Monday, September 18, 2017

"துயிலும் கனல்" -

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

"துயிலும் கனல்" - அத்தியாயத்தின் தலைப்பே ஒருவித கூறமுடியாத சிறு பதட்டத்தை அளித்தது.  அது என்னவென்று விளக்கிக்கொள்ள முயல்கிறேன்.  துயில் கருணை மிக்கது, இக்கனலோ அதை அழிக்கக் கூடியது.  உறங்கும் போதும் விழித்திருக்கும் ஞானியரின் ஒளி போன்றதல்ல, இக்கனல் கருணை அற்றது.  கனல் துயில்வதில்லை, துயில்கின்ற கனல் அருளுடையது அல்ல.  இருளின் பெருங்கருணைக்கு இடர் இக்கனல்.  முதற்கனல் எழுதழல் ஆகிறது.  அம்பாதேவி பலி கொண்டு எரிக்கும் நெருப்பென எழுகிறாள்.  கண்ணகி மதுரையை எரித்தபோது அதன் வீதிகளில் ஓடுவதாக ஒரு எண்ணம்.  ஆனால் அவள் இளங்கோவடிகளின் சமண கண்ணகி, அவர் தரும் விதிவிலக்குகளின் பட்டியலை ஏற்றுக்கொண்டு ஊர் எரிக்கிறாள், அம்பை வேறு அவளது எரி வேட்கையில் தப்புவது ஒருவரது தனிப்பட்ட தெய்வக் காவல், அருள் அல்லது ஊழ் அல்லது சாமர்த்தியம்.  சரி அதை கடந்து விடுகிறேன்.

"நடை" - இச்சொல்லின் பொருளுக்கு உண்மையில் பொருள் தருகிறது வெண்முரசு.  "நானெல்லாம் ஒரே நாளில் இரண்டாயிரம் பக்கங்கள் படித்து விடுவேன்" என்பது இங்கே ஆகவே ஆகாது.  வணிக எழுத்துக்களின் பக்கங்களில் நானும் வேகமாக ஓடி இருக்கிறேன்.  "அடடா ஒரே நாளில் இத்தனை பக்கங்கள் படிக்கிறாயே. உன் அறிவே அறிவு" என்று மகிழ்ந்தும் இருக்கிறேன்.  படித்து விட்டோம் என்று எண்ணமும் இருக்கும்.  மாறாக இங்கு வெண்முரசின் அரச வீதிகளில், கணிகர் வீதிகளில், மட்டுமல்ல குறுங்காடுகளில், பெருவனங்களில், சிற்றூர்களில், வெளிகளில் எங்குமே வாசகருக்கு "நடை" மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.  எங்கும் ஓடிக் கடக்க முடியாது.   எதுவும் கவனிக்கப்படாமல் விடப்பட முடியாது. ஒரு சொற்றொடரை முதலில் வாசித்தவுடன் அது பாதி பொருளையே தந்து மீதி சொற்களாகவே நிற்கிறது. இரண்டாம் முறை அச்சொற்றொடரை ஒவ்வொரு சொல்லாக தொட்டு மலர்த்த வேண்டியிருக்கிறது.  ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருளுக்கு சென்று நின்று கற்பனை செய்து, கண்டு, உய்த்துணர்ந்து பிறகே நகர முடிகிறது.  ஓடினாலோ "படிக்கவே இல்லை. தவறவிட்டாய்" என்று தோன்றுகிறது.  மேலோட்டமான எழுத்துக்களில் கிடைக்கும் படித்துவிட்ட உணர்வை தருவதில்லை.  வாசிப்பு எப்படி தியானம் ஆக முடியும் என்ற கேள்விக்கு இது விடை போலாகிறது.  எதையும் அரைகுறையாக, கவனம் தராமல் இங்கு பார்க்கவே முடியாது.  ஒரு அத்தியாயத்திற்கு 30-40 நிமிடங்கள்.  ஒன்று உண்மையிலேயே வாசி அல்லது இந்த பக்கம் வராதே.  அதுசரி ஏன் இப்படி எழுத வேண்டும்? மிகவும் எளிமையாக அனைவரும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொள்ளும் விதமாக மக்கள் கலை இலக்கியமாக ...? அதற்குத்தான் முகநூல் அறிஞர்கள் இருக்கிறார்களே உங்கள் தேவைகளை அவர்கள் நிறைவு செய்வார்கள்.

முன்பு முகநூலில் "எழுத்தாளர்" என்று கூறப்படும் ஒரு கெட்டவார்த்தை அறிஞர் தங்களுடைய சொற்றொடர்கள் சிலவற்றைப் போட்டு கேலி செய்து வசைகள் செய்திருந்தார்.  அப்போது இது படிக்கக் கடினமாக உள்ளது என்பதைத் தாண்டி கடும் பகையும் கெட்டவார்த்தைளும் வசைகளும் எதற்காக என்று தோன்றியது.  அதற்கான விடை எனக்கு வெண்முரசு வாசிப்பில் கிடைத்தது.  நகுஷனின் படைகளுடன் ஹுண்டனின் படைகள் சண்டையிடும் இடத்தில் ஹுண்டனின் படையில் இருக்கும் முதிய வீரர் ஒருவரும் இளைய வீரர் ஒருவரும் பேசிக்கொள்வது நினைவுக்கு வந்தது.  அப்போரில் நகுஷனின் படை வீரர்கள் அணிந்திருக்கும் கவசத்தைத் தைத்து உடலைத் தொடாமலே இருந்து விடும் ஹுண்டனின் தரப்பு அம்புகள். மேலோட்டமான வாசிப்பு கொண்ட நூறு பேர் ஆழமும் கூர்மையும் கொண்ட தீவிர வாசிப்பு கொண்ட ஐந்து பேரைக் கூட அஞ்சித்தான் ஆகவேண்டும்.  அங்குதான் வசவுகளின் தேவை வருகிறது, காழ்ப்பும் வருகிறது, ஆனால் அவையே அவர்களுக்கு வீழ்ச்சியையும் கொண்டு வருகிறது.  காலம் காலமாக இதுதான் நடக்கிறது - முதிய வீரன் சொன்னது போன்று.  "யாருடைய கருத்தையும் ஆழமாக சென்று எதிர்கொள்ளத் தேவையில்லை, கெட்டவராக சித்தரித்து திட்டிக்கொண்டிருந்தால் போதும்.  எப்படியும் அவர்கள் தான் வெல்வார்கள்.  நாம் தோற்போம்.  ஏன் ரொம்ப மெனக்கெட வேண்டும்?" என்ற தெளிவு -முதிய வீரனுடையதைப் போன்று- இவர்களுக்கும் உண்டு என்று எண்ணுகிறேன்.

எழுதழலுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரு எம்ஜிஆர் படத்தின் கத்திச் சண்டை பார்க்கும் மனக்கிளர்ச்சியுடன் வெறி நாய்கள் இருக்கும் இடம் சென்று அவற்றிடம் கடிபடாமல் லாவகமாக தப்பி விளையாடி வந்தேன்.  மற்றபடி அவற்றின் மீது தவறு இல்லை.  அவை அவற்றின் இடத்தில் தான் இருக்கின்றன.  இதைச் சொல்வது உங்கள் நேரத்தை வீணடிப்பது என்றால் மன்னித்து விடுங்கள்.  


அன்புடன்
விக்ரம்
கோவை