Thursday, September 21, 2017

சுவாலைகளின் சுவாரஸ்யங்கள்

அன்பின் ஜெ,வணக்கம்.

நீர்க்கோல -  எழுதழல்  இடைவெளியில் சிறு அலைகழிப்பு மனதில் இருந்துகொண்டேயிருந்தது. செப்டம்பர் பதினாலாம்தேதி மாலை முதலே "இன்னும் ஆறு மணிநேரம்",  " இரண்டு மணிநேரம்" என்று நண்பர்களோடு கவுண்டவுன் பரிமாறிக்கொண்டேயிருந்தேன்.

பாண்டவர்களின் முதல்படைநகர்வில் வென்று கொணர்ந்த சௌவீரத்து மணிமுடியை கூச்சத்துடன் ஏற்றுக்கொண்டவள், கொற்றவை குடிகொண்ட குந்தியாய் குருதிபலியோடு நகர் நுழைகிறாள்.

"அவர்கள் நாடாள்வதை நான் காணவேண்டும்… அதற்காக முப்புரத்தையும் எரிப்பேன்"

அம்பையின் ஆலயத்தில் தன் கையால் பலிகொடுக்கையில் குந்தியின் முகபாவனைகள் அபிமன்யுவிடனான உரையாடலினூடாக வெளிப்படுகிறது.

விதுரரோடும், சகுனியோடும் நானும் அஸ்தினபுரியை சுற்றிவந்தேன். வடக்குவாயிலின் வழியே 
சட்டம் அடிக்கப்பட்ட சாளரத்தை சகுனியின் குதிரை நெருங்குகையில்  மனக்குதிரை முன்பாகவே ஓடி சிவையை தொட்டுவிட்டது.

"பெரீந்தையே!!!" என்று கர்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வலம் வந்த இளைய கௌரவர்களின் குறும்பு சற்றும் குறையாமல் அதகளமாய் இருக்கிறது.

வெய்யோனில்  மீண்டும் மீண்டும் வாசித்து சிரித்த பகுதி கர்ணன் இளைய கௌரவர்களை சந்திப்பது. 

[
எனக்கு மொத்தம் ஏழு புள்ள, அதுல ரெண்டு பொம்பளபுள்ள, என்னால அந்த ரெண்டதான் அடையாளம் கண்டுபிடிக்க முடியும், அதுவும் அவங்க ரெண்டுபேராலயும் என்ன அடையாளம் கண்டுபிடிக்கமுடியும்கிறதுனாலதான்..

யாரோட புள்ளன்னு எப்படி கண்டுபுடிப்பீங்கன்னு கர்ணன் கேக்கையில் துச்சலன் சொல்லும் பதில்.

நாலுவயசுக்கு மேலேயிருக்குற பசங்கள மட்டும் அழைச்சிகிட்டு போகலாமான்னு கர்ணன் கேக்க,

அதுக்கு முதல்ல எண்ணனுமே, அதுக்குண்டான கணக்குநாயகங்கள் அமைச்சுப்பணியில இல்ல இருக்காங்க..
என்று சொல்லும் துர்முகன்
]
அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது எழுதழலில் அவர்களின் அட்டகாசம்.

 "எப்போது எண்ணிப்பார்த்தாலும் ஒன்றிரண்டு குறைந்தும் கூடியும்தான் எண்ணிக்கை இருக்கிறது" என்று செவிலி பிரலம்பனிடம் அங்கலாய்த்து கொள்ளும்போதும் அதே சுவாரஸ்யம்.

 இளையயாதவர் குறும்பனைத்தையும் 
குத்தகைக்கு எடுத்தவனாய் அபிமன்யூ.  அபிமன்யுவை பார்ப்பதற்க்கு முன்னால் "தலையெழுத்துன்னு ஒண்ணு இருக்கு" அப்படீன்னு யார் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமாட்டான் பிரலம்பன்.

இது மூன்றாவது முறை. கடந்த இரு முறையும் "பேரரசே.." என்றும் "பிதாமகரே.." என்றும் இடைமறிக்கும்
 விதுரரை "இன்னும் ஒரு அடிவிழுந்தா ஆள் குளோஸ், அமைதியா வேடிக்கை பாக்கவேண்டியதுதானே, எதுக்கு குறுக்கால புகுந்து இந்தாளு துரியன காப்பாத்துறாருன்னு.." முன்பு விதுரரை கடிந்துகொண்டதுண்டு.

இம்முறை துரியன் உயிர்காக்கும் விதுரர், நிஷாதத்து அமைச்சராய் தெரிகிறார்.

 நிருதனும்,முக்தனும்,சுதீரனும் பிறவியெழுந்தவண்ணம் இருக்கிறார்கள்.

சிலந்திவலையாய் பின்னிச்செல்லும் கௌரவவனத்து
காலடித்தடங்களைப்போல் 
பரபரவென பலதிசைகளில் பற்றிக்கொண்டிருக்கிறது
எழுதழல்.

கைவிடுபடை விசையாய்
வஞ்சம்கொண்டிருக்கும் ஆழ்மன அபிலாஷைகள் சுவாரஸ்ய சுவாலைகளாய் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.

யாருடையது எரிந்து தணியப்போகிறது?.
யாருடையது கணன்று எரியப்போகிறது?.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.