Sunday, April 12, 2015

சிதையும் கனவுகள்




அன்புள்ள  திரு.ஜெ வணக்கம்.

மூன்று தொடர்தோல்விகளால் ஆன பூரிசிரவஸைப்பார்க்கும்போது பெரிய வருத்தம் தோன்றும் கணமே, தோல்விகளை பழகிக்கொள்ளும் அவனின் அகவல்லமையும் அதிசயக்கவைக்கிறது. இதுவும் வாழ்க்கைதான் என்று பாடம் நடத்துக்கின்றது. கண்ணீரும் உவகையும் கலந்து செய்யப்பட்ட சிற்றம். 

நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லும் வாசகம் “வாழ்வதற்காக சாகவும் தயார்“ என்பது. பாலைவன வாழ்க்கைக்கு சரியாக பொருந்தும் வாசகம். பூரிசிரவஸ் வாழ்வதற்காக செத்துக்கொண்டு இருக்கிறான். மதுவும், துயிலும் இருந்தால் வாழ்ந்ததாகிவிடும் என்று என்னும் கூட்டத்தில் பிறந்து உயரநிலைக்கும் பூரிசிரவஸ், மாலையும், பாலையும் கொண்ட வெளியில் ஓடி ஓடி களைக்கையில் இப்படித்தான் தோன்றியது.

பிறப்பு, பயணம், வாழ்க்கை, கோடு, கவிதை அதைத்தும் அதன் எதிர்ப்புள்ளியை கண்டு அடையும் தருணத்திலேயே நிறைவடைகின்றது. கனவும் அதன் எதிர் புள்ளியான நிஜத்தை தேடியே நிறைவடைகிறது.

வெற்றித்தோல்வி என்பது எல்லாம் முழு அர்த்தம் உடையவைதானா? அந்த கனத்தில் அர்த்தம் உடையவைப்போலவும் அடுத்தக்கணம் இதற்காகவா இத்தனை ஆட்டம் என்ற சலிப்பையும் உண்டாக்கிவிடுகின்றது. வளர்கின்ற வாழ்க்கை என்பது வெற்றித்தோல்வி என்னும் படிக்கட்டால் ஆனதுதான். அந்த படிக்கட்டுகள் இல்லாத வாழ்க்கையின் உயரத்தை எதைக்கொண்டு கணிப்பது? வெற்றி புலன்களைத்தொட்டு, உறவுகளைத்தொட்டு, இடத்தைதொட்டு காலத்தை தொட்டு பரந்து பரந்து சென்றுக்கொண்டே இருக்கிறது இதனால் வாழ்க்கை அர்த்தம் உடையதாக மாறிவிடுகின்றது. தோல்வி  குவிந்து குவிந்து வந்து இதயத்தில் ஏறி அமர்ந்து இறங்க மறுக்கின்றது.

 தோல்வியின் கனம்தரும் சுமையும், அதனோடு அதுவே எதிர்காலத்தின் சாலையில் தெருவடைச்சானாகவும் இருப்பதால் வாழ்க்கையை நகர்த்துவதே பெரும்பாடாகிவிடுகின்றது. தோல்வியால் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகின்றது. வெற்றி வேண்டும் என்பதைவிட தோல்வி வந்துவிடக்கூடாது என்பதுதான் வாழ்வின் முதல் போராட்டம். தோல்வியை விரட்டுவதற்காக கண்டைய வேண்டிய எதிர்ப்புள்ளிகள் கனவுகளாக வந்து அமைகின்றன. கனவுகளாக வந்து அமையும் புள்ளிகள் கடைசிப்புள்ளியாக இல்லாமல் அதுவும் ஒரு முதல் புள்ளியாக இருப்பதுதான் வாழ்க்கையின் விசித்திரம்.

பூரிசிரவஸ்  பெருங்காதலன், பெருங்குலத்தவன், பெருநிலத்தவன் என்ற மூன்று கனவுகள் காண்கின்றான். மூன்று கனவுகளையும் பெண்களை மையமாக வைத்துக்காண்கின்றான். பெண்களை மையமாக வைத்து காண்பதே அவனுக்கு எளிதாக இருக்கிறது. கதையை ஆரம்பிக்கும் முன்னே கிளைமாக்ஸை அறிந்துவிட்ட இயக்குனரின் மனநிலை.  கிளைமாக்ஸுக்காகவே பின்னப்படும் கதைகளில் எத்தனை ஓட்டடைகள் உள்ளனவோ அத்தனை ஓட்டைகள் பூரிசிரவஸின் கனவிலும் உள்ளது. இறுதிப்புள்ளி தெரிந்துவிட்டதாலேயே அதன் தூரம் அதற்கான உழைப்பு, தடைகள் அவன் கண்களுக்கு தெரியாமல் ஆகிவிடுகின்றது. 

காதலிப்பதற்கு ஒருத்தி தேவை என்பதற்காக தேவிகையை கனவுக்காண்கின்றான். பால்ஹிககுலத்தவன் என்ற கட்டமைப்பில் உயர விஜயை கனவுக்காண்கின்றான். அஸ்தினபுரியுடன் சரியாசனம்பெறவேண்டும் என்ற எண்ணத்தில் துச்சளையைக்கனவுக்காண்கின்றான். கனவுகள் செல்லும் பாதைகளில் தடைகளே இருப்பது இல்லை ஆனால் நிஜங்கள் செல்லும்பாதையில்தான் எத்தனை எத்தனை தடைகள் உள்ளன. தடைகள் வந்து பாதையடைத்து தடையாகும் வரை அவைகள் தடை என்று தடைகளுக்குகூட தெரிவதில்லை.  தடைகள் என்பது கூட முழுவதும் தடைகள் அல்ல அடுத்த கட்ட கிளை முளைப்பதற்கான ஒரு கரும்பின் கணு.  

பூரிசிரவஸ் காணும் கனவுகள் நியாயமானவைதான் அதனால் அவனை சந்திக்கும் பெண்கள் அவனுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றார்கள். நிஜங்களின் நியாயங்களோ பெண்களின் முகம்பார்த்து உட்கார்ந்து இருப்பதில்லை, நிஜயங்களின் நியாயங்கள் பஞ்சபூதங்களையே புரட்டிப்போட்டு அதன்மீது நடக்கும் கொடூரமானக்கால்கள் கொண்டதாக இருப்பதால் பெண்கள்மீது நடப்பது அதற்கு மலர்ப்பாதையில் நடப்பதுபோல்தான் இருக்கிறது. 

பூரிசிரவஸின் கனவுகளை நிஜயங்களின் நியாயங்கள் என்னும் கணைகள் சிதைக்கின்றன. தேவிகையை பீமன் சிறையெடுத்தது பாண்டவர்களின் நியாயம். சல்லியர் வியஜை இன்று பூரிசிரவஸுக்கு மணம் முடிக்கமாட்டேன் என்பது சல்லியரின் வளர்ச்சியின் நியாயம். துரியோதன் துச்சளையை சிசுபாலனுக்கு மணம்முடிக்க நினைப்பது கௌரவர்களின் நியாயம். கனவுக்காண்பதற்கு முன்பு கனவுகளை சிதைக்கும் கணைகளை தாங்கும் கேடயங்களை உருவாக்கிக்கொள்வது நல்லது. சாத்தியகி அருகில் பூரிசிரவஸ் வைக்கும்போது இந்த குறள் ஒலிக்கிறது. ஒருவன் ஏன் நிம்மதியாக இருக்கிறான், மற்றொருவன் நிம்மதியற்று தவிக்கிறான். 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

ஒருவன் எத்தனைக்கனவுகள் காண்கின்றானோ அத்தனை மனிதர்கள் அந்த கனவுகளை தனித்தனியாக காணும்படி இந்த உலகத்தைப்படைத்தவன் கனவு கண்டுக்கொண்டு இருக்கிறான் என்பதை பூரிசிரவஸ் வாழ்க்கை உணர்த்துகின்றது. 

ஒருவன் காணும் கனவுகள் யாரோ ஒருவனுக்கு அவனை எதிரியாகவும் செய்யும் அதிசயம் கண்டு ஆச்சரியாமக இருக்கிறது. 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.