சம்படை என்னும்
ஒரு எளிய பாத்திரம், அரசியல் சிடுக்குகள் எதுவம் அறியாத, தெரியாத எளிய பெண், வந்துபோகும்
குறுகிய வழியிலும் பெரும் சித்திரத்தை மனதில் எழுதிவிட்டுச்செல்கின்றாள். அழி யும் அந்த பாத்திரம்
இறப்பை தொட்ட விதம் எண்ணி வியக்கிறேன்.
கண்ணன் அவளிடம்
பேசும் நேரத்தில் தன்னையும்மீறி, அவளுக்குள் உள்ள பெண் என்னும் தாய்மையின் உந்துதலால்
“கண்ணா!” என்று ஒற்றைச் சொல் சொல்வாள் என்று கடைசிவரை எதிர்ப்பார்த்து நின்றேன். அவளுக்குள்
வாழும் தெய்வமோ, அணங்கோ அதை செய்துவிடும், அந்த கணத்தில் அவள் இறந்துவிடுவாள் என்று
நினைத்தேன். அதை அவள் செய்யாததாலேயே இன்னும் கனம்கூடிய பாத்திரமாக, அவளுக்கு உரிய ஆழத்திலேயே
அவள் இருந்தாள் என்ற பிம்பம்கூடி வருகின்றது.
கண்ணன் பேசியும்,
அவள் பேசாமல் மௌனமாகவே இருந்து, மௌனமாகவே இறந்துவிட்டாள் என்பதை படிக்கும்போது மனதை
உலக்கிவிட்டுத்தான் செல்கின்றாள்.
அன்றறிவாம் என்னாது அறம்செய்க
மற்றது
பொன்றும்கால் பொன்றாத் துணை என்று வள்ளுவர் சொல்லும் குறளை இங்கு கண்ணன்
வாழ்ந்துக்காட்டிவிட்டு செல்கின்றான்.
அடுத்த முறைவரும்போது
பார்த்துக்கொள்ளலாம் என்று கண்ணன் நினைத்து இருந்தால் அல்லது பார்க்கவே வேண்டாம் என்று
நினைத்து இருந்தால் எப்படி இருக்கும்?
இந்த கண்ணன் சம்படையிடம்
ஏன் சென்று பேசினான்? எல்லோறும் கைவிட்ட ஒரு சீவனை இறைவன் கைவிடுவதில்லை என்றுக் காட்டவா?
எதுவுமே செய்யாமல் சும்மா இருப்தே ஒரு தவம், அந்த தவத்தில் ஆழ்ந்து இருத்தல் எளிதல்ல
என்பதை கண்ணன் சம்படையிடம் கண்டுக்கொண்டானா? தவமில்லா அவளின் தவத்தை மெச்சிதான் அவள்
பாதம் பணிந்தானா? அவன் தொடுதலில், அவன் தரிசனத்தில் அவள் அடைந்தது என்ன? அதற்கும் அப்பால்
இந்த மானிட வாழ்க்கையில் அவள் பெறுவதற்கு வேறு ஒன்றும் இல்லை என்று அவள் விண்ணேகி விட்டாளா?
சம்படை மானிடபெண்ணாக
பிறந்து வாழ்க்கையின் கடைசி மதிப்பெண்ணாகிய பூஜியத்தைகூட அவள் பெறவில்லை ஆனால் தோற்றுவிட்டாள்
என்று சொல்லமுடியவில்லை.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே-கந்தர் அனுபூதி
சும்மவே
இருக்கமுடியாத வாழ்க்கையில், சும்மா இருக்கும் வாழ்க்கையை சிலருக்கு
தெய்வம் அளிக்கின்றதா? சும்மா இருப்பவளையும் அம்மா என்று வணங்க ஒருவன்
வருவானா?
சும்மா
இருந்தவள் இறந்து, சும்மா இருக்க நினைத்த பீஷ்மரை பேசவைத்தாள் என்பதை
அறிந்தபோது என்ன தெய்வத்தின் விளையாட்டு! தெய்வத்தின் விளையாட்டுதான்
வாழ்க்கையோ? அல்லது வாழ்க்கையின் விளையாட்டைத்தான் தெய்வத்தின் தரிசனம்
என்கின்றோமா? கதை மட்டும் அல்ல
மானிட வாழ்க்கையும் சேர்த்து நெய்யப்படுவதுதான் வெண்முரசின் அற்புதம்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.