ஆசிரியருக்கு ,
நுண்மையாகம் என்பதைப்பற்றி தான் நான் அடிக்கடி எண்ணிக் கொண்டிருக்கிறேன் , நிச்சயம் நீங்கள் பயன்படுத்தும் பொருளில் மட்டும் அல்ல இது .
இது மூன்று வகைப் படும் எனத் எனக்குத் தொன்றுகிறது:
1. உங்கள் பொருளில் அது இன்னமும் கூர்மையை நோக்கிச் செல்வது (கவிதைகளில் )
2. விரிவக்கம் செய்வது, அதாவது பெரிதாக்கிப் பரத்துவது (ஓவியத்தில் , இசையில் )
3. மனம் அதன் உச்ச அவதான சாத்தியத்தில் இருக்கும் போது புற உலகையும் , வாழ்க்கையையும் நுணுகி அறிவது -இதற்கு மனம் அதிசாத்தியத்தில் இருக்க வேண்டும்,அதே சமயம் எதிர்படும் உலகும் தனது அதிசாத்தியத்தை நம் முன் நிறுத்த வேண்டும்.
அவ்வாறு நிகழ்ந்த சந்திப்பு தான் இன்றைய பகுதி. பூரி சிரவஸ் காணும் வெளி உலகை நாம் காண்பது மிக அரிது. துல்லியமாகத் தெரியும் மலையும் , குகைகளும் , பருந்தின் இறகுகளும் அதன் நிழலும் , வெயிலின் நிறமும் ஒளியும் அது பிரதிபலிக்கும் அசிக்னியும் ஒரு காட்சி சொர்க்கம். மரங்களின் தலையில் ஒரு நகரம் , ஒலித்து வழியமைக்கும் மரப் பாலங்கள் , ஒவ்வொரு வீட்டிலும் ஒரு படகு, கொலை மிருகம் போல முனகும் மரப் பட்டைகள் , கீரிகள் அதன் நாணல் பூ வால்கள், என இன்றைய காட்சித் தொகுப்பு காண மனம் கோடி வேண்டும்.
இறுதியில் நிகழும் அந்த நாடக சந்தர்பமும், இவ்வாறு வீசப் படும் பகடையின் கண்களாக பூரிசிரவஸ் உருள்வதும் வெண் முகில் நகரின் மிக வசீகரமான பாத்திரமாக அவன் ஆகிவிட்டான். எளிதில் கவரப்படும் ஒரு ரோமேன்டிக் நாயகன் , எளிதில் அதிலிருந்து விடுபட்டும் விடுவான்.