Wednesday, October 18, 2017

வேதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அசுரவேதம் என்ற மதவேழதின் மீது நாராயண வேதம் என்றொரு அம்பாரி இட்டு வேதத்தைக் காக்கிறான், அதன் நோக்கத்தைக் காக்கிறான், மானுடரையும், வேதம் என்னும் விரல் சுட்டும் கடவுள் என்றொருவர் இருப்பின் அவரையும் காக்கிறான் கண்ணன்.  அம்பாரியில் தகுந்தோர் அமரலாம், அன்று கண்ணன் பின்னர் வெவ்வேறு காலத்திற் வெவ்வேறு ஞானியர் என்று.  வார்த்தைக்கு வார்த்தை நேர் பொருள் கொண்டு அடிப்படைவாதம் மதவெறி என்னும் மூடர் தரும் தவறான திசை செல்லாமல், இப்படியெல்லாம் இருக்கும் இவை தேவையா என்று நாத்திகம் என்று சென்று உள்ளுணர்வின் கதவுகள் அடைத்து உடலென்று குறுகிவிடாமலும் ஞானியர்க்கு வேதம் செலுத்தும் அதிகாரம் அளிக்கிறான்.  ஞானியரால் கட்டுப்படுத்தவும் வழிநடத்தப்படவும் இல்லாத சூழல் அருளுணர்வு அற்ற மூடர்கள் மெய்ப்பொருள் விடுத்து வெறும் சொற்கள் பற்றி பேரழிவு விழைப்பதாகிறது.  மனிதரை மட்டுமல்ல கடவுளைக் கூட வேதம் கொண்டு அச்சுறுத்த முடியும், 

இதில் சொன்னபடி அவர் நடந்து கொள்ளவில்லை என்று அவரது சிம்மாசனத்திற்கு அடியிலேயே குண்டு வைக்க முடியும்.  தாருகவனத்து வேதியர் சிவபெருமானை ஒழிக்க முயன்ற கதை நினைவுக்கு வருகிறது.  நான் என்னுடையது என்பதே பாணாசுரரின் பிரிச்சினையாக உள்ளது அவரை யானும் நீ எனது உடைமையும் நீ என்று மாற்றி அமைக்கிறான் கண்ணன்.  நானும் அசுரன் தான் என்று அமைத்து, நான் உன் குரு என்று நிறுவுகிறான்.  எந்த ஒன்றை தீவிரமாக பற்றி நின்றாலும் அதன் வழியிலே மெய்ப்பொருளின் திருக்கதவம் சமைத்துத் தரும் திறம் குருவுக்கு உண்டு என்றும் சொல்பவரைப் பொறுத்தே சொற்கள் வேதமா இல்லையா என்பது அமைகிறது என்றும் கருதுகிறேன்.  பல கால பூசலை கண்ணன் என்ற மெய்ஞானி அல்லவா முடித்து வைக்க முடிகிறது?


அன்புடன்
விக்ரம்
கோவை