இனிய ஜெயம்,
வெண்முரசில்  இன்றைய இளம் அபிமன்யுவின்  சித்திரத்தை வாசித்த பின்  தேடி எடுத்து மீண்டும் விரித்த கரங்களில் கதையை வாசித்தேன்.  பல வருடம் முன்பு  அந்தக்கதையை எழுதுகையில் நீங்கள் கொண்ட ,மொழி மற்றும் உணர்வு எழுச்சியில் இருந்து  இன்று  மிக மிக உயர்ந்து வந்திருக்கிறீர்கள். 
நீலன் மட்டும் அன்றும் இன்றும் மாறாத அதே தீவிரமும் புன்னகையும்  கொண்டவனாக விளங்குகிறான். எத்தனை லாவகமாக  உணர்வு கத்திகளை , பொம்மைகளாக மாற்றி விளையாடுகிறான்.   பிருகத்காயர்  அர்ஜுனனை நோக்கி வீசும் அதே கத்தியை,  அந்த ஆற்றல் கொஞ்சமமும் குறையாமல்  ,அர்ஜுனனைக்கொண்டு  பிருகத்காயரை நோக்கியே மீண்டும் திருப்பி விடுகிறான். 
புலன்கடந்தவனா நீ.  எனில்  உன்னை இங்கே இப்படி நிற்க வைப்பது எது ?  உனது க்ரோதம்தானே  என்கிறார் ரிஷி.  அர்ஜுனனின் வில் தழைகிறது .   அர்ஜுனா  அபிமன்யுவை நினைத்து  உன் வில்லை உயர்த்து  என்கிறான் நீலன்.  ஆம்  அர்ஜுனன்  கடக்க வேண்டியது க்ரோதத்தை . அதற்கான தருணம் இது அல்ல. இது போர்க்களம். இங்கே க்ரோதமும் ஒரு படைக்கலம் .   கிருஷ்ணன்  அதைத்தான்  மிக சரியாக இயக்குகிறான் .
ரிஷி  தந்தையின் துயரை முன்வைத்து  அர்ஜுனன் உறுதியை குலைக்க  ,நீலன்  திரௌபதியின் துயரை  முன்வைத்து அர்ஜுனனை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறான். 
ரிஷியின்  இறுதி  ஆயுதத்தின் முன்  அர்ஜுனன் முற்றிலும் நிலை குலைந்து போகிறான்.    தனது  மைந்தனின் பொறுத்து  ஏழேழு ஜென்மம் நரகில் உழலும் வண்ணம் தனது  தவ வலிமை மொத்தமும் தாரை வார்க்கிறார்.    அர்ஜுனன் தடுமாறுகிறான் .   அர்ஜுனன் அம்புகளால் வானில்  மிதந்துகொண்டிருந்த  ஜெயத்ரதனின் தலை  களம் நோக்கி இறங்குகிறது.  கௌரவப்படைகளில் பெரும் ஆரவாரம்.  மகனின் தலையை  கீழிறங்கும்  எவரும்  , மகனுடன் சேர்ந்து மடியவேண்டும்  என்பதே ரிஷி வாங்கிய வரம். 
அர்ஜுனா   ஏழு ,உயர்த்து உன் காண்டீபத்தை   இந்த ரிஷியின்  அடிவயிற்று நெருப்பை  எண்ணி உனது அம்பை விடு.   முழங்குகிறான் நீலன் .  காண்டீபம் அதிர  ஜயத்ரதன்  தலை  இனி கீழேயே வராது என்னும் உயரத்துக்குப் பறக்கிறது. 
ரிஷிக்குப் புரிந்துவிடுகிறது.  அர்ஜுனனை வெல்ல இயலும்  அவன் வெறும் அர்ஜுனனாக மட்டும் இருந்தால்.  அவன் நீலனின் படைக்கருவி.   ரிஷி   நீலனின் காலில் விழுகிறார்.  நீலனின் வழிகாட்டுதலின் படி   தனது மகனின் தலையை கரங்களில் வாங்கி கீழே வைக்க   விரித்த கரங்களுடன் சென்று அமர்கிறார். 
வெண்முரசின்  ஒளியில் வைத்து இன்று இக் கதையை வாசிக்க இக் கதை கிளர்த்தும் துயரம்  அளப்பரியது.   வெண்முரசில்  அபிமன்யுவின் தோள் மேல் கை போட்டபடி அஸ்தினாபுரிக்குள் நுழைந்த உணர்வு. 
அர்ஜுனனை   அபிமன்யுவை நினைத்துக்கொண்டு அம்பு விட சொல்கிறான் நீலன். அர்ஜுனன் என்ன அங்கே அப்போது பிரலம்பன் நின்றிருந்தாலும்  அதே க்ரோதம்தான் கொண்டிருப்பான்.    
அர்ஜுனனை   ரிஷியின்  அடிவயிற்று நெருப்பை  எண்ணி அம்பு விட சொல்கிறான் நீலன்.   வெண்முரசு பின்புலத்தில்  ரிஷியின்  தவிப்பு   இப்போதுதான் முழுமையாக உள்ளே இறங்கி உலுக்குகிறது.   தனது மகன்   செய்யப்போவதெல்லாம்  தெய்வங்களும்  திகைத்து நிற்கும் பிழைகளையே .  நிச்சயம்  அவன் தலையை யாரேனும் கொய்வர்   என்பதை அவனது  தந்தை உள்ளுணர்ந்ததாலேயே  தனது தவத்தைக் கொண்டு , மகன் தலையை இரக்கும்  அவனும் அக் கணமே  தலை சிதறி இறக்கவேண்டும் என வரம் வாங்குகிறார். 
எனில்  எத்தனை காலம்  ஒவ்வொரு நாளும்  தனது மகனை கொல்லப் போவது யார் யார் என ஒவ்வொரு கணமும் முடிவிலா நரகத்தில்  வாழ்ந்திருப்பார்.   அந்த நரகத்தில்  வாழ்ந்து வாழ்ந்தே, ஏழேழு  பிறவி  நரகில் உழன்றாலும் சரி என தவ வலிமை அனைத்தையும் திறக்கிறார். 
விரித்த கரங்களுடன்  மகனின் தலையை ஏந்த காத்து அமர்ந்திருக்கிறார்.  எத்தனை வலி மிகுந்த தருணம்.  மகனை முதன் முதலாக தொடப் போகிறார்.  ஆம் முதன் முதலாக . அவனது கொய்யப்பட்ட தலையை மட்டும்.   முதல் முறையாக  அவனது சிரசு கோதப் போகிறார்.   இருவரும் அக்கணமே மரணிக்கப் போகிறார்கள். 

