Sunday, October 22, 2017

கண்ணனின்நிலைஅன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கண்ணனின் நிலை கண்டு வருத்தம் உண்டாகிறது.  என் எண்ணங்கள் எங்கெங்கோ செல்கிறது.  நூறுபேர் வந்து போகும் ஒரு எளிய திருமண நிகழ்வை நடத்துபவரும் கூட அரசியலுக்கு உள்ளாகிறார், கவனக் குறைவினால் அல்லது வேறு செயலில் இருந்தால் தவறும் ஒன்றும் கூட பெரிதும் சீண்டலை, அவமதிக்கப்பட்டோம் என்ற உணர்வை சிலருக்கு அளித்துவிடுகிறது.  பல்லாயிரம் பேர்கள் கொண்டு ஒரு இயக்கம் என்றால் அதன் நிலை சொல்லவும் வேண்டியதில்லை.  கண்ணன் ஓர் பேராற்றல், அவனது அன்பில் அருளியலில் வசீகரிக்கப்பட்டு அவனிடம் பெரும் காதல் கொண்டோர், பின் அவனையே சந்தேகிக்கவும், பின் அஞ்சவும் செய்கின்றனர்.  ஒரு கட்டத்தில் எதிரி போல் கருதி எதிர்செயல் செய்யவும் விழைவு கொள்கின்றனர்.  ஏசுவின் நிலையும் அதுதானே ?, மிகவும் ஈர்ப்பு சக்தியுள்ள இளைஞன், களங்கம் அற்ற தூயவன் என அவன் பால் அருகணைந்து அன்பில் சிலகாலம் தோய்ந்து, இவன் பேராற்றல் பெருமான் எனக் கருதி, பின் மெல்ல உலகியலோர் எதிர்ப்பு வலுக்க மெலிதாக அவன் பால் சந்தேகமுற்று "என்ன அன்பு ?  ஏதோ உள்நோக்கம் கொண்டு நடிக்கிறான்.  இல்லை இல்லை அவன் அன்பு களங்கம் அற்றது, தூயது.  ஆனால் இவன் பேராற்றல்  உடையவன் என்பது உண்மையில்லை நாமே மிகைத்துக் கொண்டது" என்றாகி ஒரு கட்டத்தில் ஊருக்கு அஞ்சி அவரிடம் விலகி அவரையே பழித்து.  பின்னர் அவர் சிலுவையில் மரித்த பின் ஆழமான குற்றவுணர்ச்சி கொண்டு -உண்மையில் அவர்கள் அவர் மீது பேரன்பு கொண்டவர்கள். பின்னர் அவர் நல்லவர் என்று சொல்லும் துணிவை இழந்தோமே, ஒளிமிக்க கள்ளமற்ற ஒருவனை விட்டோமே என்ற குற்ற உணர்வின் காயம் நூற்றாண்டுகள் தாண்டியும் ஒலிக்கசெய்து.  ஏன் பக்தி என்ற சொல்லை பயன்படுத்தாமல் விசுவாசம் என்ற சொல் ? "ஏசு நல்லவர் ஏசு நல்லவர்" இன்று ஒலிக்கும் பாடலை அன்றையை அவரது சீடர்களின் எதிரொலிப்பாக உணர்கிறேன்.  உண்மையில் சீடரின் துயரில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ஏசு பட்டிருக்கமாட்டார்.  கண்ணனை துயர் தொடாது அவன் பால் ஆழமாய் அன்பில் பிணைத்துக் கொண்டவருக்கே அது.  ஓஷோவின் நெருக்கடி காலத்தில் அவருடன் இருந்த அவரது அன்பர்களின் துயர், இன்று நெருக்கடிக்கு உள்ளாகும் ஆன்மீக அமைப்புகளில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இளம் தொண்டரின் துயர்.  கண்ணனை பழித்தால் பெரும் சினம் கொள்வான் அபிமன்யு.

என் தாத்தா ஒன்று சொல்வார் "இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்றே யாருக்கும் தெரியக்கூடாது.  சத்தமில்லாமல் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து விட்டு போய்விட வேண்டும்."  அவர் அப்படியே வாழ்ந்து மறைந்தார்.  சீனு அடிக்கடி குறிப்பிடும் "ஆகி அமர்ந்த" நிலைபற்றியெல்லாம் அவர் தன் வாழ்வில் கருதியதே இல்லை, "அஞ்சி பதுங்கிய" நிலையில் வாழ்வதே வாழ்வு என்று கருதினர், அதை ஒரு தத்துவமாகவும், ஞான வாழ்கையாகவும் கருதினார்.  எப்போதும் பெருஞ்செயல்களின் சுழலில் புகுந்து செல்பவர்க்கே - அவரினும் அவர் கூட பற்றி நிற்பவர்க்கே துயர்.

கண்ணனே விடையையும் தருகிறான்.   

"எங்கு போயின் என் யாது ஆயின் என்" என்பது "ஆகி அமர்ந்தவர்" தரும் விடுதலை என்றால், செயல்களின் சுழலில் தம்மை இழுத்து விட்டுக்கொள்பவர்களுக்கு கண்ணன் தரும் விடுதலை "தன்னறம்."  அமர்பவர் அமரலையும் செயல் புரிவோர் செயலையும் அப்படித்தான் தொடர முடியும் என்று எண்ணுகிறேன்.


அன்புடன்
விக்ரம்
கோவை