Friday, April 10, 2015

கனி




கனிபோல கன்னியரும் வியபாரப்பொருள்கள்தான், வியபாரம் செய்வதற்காக வளர்க்கப்படுகின்றார்கள். வாங்குவதோ, திருடுவதோ எளிதான காரியம்தான் ஆனால் வாங்கும்கனியும், திருடும்கனியும் அகம் கசந்து இருப்பதுதான் சிந்தனைக்கு உரியது. கனிந்து உதிரும் என்று கைநீட்டிக்காத்திருப்பவனும், கனிந்தபின்பு விழுவோம் என்று காம்போடு கண்டுண்டு இருக்கும் கனியும் செய்யும் காதல் என்பது காற்றில் எழுதும் காவிதைபோல் அந்த கணத்தில் அந்த இடத்தில் ஒரு இசையை மீட்டிக்கொண்டு இருக்கிறது.

தேவிகை, விஜயை, துச்சளை என்னும் வேறு வேறு மரத்துக்கனிகள். மூன்று கனிகளின் கீழும் கையேந்தி நிற்பவன் பூரிசிரவஸ் என்னும் ஒருவனே. அந்த கனிகளுக்கும் கைகளுக்கும் இடையில் ஒரு கவிதை காற்றில் வெட்டவெளியில் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கனியும் இவன் கையிலேயே விழுவோம் என்று கனிகின்றது. ஒன்று இவன் தன்னை ராணியாக வைத்துக்கொள்வான் என்று நினைத்தது. அது திருடப்பட்டு விட்டது. ஒன்று இவன் தன்னை மனைவியாக வைத்துக்கொள்வான் என்று இறைஞ்சுகின்றது. அது விற்கப்பட உள்ளது. ஒன்று இவன் தொழுதும், புகழ்ந்தும் சிரத்தில் பாதம் சூடுவான் என்று நினைக்கிறது. அது கொளுவைக்கப்படுகின்றது கனிகளை காம்புகள் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே மரங்கள் அவைகளை விலைபேசுவது எத்தனை நியாயமானது. மரங்கள் தங்களை பலமாக்கிக்கொள்வதற்காகவே தங்களை விலைபேசுகின்றன என்பதுதான் மறாத உண்மையும், மறுக்கமுடியாத உண்மையும்.

கனிக்காகவே யானைகளால் அசைக்கப்படும் மரங்கள்போல் ஒவ்வொரு அரசும் இருக்கின்றது என்பதை நினைக்கும்போது காதல் என்று கையேந்தி நிற்பதெல்லாம் அர்த்தமற்றதாகிவிடுகின்றது. துப்பிக்கை உள்ள யானையாக இருந்தால் மரமே வளைந்து தனது கனியை கொடுத்துவிடும் அதிசயம் மட்டும்தான் இங்கு உண்மை.

பூரிசிரவஸ்போன்றவர்களும் கனிக்காகவே கனியை விரும்புகின்றார்களா? கனியைத்தின்று மரத்தின் நிழலில் அல்லவா அவர்கள் இளைப்பாற நினைக்கின்றார்கள். அவர்கள் கனியின் கீழ் கையேந்தி நிற்பதுகூட கனிக்காக அல்ல கனியின் வழியாக ஒரு மரத்திற்காகத்தான்.

கனியை வைத்து மரம் ஒரு கணக்குப்போடுகின்றது. கனியை வைத்து அதை காதலிக்கும் கைகள் ஒரு கணக்குப்போடுகின்றது. கனிக்கு வெட்டவெளியின்றி வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லை. கனிகள் காற்றில் ஆடியாடி காற்றில் எழுதிய கவிதை எல்லாம் ஓசை இல்லா இசைகளும், உருவம் இல்லாத எழுத்துகளும்தான்.
//பெண்கள் அத்தனை எளியவர்களா என்னஒவ்வொருகணமும் சூழலுக்கேற்ப உருமாறிக்கொண்டிருக்கும் மானுடஉள்ளம்அச்சம் விழைவு கனவு என அகச்சரடுகளாலும் குலம் குடி முறைமை என புறச்சரடுகளாலும் இயக்கப்படும்எளியபாவை//

ஆண்கள்போல பெண்கள் புலம்புவது இல்லை புலம்பினால் எப்படி இருக்கும் எத்தனை எத்தனை பட்டினத்து அடிகள் கிடைத்திருப்பார்கள்.
 ஊருஞ் சதமல்ல  உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற 
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே 
யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி யேகம்பனே
பெண்களை மட்டுமில்லை பட்டினத்தாரையும் பெண்களே பெற்று எடுக்கவேண்டி இருப்பதால் அவர்கள் புலம்புவதில்லை.

பெண்ணாய் பிறந்து பித்தனுக்காக பிச்சியான அக்கமாகதேவியின் இந்தவரிகள் சொல்லவது ஒவ்வொரு பெண்ணின் எளிய வாழ்க்கையின் உள்ளும் நின்று பெண்களின் அடிமனதை அசைக்கும் நுட்பத்தை அறிகையில் பெண்ணை படைத்த அந்த பரமனை என்னத்தான் சொல்வது? பெண்ணை நாம் என்ன என்னவெல்லாம் செய்கின்றோம் என்று நினைத்து நெஞ்சம் அதிர்கின்றது.
நெருப்பில்லா சூட்டில் வெந்தேனம்மா
வடுவில்லா காயத்தில் நொந்தேனம்மா
சுகமிழந்து தவித்தேனம்மா
சென்னமல்லிகார்ஜூன தேவனை விரும்பி
வரக்கூடாத பிறவிகளில் வந்தேனம்மா

பிறவிப் பெருங்கடல் என்று இரண்டே சொல்லில் பிறவியின் சுமையை தூக்கிவைக்கும் வள்ளுவனை இங்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.