Monday, October 16, 2017

உறையின் உள்ளிருக்கும் வாள் (எழுதழல் 27)
சிலர் அதீத பணிவுடன் நடந்துகொள்வதைப் பார்த்திருப்போம். சிலர் அதீத தன்னடக்கத்துடன்  இருப்பார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் சினம் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.   இவர்களின் செய்கைகளை ஊன்றிப் பார்த்தால் இது அவர்கள் அணிந்திருக்கும் வெறும் முகமூடி என்பது தெரியும்.   அவர்கள்  தன்னை எல்லோரும்  சிறுமைப்படுத்தப்படுவதாக நினைப்பவராயிருப்பார்கள்அல்லது தன்னை யாராவது புகழமாட்டார்களா என்று ஏங்குபவராக  இருப்பார்கள்தன்னைப்பற்றி  தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.   நாம் இது தெரியாமல் அவர் காட்டும் முகமூடிக்கேற்ப அவருடன்  பேசப் பழகச் செய்கையில் அவரை நாம் காயப்படுத்திவிட, அல்லது அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

மற்றவர்களிடம் அபிமன்யு தன்னை  குறும்பனாக காட்டிக்கொள்வது அவன் புனைந்துகொள்ளும் வேடம். அவன் அகம் என்ற வாளை இந்த குறும்பன் என்ற உறையில் போட்டு வைத்திருக்கிறான்அதை பிரலம்பன் உணர்ந்துகொள்வது அவன் அறிவுக்கூர்மையைக் காட்டுகிறது.
எண்ணியிராக்கணத்தில் ஓர் ஒப்புமை பிரலம்பனின் உள்ளத்தில் எழுந்தது. நுண்ணிய அணிச்செதுக்குகள் கொண்ட உறையில் இடப்பட்ட கொலைவாள் இவன். மிகக்கூரியது, இரு புறமும் நா கொண்டு சுழல்வது, குருதி பட்டு ஒளி ஏற்றது. எங்குதொட்டாலும் குருதியுண்பது என்பதனாலேயே இத்தனை அழகிய வாளுறை அதற்கு தேவைப்படுகிறது. உறையுடன் அதை சிறுகுழந்தைகளுக்கு விளையாடக்கொடுக்கலாம். முகப்பறையில் அணிப்பொருளென தொங்கவிடலாம். எந்த ஆடையுடனும் அணிகளுடனும் இயல்பாக இணைந்துகொள்ளும்
        

அபிமன்யு தன்னிடம் கீழிறங்கி வந்து தோளில் கை போட்டுக்கொள்ளலாம். ஆனால் தான் அதை செய்ய முடியாதுபெரும் பதவிகளில் இருப்பவர்கள், நிர்வாகிகள், போன்றவர்களிடம் பழகுபவர்களுக்கு இது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்அது தெரியாமல் சிலர்அவர் தன்னுடன் இயல்பாக பழகுவதை வைத்து  எல்லை மீறி எதையாவது சொல்லி  இதைப்போன்ற பெரிய மனிதர்களின் கோபத்திற்கு ஆளாகி  அவர்களின் தொடர்பை வீணாக   இழந்துபோவதைப்  பார்த்திருக்கிறோம்வள்ளுவரின் 


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
 
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
 

என்ற குறளை  வெண்முரசின் இந்தக் கூற்று நினைவுபடுத்துகிறது. பிரபலமானவர்களுக்கு மட்டுமல்ல தமக்கு சமமாக அல்லது தம்மைவிட பதவியில் குறைந்த நிலையில் இருப்பவர்கள்பொருள் வசதியில் குறைவாக இருப்பவர்களுடன் பழகும்போதும் நாம் இதே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்நம்முடைய  ஏதேனும் ஒருசொல் அல்லது செயல் அவர்கள் உள்ளத்தை காயப்படுத்திவிடக்கூடும் என்பதை எப்போதும் கவனத்தில்கொள்ள  வேண்டும்.
            

மற்றவர்களுடன்  பழகுவதில்,   நம் உள்ளத்தை வெளிப்படுத்திக்கொள்வதில், சில எல்லைகளை இருக்கின்றன.    அந்த எல்லைகள் உறவு நட்பு  தெரிந்தவர்கள் தெரியாத நபர்கள் என அனைவருக்கும் உண்டு. அவற்றை  அறிந்து அதை தாண்டாமல் இருப்பவர்களாலேயே சமூகத்தில் இணக்கமாக இருக்க முடியும்.
     

எத்தனை விரைவாக என் எல்லைகளை கண்டுகொண்டுவிட்டேன் என எண்ணியதும் வியப்புகொண்டான். எண்ணச்சரடு திசைமுறுக்கிக்கொண்டது. மானுடர் ஒருவருக்கொருவர் எல்லைகளைத்தான் முதலில் வகுத்துக்கொள்கிறார்கள் போலும். பிறர் எல்லைகளை அறியாமல் அவர்கள் தங்கள் எல்லைகளை மீறுவதேயில்லை. அவ்வெல்லைகள் ஒருவரை ஒருவர் அறிவதனூடாக உருவாகின்றவை. காட்டுபவை, பெறுபவை, வடித்துக்கொள்பவை. அவ்வாடலின் நிகர்நிலைப்புள்ளிகள். எல்லைகளுக்கு அப்பால்தான் இருக்கின்றன மெய்கள். அவை எல்லைகளால் வேலியிடப்பட்டு திரைசூட்டப்பட்டு காக்கப்படுபவை.    
  

உண்மைதான் உயர்வானது, நிலைத்திருப்பது. ஆனாலும் முழு உண்மையின் ஒளிப்பிரவாகத்தை  நாம்  காண்பதற்கு மிகவும் சிரமப்படுவோம். அந்த ஒளியை  பல்வேறு வடிகட்டிகளில் செலுத்தி அதன் பிரகாசத்தைக் குறைத்த பிறகே அந்த ஒளி மூலத்தைக் காண முடிகிறது.   ஆனால் அப்படி நாம் காண்பது முழு உண்மையில்லை என்றும்  அது இதற்கப்பால் கொண்டிருக்கும் உரு வேறு ஒன்று என்பதையும்  நினைவில் இறுத்திக்கொள்ளவேண்டும் என வெண்முரசு நமக்கு கூறுகிறது


தண்டபாணி துரைவேல்