அன்புள்ள ஜெமோ
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிற அனுபவம் அற்புதமானது. நான் இருந்துகொண்டிருப்பது ஒரு பக்கா வியாபார உலகம். இங்கே எல்லாமே பணம் கணக்குதான். ஆனால் வெண்முரசு என்னை இன்னொரு உலகத்துக்குக் கொண்டுபோயிற்று. அங்கே ஒரு கனவிலே வாழ்வதுபோல வாழ்ந்துகொண்டிருந்தேன். ஆனால் யோசித்துப்பார்த்தால் ஆச்சரியம். அங்கேயும் இதே கணக்குகள்தான். இதே பிரச்சினைகள்தான் இருக்கின்றன. அங்குள்ளதும் இதே கார்ப்பரேட் வார் தான்.
அப்படியென்றால் ஏன் அது கவர்கிறது என்றால் அது வேறு ஒரு உலகம் என்று தோன்றுவதனால்தான். அதற்கும் நாம் வாழும் உலகுக்கும் சம்பந்தமில்லை என்பது ஒரு காரணம். அதைவிட அதெல்லாம் ஒரு புராணமாக மாறி அதன் எஸென்ஸ் மட்டுமே ந்மக்கு கிடைப்பதும் ஒரு காரணம். இரண்டும் கலந்து வருவதனால்தான் இந்த மகிழ்ச்சி வருகிறது என்று நினைக்கிறேன்
ஒரு பெரிய விளையாட்டு போல இருக்கிறது. பந்தை யார் கொண்டுபோய் கோல் அடிக்கப்போகிறார்கள் என்பது பரபரப்பாக உள்ளது. அதில் திறமையின் அம்சமும் இருக்கிறது சான்ஸும் இருக்கிறது. ஆனால் பீமன் பெரும்பாலும் அதிர்ஷ்டசாலியாகவும் துரியோதனன் அதிர்ஷ்டக்கட்டையாகவும் இருக்கிறான்
ராம்