Saturday, April 11, 2015

திருதராஷ்டிரரின் மனமாற்றம் 4




தல்ஸ்த்தோயின் போரும் அமைதியும் நாவலில் வரும் தருணம் இது. பிரின்ஸ் ஆண்ட்ரூ கருவுற்றிருக்கும் தன் மனைவியை விட்டுவிட்டு போருக்குச் சென்று விடுகிறான். சென்றவன் அதன் பிறகு திரும்பவில்லை. அவன் இறந்தவர்கள் பட்டியலிலும் இல்லை, 

சிறைபிடிக்கப்பட்டவர்கள் பட்டியலிலும் இல்லை. எனவே அவன் குடும்பத்தார் அவன் இனி மீள இயலா இடத்திற்கு சென்றுவிட்டதாகவே முடிவு செய்கின்றனர். ஆனால் கர்ப்பிணியான அவன் மனைவியிடம் இச்செய்தியைத் தெரிவிக்க இயலாமல் தவிக்கின்றனர். இப்போது அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணி. தாதியரின் மேற்பார்வையில், உச்சகட்ட வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அவன் குடும்பத்தினருக்கு வேண்டுவதைத் தவிர வேறொரு வழியும் இருக்கவில்லை.

 இந்நிலையில் பிரின்ஸ் ஆண்ட்ரூ திரும்பி வருகிறான். அவனை முதலில் பார்க்கும் அவன் தங்கைக்கு பேச்சே வரவில்லை. அவன் மனைவியைப் போய்ப் பார்க்கிறான். உச்ச வலியில் துடித்தவள், சற்று ஆய்ந்து ஓய்ந்து போய் படுக்கையில் கிடக்கிறாள். அவள் கண்கள் அவனைப் பார்க்கின்றன. மிகவும் நெகிழ்ச்சியான தருணம். ஆனால் தல்ஸ்தோய் அவள் அவன் வந்திருப்பதை அறியவே இல்லை என எழுதுகிறார். அவள் கண்கள் அவனைப் பார்த்து, "காலமெல்லாம் உங்களைக் காதலித்தேன், யாருக்கும் நான் எக்கேடும் நினைத்ததில்லை. எனக்கு ஏன் இந்த அவதி?, எனக்கு எவ்வாறாவது உதவு" என்று கேட்பது போல் இருந்தது என்கிறார். அவன் வந்ததை அறியாமலேயே அவள் உயிர் போய்விடும்.

இவ்விடத்தில் ஓர் மிகப் பெரிய தன்விசாரத்தை அவர் எழுதியிருக்கலாம். அவள் இத்தனை நாள் காத்திருந்ததை, அவன் பிரிவால் அவள் வாடியதை அவள் வாயாலேயே சொல்ல வைத்திருக்கலாம், நம் கதாநாயகர்கள் பத்து குண்டு பட்டாலும், பத்து நிமிஷம் பேசுவது போல. அனால் நிஜ வாழ்வில் மிகப் பெரிய சம்பவங்கள் உணர்ச்சிமிகு காட்சிகளால் ஆக்கப்பட்டிருப்பது மிக மிக அரிது தான். நாம் உணர்ச்சிகரமானது என நினைப்பவற்றில் பெரும்பாலானவை நாமே எண்ணி எண்ணி வளர்த்துக் கொண்டதாகவே இருக்கும். 

இந்த பின்புலத்தில் தான் நாம் திருதாவின் மனமாற்றத்தை அணுக வேண்டும். என்றுமே ஓர் பெரிய மாற்றம் மிகப் பெரியதாகவே நடக்காது. அதைத்தான் கிருஷ்ணன் பால் தயிராகும் முதல் மணம் என்று சொல்லிச் செல்கிறான். அந்த மாற்றம் நிகழ்வதை அஸ்வினி தேவர்களே அறிவார்கள் என்றும், மணம் மட்டுமே இல்லத்தரசி அறிவாள் என்றும் சொல்வதன் மூலம் திருதாவிடம் அம்மாற்றம் நிகழ்ந்து விட்டது, இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற செய்தியையே அவன் சொல்கிறான். 

வெண்முரசு ஓர் பெரிய கடல் என்று கொண்டோமானால் திருதா அதில் ஓர் பெரிய கலம். அது செல்ல வேண்டிய தூரமும் மிக மிக அதிகம். அத்தகைய ஓர் பெரிய கலம் தன் பாதையில் இருந்து அரைப் பாகை விலகினாலும், பத்து நாட்கள் கழித்து தன் முதல் பாதையிலிருந்து பெருமளவுக்கு விலகி வந்து தானே இருக்கும். இந்த அரைப் பாகை விலக்கத்தை மிகத் தாமதமாகவே அனைவரும் உணர்வர். அதை முதலிலேயே கிருஷ்ணன் உணர்கிறான். சுக்கானைக் கையில் வைத்திருப்பவர் என்று நம்பி பீஷ்மரிடம் சொல்கிறான்.

மேலும் திருதாவின் இந்த நிலை ஒன்றும் திடுதிப்பென்று வெண்முரசில் வந்து விடவில்லை. ஆம். அவர் துரியோதனாதியர்களைக் கழுவில் என்ற வேண்டும் என்று நினைத்தார் தான். ஆனால் மனதின் ஆழத்தில், எவ்வாறேனும் அதைத் தடைசெய்ய இயலாதாவென்றே தேடிக் கொண்டிருந்திருப்பார். விதுரரிடம் தருமனின் கடிதத்தைக் காண்பித்து அவர் பேசுவதை எண்ணிப்பார்த்தால் இது தெளிவாகத் தெரியும். விதுரரே அக்கடிதத்தால் உணர்ச்சி வசப்படுவதற்கு, திருதாவின் உளப்பூர்வமான மகிழ்ச்சியும் ஓர் காரணம். அக்கடிதத்தை நம்பிய அதே மனம் தான் காம்பில்யப் போரைக் களிப்போர் என்று சொல்லும் தருமனின் கூற்றை நம்புகிறது. திருதாவின் உள்ளத்தைத் தருமன் மிகத் தெளிவாகவே விதுரரிடமே எடுத்துச் சொல்கிறான், அவன் முதலிரவுக்குப் பின்னான சந்திப்பில்.

இவை மட்டுமன்றி வேறோர் முக்கியமான காரணமும் உள்ளது. அது திரௌபதியும், அவள் திருமணத்தால் விழைந்த பாஞ்சால உறவுகளும். அதுவரை பாண்டவர்கள் தந்தையற்றவர்கள். திருதாவை மட்டுமே நம்பி வந்தவர்கள். அவரிடம் அடைக்கலம் ஆனவர்கள். ஆகவே அவர்களின் நலனை மிகப் பெரியதாக எண்ணுவது என்பது அவரின் தன்னறம். இப்போதோ அவர்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தனியர்கள் அல்லர். அடைக்கலம் தேடிய காரணம் இன்றில்லை. திருதா விடுபட்டவராக உணர்கிறார். பிறந்த கணம் தன் மகனைக் கையிலேந்தி, எங்களுக்கு தெய்வங்களும் துணையில்லை என்று கதறிய அந்த தந்தை வெளிப்படுகிறார். அதை வெளிக்கொணர்ந்த தருணமும் அபாரமான ஒன்றே. துரியன் தன் கழுத்தில் வைக்கும் கத்தி. அத்தருணத்தில் அவர் தான் யார் என்பதும், தனக்கு அவன் யார் என்பதும் தெள்ளெனத் தெரிகிறது. அதைத்தான் அவர் கிருஷ்ணனிடம் பகிர்கிறார். 

எனவே அத்தருணம் மிகக் கவனமாக எழுதப்பட்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். நிஜ வாழ்வை மீறாத ஒன்றாகவே காண்கிறேன்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.