Saturday, April 11, 2015

இளைஞர்களின் கனவு.



கனவும் செயல்களும் சம எடைக்கொண்டவை. செயல்கள் உடம்பால் செய்யப்படுகின்றது. கனவு அகத்தால் செய்யப்படுகின்றது. கனவுக்கும் செயலுக்கும் வித்தியாசம் என்றுப்பார்த்தால் அவற்றின் எடையும், எடை இன்மையும்தான்.

கனவுகள் எடையற்றவை. செயல்கள் எடை உடையவை. கனவும் செயல்களும் தோற்றுவிக்கும் உணர்வு ஒன்றுதான். இரண்டுமே சந்தோஷத்தையும், கண்ணீரையும் உருவாக்கிவிட்டு செல்கின்றது.

கனவுகள் ஆசைகளுடன் பிணைக்கப்பட்டு உள்ளது, செயல்கள் பலத்துடன் பிணைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு செயலிலும் செய்தவனின் உடல்ஆற்றல் உள்ளது. ஆற்றல் அற்றவன் இடத்திலும் கனவுகள் உள்ளது. பூரிசிரவஸ் காணும் கனவு தனிமனிதன் கனவுபோல் இருந்தாலும் அது தனிமனிதன் கனவு அல்ல பால்ஹிகபுரியின் கனவு. பால்ஹிகபுரி என்னும் மலைக்குலம் ஒரு பேரரசாக நினைக்கும் கனவு. பூரிசிரவஸின் தந்தைமுதல், ஏவலாள்வரை மதுவருந்தி துயில்கின்றவர்கள். மயக்கத்தில் கிடப்பவர்கள். மயக்கத்தில் கிடக்கும் ஒரு உடல் துயிலவும் முடியாமல், செயல்படவும் முடியாமல் கிடக்கையில் தனக்குத்தானே பின்னும் கனவு வலை பூரிசிரவஸின் கனவு. கனவு வலைப்பின்னிப்பின்னி சிக்கும் சிலந்தி  இந்த பூரிசிரவஸ்.

பூரிசிரவஸை கனவு கூடுகட்டி நெளியும் கூட்டுப்புழு என்று நினைக்கும் அந்த தருணத்திலேயே அவன் மட்டும் மற்றவர்களில் இருந்து விழித்துக்கொண்டு பறக்க நினைக்கம் வண்ணத்துப்பூச்சி என்றும் நினைக்கவைக்கின்றான். விடுதலை அடைய துடிக்கும் மனத்திற்கும், வாழ்வில் சிடுக்கில் சிக்கி உழலும் மனத்திற்கும் இடைப்பட்ட வெளியில் திரியும் சீவன் என்றும் அவனை நினைக்க வைக்கிறான். பாதை தெரியாத வண்ணத்துப்பூச்சி கண்ணுக்கு தெரியும் பூவெல்லாம் தனது இலக்குக்கும் பாதைக்கும் உரியது என்று பறந்து பறந்துச்செல்கின்றான். அவன் கனவுகள் நேரானவை நியாயமானவை ஆனால் அவன் செயல்களில் நிலைக்க அதற்காக பலத்தை இன்னும் அடையவேண்டும்.

கனவுக்கும் ஆற்றலுக்கும் இடைவெளியில் ஊசலாடும் பூரிசிரவஸ் இந்த உலகத்தை எண்ணம்போல் மாற்றத்துடிக்கும் இன்றைய இளைஞனின் வடிவம்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணிய ராகப் பெறின்.-என்று வள்ளுவர் சொல்வது பூரிசிரவஸ்போன்று கனவு காண்பர்களைப்பார்த்துதான்.

என்னக்கனவு காண்கின்றோமோ அதற்கு உரிய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது ஆற்றலுக்கு உரிய கனவைக்காணவேண்டும் இல்லையேல் புத்தர் சொன்ன “ஆசையே துன்பதற்கு அடிப்படை” என்பது உண்மையாகிவிடும்.

ஆற்றல் கொண்ட கனவுகள்  வரலாற்று நாயகர்களையும், ஆற்றல் அற்ற கனவுகள் தற்கொலைவாதிகளையும் உருவாக்கிவிடும். தேவிகையை நினைத்து கழுத்தில்  வாள்வைத்து அறுத்துக்கொள்ள நினைக்கும் பூரிசிரவஸைப் பார்க்கையில்  அவன் காணும் கனவுகள் எத்தனை எளிதில் அவனை கைவிடப்பட்டவனாக்கிவிடுகின்றது.

முன்னும் பின்னும் பின்னிப்பின்னிச்செல்லும் பூரிசிரவஸின் கனவு வரலாற்று நாயகர்களாக நினைக்கும் இளைஞர்களின் கனவு. அது ஆற்றலோடு இணைக்கப்படும்போது அது கனவல்ல வரலாறு. 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.