கீழ் உள்ள இயற்கையில் எல்லாம்
புறத்தில் கண்டுக்கொள்வதோ
அகத்தில் இருக்கும்
அகத்தையே.
இயற்கையை பார்க்கையில் காதல் வருகின்றது அல்லது காதல் வந்தபின்பு இயற்கையை பார்க்கதோன்றுகின்றது. காதல் வரும்போது அகம் என்று ஒன்று இருப்பது தெரிகின்றது, அகம் இருப்பது தெரிவதால் புறமும் தெளிவாக தெரிகின்றது. நேற்றுவரை வெறும் துணிபோல் இருந்த புறத்தின் இயற்கை இன்று அகத்தின் ஓவியங்களால் வண்ணமும் வடிவமும் கொள்கின்றது.
அகத்தையும் புறத்தையும் நேர்க்கோடாக்கும் காதல் வந்த தருணங்கள் வாழ்க! துரியோதன் அகம் காதல் வயப்படும் தருணத்தில் இருந்து, தன் உடலை இங்கு வைத்து இதயத்தை வானம் வரை செல்லவிடுகின்றான். ஒவ்வொரு மேலான நல்லுணர்வகளும் நாம் அதோ அந்த வானம் வரை சொந்தக்காரர்கள் என்று விரியவைக்கின்றது. ஒவ்வொரு கெட்ட உணர்வுகளும் நாம்மை நமக்குள்ளேயே அழுந்தி சிறைவைத்துவிடுகின்றது. மனிதன் மீண்டும் மீண்டும் வானத்தை, சோலையை, மலையைப்பார்ப்பது தானும் அதுதான் என்று அறிவதற்குத்தானா இதை மனிதன் அறிந்து செய்கின்றானோ அல்லது அன்னிச்சையாக அவன் அகம் அதை செய்கின்றதோ தெரியவில்லை ஆனால் அது அப்படித்தான் நடக்கிறது. ஏன் இப்படி நடக்கின்றது? அகமும் புறமும் எது உண்மையோ அதனால் நிரம்புவதற்கு அப்படி நடக்கின்றது.
என்னும் நல்லுணர்வில் விழும் தருணத்தில் அவனை அறியாமலே துள்ளி வெளியே குதித்துவிடும் அகம் கண்டுக்கொள்ளவது பகுளம் என்னும் பறவையை. அங்கு பகுளம் மட்டும்தான் இருந்ததா? ஏன் பகுளத்தில் அவன் மனம் நின்றது. அகத்தில் இருக்கும் பானுமதியும், புறத்தில் இருக்கும் பகுளமும் இணையும் ஒரு தருணம். மரத்தில் எத்தனையோ பறவைகள் மறைந்திருக்கும் ஆனால் அவன் அகம் கண்டுக்கொண்டது பகுளத்தை மட்டும்.
பானுமதி காதல் என்னும் நல்லுணர்வில் விழும் தருணத்தில் அவளை அறியாமலே சூதர்பாடல்களில் புறத்தில் உலவும் மனம் ஒடுங்கி அகத்தில் அமைதிகாணம் கணத்தில் கண்டுக்கொள்வது அகத்தில் இருக்கும் துரியோதனனை. வேழமும் துரியோதனனும் இணையும் ஒரு தருணம்.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெய்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
கறுமைக்கொண்ட வேழமும், வெண்மைக்கொண்ட பகுளமும் இணையும் இந்த மையத்தில் ஒன்றை ஒன்று அதன் எதிர் வண்ணத்தைக் கண்டுக்கொள்கின்றது. அந்த எதிர் எதிர் வண்ணங்கள்தான் காதலா? அந்த எதிர் எதிர் வண்ணங்களால்தான் அவை நிறைவும் அடைகின்றன. //கரியபாறைக்குமேல் வெண்ணிறக்கொடி பறப்பதுபோல// கரியபாறையால் கொடியும், வெண்கொடியால் கரியபாறையும் இருப்பை மண்ணில் நிலை நிறுத்துகின்றன. ஒன்றால் ஒன்று மேன்மை அடைகின்றன, வணக்கத்திற்கு உரிதாகின்றன. கொடி இல்லாமல் பாறையும், பாறையில்லாமல் கொடியும் வாழ்ந்துவிடமுடியும் ஆனால் ஒன்றுடன் ஒன்று இணையும்போது அவைகள் வேறு ஒன்றாக மாறி உலகுக்கு ஒரு உண்மையை பறைசாற்றுகின்றன. காதல் இல்லாமலும் வாழ்ந்துவிட முடியும் ஆனால் காதல் ஒரு அர்த்தத்தை வாழ்க்கைக்கு கொடுகின்றது.
பகுளம் வேட்டைநாய்கள் அறியும் தன்மை உடையவை அல்ல என்பதும், அவற்றின் மணமில்லாத தன்மையால் அவை அருகில் புதரில் இருக்கும்போதே அவைகளை அறியாமலே வாழ்ந்துவிட முடியும் என்பதும் பானுவின் முன்பின் வாழ்க்கையின் நேர்க்கோடும், பின்வாழ்க்கையில் விழும் நெளிக்கோடும் மின்னி ஒளிர்கிறது. இதுவும் இயற்கைதான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்