Monday, September 4, 2017

கோலத்தின் முதற்புள்ளி


அன்புநிறை ஜெ,

முதற்புள்ளியில் கோலம் முடிவடைகிறதா தொடங்குகிறதா? ஏதுமறியாதது போல கரம் நிலம் தொடும் முதற் புள்ளி பெருங்கோலம் ஒன்றின் மையம் மட்டுமே என்பதை கோலம் முழுமை கொள்ளும் போது ஒவ்வொரு முறையும் உணர்வதுண்டு.

பிரம்ம சூத்திரம் குறித்துத் தாங்கள் எழுதியவற்றில் பகிர்ந்தவற்றில் பலமுறை சொன்னது - முதல் சொல்லில் சாராம்சத்தை முற்றும் சொல்லி விடுவது நமது மரபு. 'சித்த விருத்தி நிரோத:" அதன் பின்னர் அனைத்தும் அதன் உள்நோக்கி விரிந்து நுணுகிச் செல்லும் பயணம் தான். ஆழம் செல்லச் செல்ல முதற் சொல் துலங்கி வரும்.

அதுபோல பாயிரம் சொன்னதை விரித்துச் சொல்லியிருக்கிறது நீர்க்கோலம்.

அலையென எழுவதனைத்தும் ஒன்றே போல மீள மீள நிகழும் நீர்ப்பரப்பு காண்பதற்கு கணமும் விழிசலியா அதிசயமாய் இருப்பதைக் கடல் என்கிறோம்.மீண்டும் மீண்டும் ஒன்றெனவே நிகழும் தருணங்களை, ஒவ்வொன்றும்  புதியதென தனக்கேயானதென எண்ணிக் கவலையில் அச்சத்தில் ஆங்காரத்தில் கழிக்கும் மனித யத்தனங்களை வாழ்க்கை என்கிறோம்.

புல்நுனியில் காணும் ஒரு சூரியத்துளி போல இக்கதை மொட்டென முதல் பாயிரத்தில் துளித்து நிற்கிறது -  அனைத்தும் நிறைந்த பொன்னொளிர் வாழ்வைத் துறந்து மறையாத ஒளியை வேண்டிய ஒருவனிடம் கதிரோன் சொல்கிறான் 
"ஒளிகொண்டவன் தன் ஒளியால் மறையவேண்டியவன்" "ஒவ்வொன்றும் பிறிதொன்றே என்றறிக!
என் வடிவே இருள்
பகலின் மறுபக்கமாகிய இரவும் எனதே"

இதுதானே நளனும் புஷ்கரனும் கண்டு கொள்வது. கலி ஓரிடத்திலிருந்து அள்ளி மற்றோர் இடம் நிரப்பும் சூதுக்களத்தில் இருபுறம் நிற்கும் அவர்கள்தானே ஒளியும் நிழலும். கரவுக்காட்டில் நிலவொளி காய் நகர்த்தும் ஆடற்களம்தானே இவர்கள் வாழ்க்கை.  

பிறந்தது முதல் சூதர் பாடல் எனும் ஒளி வெள்ளம் சூழ்
வாழ்க்கையிலிருந்து மறைந்திருக்க, கரந்து வாழ இடம் தேடும் பாண்டவர் - தன் ஒளியாலேயே மறைந்தும் வாழ்கிறார்கள். 

சூரியன் ஒளிந்து கொள்ள இடம் தேடி புவியின் மறுபுறம் சென்றாலும் அங்கும் ஒளியேற்றத்தானே அவனால் இயலும். அவன் ஒளிந்து கொள்ள ஒரே இடம் அவன் உருவாக்கும் நிழலே.

எனவே பாண்டவர்கள் அவர்களது நிழலில் எழும் சில எளிய மனிதர்கள் வழியாக தங்கள் ஒளியை மறைக்கிறார்கள்; ஒளியுடன் திகழ்கிறார்கள். 
பாண்டவர்களும் திரௌபதியும் ஒவ்வொருவரும் தங்களது நீர்க்கோல மனிதர்கள் வாயிலாக தங்களது எளிய புற உருத்தோற்றங்களை நடத்திக் கொள்கிறார்கள். 

தன் புற அழகின் சீர் காண ஆடி நோக்கத் தொடங்கும் மானுடர், ஆடிப்பாவை கண்டு உடல் பாவனைகளை அதிகரித்து மேலும் மேலும் என ஆடிமுன் தாங்களே ஆடிப்பிம்பத்தின் பாவையென ஆகிவிடும் தருணங்கள் உண்டு. இந்த வரலாற்று மானுடருடன் வாழ நேர்ந்த ஒவ்வொரு பனித்துளியும் சூரியனாய் மாறி ஒளி விடுகிறார்கள். 

பிருகன்னளையென நடை மாறும்முக்தனும், வலவனின் துளித்த சொட்டென மாறும் சம்பவனும், சைரந்திரியை தன்னுள் நிறைத்து சேடிக்குள் இருக்கும் அரசியை வெளிப்படுத்தும் சுபாஷினியுமென விராட பருவம் ஒரு புறம் விரிகிறது.  வலவன் சொல்லிச் செல்வது போல நிழல் மனிதர்கள் வாயிலாகவே இவர்களது கடைத்தேறல்.

உள்ளடுக்கில் கதை இன்னும் விரிந்து நுண்மை கொள்கிறது.
"உருவென்பது ஓர் ஆடையே" என்ற தமணர் மொழி நளனிலிருந்து பாண்டவர் வரை விரிகிறது.

வேனன் -  விழைவின் பொருட்டு கலியை ஏற்பவன். வேண்டியதனைத்தும் தரும் கலி வைக்கும் ஒரே நிபந்தனை  "கொள்வனவெல்லாம் உன்னுடையவை அல்ல" என்று நினைவில் கொள்ளுதல். அதை கலியருள் கொள்ளும் அனைவரும் மறக்கிறார்கள் -வேனன், நளன், புஷ்கரன், கீசகன் என நீள்கிறது பட்டியல். பிறரால் அழிக்க இயலாதது தானே அழியும் என்ற பெருநியதிக்கும் சாட்சியாகிறார்கள். 

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் - எனில் அததருணங்களில் அறவோன் என்ன செய்வான் என்பதற்கு அறத்தின் வழி கோல் காக்க காலந்தோறும் அமைச்சர்கள் எழுவதை வெண்முரசு காட்டுகிறது. எந்த உயிரும் கடையேற வழியின்றி போய்விடலாகாது என்ற பெருங்கருணையால் ஆண்களை எந்நிலையிலும் கைவிடாத பத்தினி தர்மத்தை போதித்த அறவோர், அரசனுக்கு எந்நிலையிலும் அறமுணர்த்த அமைச்சனை விட்டுச் செல்கிறார்கள். 

அனைத்தும் இழந்த கையறு நிலையிலும் அறவுணர்வு அறாத முதியோர் இருக்கின்றனர் - வேணன் நாட்டில் சாந்தர் போல, சுதீரர் காணும் முதியவர் போல. கொடுங்கோலனின் முதல் எதிர்ப்பை அன்னையரே அறைகூவுகிறார்கள் என்றும். 

நளன் - கரியவன் அழகன். புரவி வலன்; அடுதொழிலன். தான் தேர்ந்ததனைத்தும் நுண்மையைக் கடைந்து சொற்களாக்கி நூல் பல இயற்றுபவன்; கொற்றவையை திருமகளை இடம் கொண்டவன்; அதன் பொருட்டு பலரது பகை கொண்டவன். உடன் பிறந்தானை நம்பி சூதில் அனைத்தையும் இழந்து கானேகுபவன்; தீயில் கருகி புத்துயிர் கொள்பவன். 

அர்சசுனன், நகுலன், பீமன், சகதேவன், தருமன், திரௌபதியின் பதியென இவர்கள் ஐவரும் ஓருருவில் நிகழ்ந்தவன் நளன். 

தேவயானியின் மறு உருவென தமயந்தி - மணநாள் இரவில் சுங்கநிகுதி குறித்துப் பேசும் சக்கரவர்த்தினி; சூதப் பெண்களுடன் சமையல் பெண்டென வேறொருவன் நாடு நுழையும் விதி கொண்டவள் -  வேறொரு இளவரசிக்கு  சைரந்திரியென மாற்றுருவில் வாழ நேர்பவள். பிறப்பால், நினைப்பால், உருவால் பேரரசி பேரன்னை. மண்ணறியாப் பாதங்களால் முள்ளேறும் பாதை நடந்தவள்;  அவள் கால் நுழைந்த
முள்ளகற்றி, முள்ளேறிய மனம்
கொண்ட கணவன் 
அமையப்பெற்றவள் - திரௌபதியின் மறு உருவென்றும் சொல்லலாம் - கோலத்தில் தெற்றெடுத்தால் முதல் எங்கே!

புஷ்கரனும் உத்தரனும் - வெவ்வேறு எண்ணிக்கை காட்டினாலும் ஒரு கை வீசிய இருபகடை . சூரியனின் நிலையைப் பொறுத்து நிழல் கொள்ளும் நீளமும் உயரமும் வேறுபடுவது போல. மேகம் சூழ்ந்த வானில் அந்தி வரை கதிர் வெளிவராத நாளும் உண்டு.

"கலி தன்னை விரும்பி அணுகுபவர்களை மட்டுமே ஆட்கொள்ளமுடியும் என்ற சொல்பெற்றவன்”. கலி அருளால் பிறந்த நளனை சூழ்ந்திருக்கும் கார்க்கோடகன் அவனை நீங்கி புஷ்கரனைப் பற்றுகிறான். முற்றிலும் எதிர்விசையில் மறுமுனையில் வெளியேறும் புஷ்கரனைப் போல துரியன் தன் எல்லைகளை நோக்கி நகரத் தொடங்குவது கார்க்கோடகனைக் கண்ட நாளில்தான். 

நளன் உள்ளத்து முள், இன்னொரு சூதுக்களத்தில் சமன் செய்ய முடியகிறது.  பாண்டவர்களின் மனதில் தைத்த முள் மாபெரும் களம் காணக் காத்திருக்கிறது. மாபெரும் வஞ்சத்தோடு வாஞ்சையோடு நாகங்கள் காத்திருக்கின்றன. 

முதற்கனலில் மொத்தக் கதையும் அடங்கி விட்டது. புல்லி வட்டம் நோக்கி விரிய விரிய முதல் விதை முழுவனமாய்த் தெரிகிறது, வனம் சிறு விதையாய்க் கனிகிறது.

முதற்கனலில் சொன்னது போல குருகுலத்து மன்னர்களின் வாழ்க்கை என்பது அவர்களை நிழலெனத்தொடரும் நாகங்களுடன் அவர்கள் ஆடும் ஒரு பகடையாட்டம் மட்டுமே. 

//இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது.// கார்க்கோடகனும் கலியும் விசைகள் - அனைத்தும் உயிர்ப்போடிருக்க; நம் இருளை சமன் செய்ய ஒளி எழட்டும் என்றென்றும்.

மிக்க அன்புடன்,
சுபா