Saturday, September 23, 2017

எழுதழல் - அபிமன்யுவெண்முரசு நாவல்கள் பொதுவாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படுவது வழக்கம் தான், முதற்கனல்,பிரயாகை, பன்னிருபடைக்களம் -  தவிர்த்து. மழைப்பாடல் - விதுரர், வண்ணக்கடல் - இளநாகன், வெண்முகில்நகரம் - பூரிசிரவஸ் மற்றும் சாத்யகி, இந்திரநீலம் - திருஷ்டதுய்மன் மற்றும் சாத்யகி, காண்டீபம் - சுஜயன் மற்றும் மாலினி, சொல்வளர்காடு - தருமன், கிராதம் -சண்டன் மற்றும் வியாசரின் மாணவர்கள், மாமலர் - முண்டன் மற்றும் பீமன், நீர்க்கோலம்பாண்டவர்கள், முக்தன், சம்பவன், கஜன் மற்றும் சுபாஷினி

அவ்வாறு பார்க்கையில் இந்த நாவல் அபிமன்யு பார்வையில் விரிவதாக வரக்கூடும்அபிமன்யுவின் சித்தரிப்பு முக்கியமான ஒன்று. இளமை கொப்பளிக்கும் ஒருவனாக வருகிறான். முக்கியமாக அவன் 'இன்றில்' இருக்கிறான்.நேற்றோ, நாளையோ அவனுக்கு ஒரு பொருட்டு அல்ல. அவன் செய்யப்போவதை அக்கணமே முடிவெடுக்கிறது. அதன் விசையோ, தேவையோ, காரணமோ அவன் கையில் இல்லை, அவை அவனுக்கு ஒரு பொருட்டும் அல்ல. அபிமன்யுவின் நகர் நுழைவு அத்தியாயத்தில் வரும் ஒரு கூற்று அவனை முழுமையாக வரையறுக்கிறது - 'அறிவும் அறியாமையும் இணையாக இருக்கக் கூடியவன்' - வழமை போலவே இதை திருதா தான் உரைக்கிறார்

அவன் ஏன் இவ்வாறு இளமை பொங்க இருக்க வேண்டும்? ஏனென்றால் அவன் தான் மூத்தவளான ஜேஷ்டா தேவியின் பிடியில் இருக்கும் இளைய யாதவரை மீட்கப் போகிறான். மூத்தவளை இளமையைக் கொண்டு, காலமென்றில்லாத ஒன்றில் இருப்பவரை கணத்தில் வாழ்பவனைக் கொண்டு தானே மீட்டாக வேண்டும்!! 

அபிமன்யுவின் இந்த சித்திரம் புதிதல்ல.இது நீர்க்கோலத்தின் இறுதியிலேயே வந்து விட்டது. நீர்க்கோலத்தின் முக்கியமான கரவுகளில் ஒன்று அர்ச்சுனன் உத்தரையை தன் மைந்தனுக்கு என ஏற்றுக் கொண்டது. மற்றொரு பெண்ணை மனைவியாக ஏற்க அர்ச்சுனனுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. இருப்பினும் அவன் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. சரி அவளை ஏன் அபிமன்யுவுக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? இதை நீர்க்கோலத்தின் இறுதி அத்தியாயத்தில் அவன் உத்தரையிடம் பேசுவதில் இருந்து ஒருவாறாக ஊகிக்கலாம். "தெய்வங்கள் வனைந்து வனைந்து மேம்படுத்திக்கொள்கின்றன என்பார்கள். அவன் பணிக்குறை தீர்ந்த பழுதற்ற அர்ஜுனன். இளையவன், நானே அஞ்சும் வில்திறலோன்". ஆம், அவள் பிரஹன்னளை ஊடாகத் தேடியது முற்றிலும் இளைய அர்ச்சுனன்கரவுக்காட்டில் இருவரும் உறவு கொள்ளும் விவரணையில் அவர்கள் வானில் சிறகுடன் பறப்பாதாக வரும். பறவைகளால் ஆன உலகைக் கொண்ட இளம் பார்த்தனின் உணர்வு அது. அந்த உறவின் இறுதியில் அவள் உத்தரனாக மாறி பிரஹன்னளையுடன் காமம் ஆடுவாள். இது தான் அர்ச்சுனனுக்கு அவளின் தேடல் என்ன என்பதை உணர்த்திய இடம். எனவே தான் அவளின் தேடலுக்கு உரியவனாகிய, இளையவனாகிய அபிமன்யுவைத் தேர்ந்தெடுத்தான்

அது மட்டுமல்ல, அபிமன்யுவில் அர்ச்சுனனில் அவ்வப்போது வெளிப்படும் பெண்மை கலந்த ஆண்மை நிரந்தரமாக இருக்கிறது. இது நாவலில் வெளிப்படையாக வரவில்லை. ஒரு இடத்தில் திருதாவிடம் தன் மற்ற பெயர்கள் என அபிமன்யு கூறும் 'சௌபத்ரன் அர்ஜுனி கார்ஷ்ணி ஃபால்குனி' பெயர்களில் சுபத்ரையின் மைந்தன் என்பதைத் தவிர வருபவை எல்லாம் அர்ச்சுனனின் பெயர்களின் மென்நீட்சிகளே. அதையே அவன் விளையாட்டாக 'வெண்ணை உருகினால் நெய் - அர்ச்சுனனின் நெகிழ்வான வடிவம்' என்கிறான். இதை மிகச் சரியாக ஷண்முகவேல் பிடித்துள்ளார்குந்தியின் முன் வாளை கூர் பார்க்கும் அபிமன்யுவின் உடலில் ஒரு பெண்மைக்குரிய நெகிழ்வு இருப்பதைக் காணலாம். இந்த நெகிழ்வு அநேகமாக அனைத்து அபிமன்யு படங்களிலும் வந்துள்ளது. எழுதழல் சர சரவென பற்றுகிறது

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்