Tuesday, October 17, 2017

எழுதழல் – அர்ஜுனனின் ஒவ்வாமைஎழுதழல் 28 – ல் உத்தரையைப் பார்த்துவிட்டு வரும் அபிமன்யுவின் தன்னொழுக்கிலான உணர்வுகள் வந்துள்ளன. இதன் முக்கியமான பகுதிகள் இரண்டு. ஒன்று அர்ஜுனனுக்கு அபிமன்யுவின் மீதுள்ள ஒவ்வாமை கலந்த திகைப்பும், அதையொட்டி அமைந்திருக்கும் அவர்களின் உறவும்.

முதலில் ஒவ்வாமை. இது முதன் முதலாக அவன் காண்டீபத்தைத் தொட்ட போது வந்தது எனத் தெளிகிறான் அபிமன்யு.  அத்தருணம் காண்டீபம் நாவலில் வருவது. தன் மைந்தர்களான சுருதகீர்த்தி மற்றும் அபிமன்யு உடன் தன் கதை கேட்டு அச்சத்தை விட்டொழித்த கௌரவ சுபாகுவின் மைந்தன் சுஜயன் மற்றும் சுபகையுடன் அர்ச்சுனன் காண்டீபக் கோவிலுக்கு வருகிறான். காண்டீபத்தை ஒரு சிறு விளையாட்டு வில்லாக மாற்றும் அர்ச்சுனன் அங்கிருந்த ஒரு பெரும் மாமரத்தில் காய்த்திருக்கும் ஒரே ஒரு மாங்காயை அடிக்கிறான். அதை எடுக்கும் சுஜயனிடம், அது தனக்கு வேண்டுமென உக்கிரமாகக் கேட்கிறான் அபிமன்யு. அர்ச்சுனனும், உடனிருக்கும் சுருதகீர்த்தியும் பாதி அவனுக்குக் கொடுக்கலாம் எனக் கூறுகையில், முழுவதும் வேண்டும் இல்லையெனில் சுஜயனைக் கொல்வேன் எனக் கூறுகிறான் அபிமன்யு. இந்தத் தருணம் தான் அர்ச்சுனனுக்கு அபிமன்யு மீது ஒவ்வாமை கலந்த திகைப்பைக் கொடுக்கிறது. இத்தருணம் தான் அர்ச்சுனனுக்கு இவன் உடன்பிறந்தார் குருதியாடுபவன் என்பதை உணர்த்துகிறது. அத்தருணம் அவனுள் ஓர் அச்சத்தைக் கொண்டு வந்திருக்கக்கூடும். வருங்காலத்தை எண்ணி. அவன் வென்ற ஒன்றிற்காக குருதி சிந்தப் போகும் தன் அடுத்த தலைமுறையை எண்ணி. அதை முன்னின்று நடத்தப் போகும் தன் மைந்தனை எண்ணி. ஏனென்றால் தான் முழுமையாக வேண்டும் ஒன்றிற்காக தன் தந்தையின் சொல்லையும் மீறி வில்லெடுப்பேன் என்கிறான் அபிமன்யு...

சிறுவன் தான், குதலை மொழி தான் ஆனால் விழிகள் கொண்ட உணர்வுகள் ஆதி வஞ்சம் அல்லவா, அதைத் தான் அர்ச்சுனன் அஞ்சுகிறான். எனவே தான் அவன் நேமிநாதர் சென்றடைந்த ஞானத்தைத் தேடிச் செல்கிறான். அறிகையில் மட்டுமே அச்சம் அகலும் என்பதால். நேமிநாதரின் ஞானப் பயணத்தை மிகச் சுருக்கமாக, “பதினெட்டு மலைகளில் பதினெட்டு சித்திகளை நேமிநாதர் அடைந்தார். முதல் மலையில் தாமசம் என்னும் கரிய எருதை கொன்றார். விழிகள் எரியும் நாகங்களையும் அனல்சிறகுகள் கொண்ட பறவைகளையும் கூருகிர்கொண்ட சிம்மங்களையும் நூறுகரங்கள் கொண்ட பாதாளதெய்வங்களையும் இறுதியில் மாரனையும் அவர் வென்றார்”, என்று காண்டீபம் சொல்கிறது. இதையே மிக விரிவாக கிராதம் சொல்கிறது. கிராதத்தில் அர்ச்சுனன் தன் ஞானப் பயணங்களை யமபுரியில் ஒரு அந்தணனுக்காகத் துவங்குவதற்கு முன்னால் இந்திரகீல மலையேறி ஊழ்கத்தில் ஆழ்ந்து நேமிநாதரை கண்டு மீள்வதை நினைவுகூரலாம். அதன் பிறகு அவனது பயணத்தின் முதல் சவாலில் அவன் அந்த அந்தண மைந்தனுக்கு நிகராகத் தன் மைந்தனை வைத்து வென்று வருகிறான்!!! இறுதியாக ஊர்வசியிடம் மாரனை வென்று மீள்கிறான்.

இருந்தும் ஒரு பதினெட்டாவது மலை பாக்கி இருக்கிறது. காண்டீப நிகழ்வுக்குப் பிறகு அர்ச்சுனன் மற்றும் அபிமன்யுவுக்கிற்டையே ஒரு விலக்கம் சார்ந்த உறவே நீடிக்கிறது. ஒரு வகையில் அபிமன்யு அர்ச்சுனனின் ஆடிப்பாவை. அவ்வகையில் அர்ச்சுனன் வென்றாக வேண்டிய பதினெட்டாவது மலை. நேமி வென்ற பதினெட்டாவது அறைகூவலை காண்டீபத்தில் சுஜயன், ‘பதினெட்டாவது தெய்வம் நேமி என்று பெயர் கொண்டது. அவரது ஆடிப்பிம்பம் போலவே அது இருக்கும்அவர் கொள்ளும் ஆற்றலை அவரிடமிருந்தே அதுவும் கொள்ளும்.’ என்று கூறுகிறான். அதையே எழுதழலில் தன்னொழுக்கான சிந்தனைச் சங்கிலியின் இறுதியில் அபிமன்யுவும் வந்தடைகிறான். காண்டீபத்தில் சுஜயன் அந்த அறைகூவலை நேமி வென்ற விதத்தை பின்வருமாறு கூறுகிறான், ‘ஆடியை வெல்வதற்குரிய வழி என்பது ஆடியிலிருந்து விலகிச் செல்வதுதான். விலகும் தோறும் சுருங்கி ஆடிக்குள்ளேயே மறையாமல் இருக்க ஆடிப்பாவையால் முடியாது’. எனவே தான் அர்ச்சுனன் அபிமன்யுவிடம் இருந்து விலகியிருக்கவே விழைகிறான்... அவன் பாரத வர்ஷத்தையே ஆள விரும்புவான் என எண்ணியதால் தான் அவன் உத்தரைக்கு அபிமன்யுவைத் தேர்ந்தெடுக்கிறான். அவள் வயிற்றில் பிறப்பவரின் கொடிவழி தானே பாரதத்தை ஆளுமென சகதேவன் கூறியிருக்கிறான்!!

ஒருவகையில் அர்ச்சுனனின் இந்த விலகலும், ஜயத்ரதனின் தந்தை பிரஹத்காயரின் விலகலும் மைந்தர் பாசம் என்ற ஒரு புள்ளியில் இணைகின்றன. இருவருமே மைந்தர் துயர் உறப் போகிறவர்கள். இருவருமே மைந்தரை எண்ணி அச்சம் கொண்டவர்கள். இவருமே மைந்தரைக் காக்க தங்கள் பாசத்தை மறைத்தவர்கள். மைந்தர்களின் அச்சத்தை விலக்க தெய்வங்களைத் தேடியவர்கள். இருப்பினும் கடந்து செல்வது என்ற இயல்பான குணத்திலும், கூட இருந்து வழிநடத்த ஒரு ஆசானை நண்பனாகப் பெற்ற விதத்திலும் அர்ச்சுனன் பிரஹத்காயரை விஞ்சுகிறான்!! ‘கங்கை பெருகிச் சென்றாலும் நாய் நாக்குழியாலேயே அள்ள முடியும். ’ என்பதற்கு பிறஹத்காயர் பொருளாகி மறைகிறார்.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்