Friday, October 27, 2017

சுடரின் நடுவில்



அன்புள்ள ஜெ வணக்கம்.

எழுதழல்-41ம் பகுதியை மிக அற்புதமாக எழுதியுள்ளீர்கள். எழுதழல் சுடரின் நடுவில் இது ஒரு அக்கினிபழம். இனிக்கிறது. சுடுகின்றது. அர்ஜுனனை நினைக்கையில் இனிக்கிறது. அபிமன்யூவை நினைக்கையில் சுடுகின்றது.  

மனிதர்கள் தங்களது நித்திய கர்மங்களில் சிக்கி அறைபடும் அறைத்தமாவுபோல அறைபட்டுக்கொண்டே இருக்கும்படி வாழ்க்கை வதைக்கிறது. அர்ஜுனன் அபிமன்யூ போன்ற உயர்ந்த ஆன்மாக்களுக்கு அவைகள் பிறந்த பிறப்பின் பயன்பாட்டை இறை இறங்கிவந்து வழங்கி வழி நடத்திச்செல்கிறது.

பரமஹம்சயோகானந்தருக்கு “ம“ என்னும் மகேந்திரநாத் குப்தாவால் பேரண்டத்தின் அன்னை காட்சிக்கொடுக்கும்போது. நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன் என்கிறார். ஸ்ரீ லாகிரிமகாசயருக்கு மகாஅவதார் பாபாஜி பிறிவிகள்தோ’றும் நான் உன்கூடவே இருந்து வழிநடத்துகின்றேன் என்கிறார். சில ஆன்மாக்கள் தங்கள் அன்றாட கடமைகளின் சுவைகளை தியாகம் செய்து உயரும்போது இறைவன் அவற்றை உயர்த்த தன்னை தாழ்த்தி கீழியிறங்கிவந்து பேணிக்காக்கின்றான்.

மாணிக்கவாசக சுவாமிகள் நான் யார்? நீர் யார் என்று உணர்ந்து உருகிக்கூறும்போது
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி-என்கிறார்.

நிலந்தன்மேல் வந்து அருளும் நீள்கழல்களை பற்றும் மனம் எப்படி வரும்? இந்த வாழ்க்கையும் வாழ்க்கையின் சுவையும் அந்த நிலைக்கு விடுமா?

நூல்கற்றவன் தருமன் அறவான் என்றுப்போற்றப்படும் முதல் பாண்டவன் கந்தமாதான மலையில் ஏறி  கையின் விரல்எல்லாம் கனிந்து பாலூறும் முலைப்போன்ற மெய் அறிந்தவன் அடையமுடியாத தூரம் அர்ஜுனனுக்கு வாய்கிறது. தாயின் முலைத்தேடும் குழந்தைபோல அவன் கண்ணனை நாடிச்சென்று அடிப்பார்த்து அமர்ந்துவிட்டான். குருதிமனம் அறிந்து  கொன்று சுவையறிவரும்  தாய்விலங்குபோல அபிமன்யூவை நோக்கி கண்ணனும் வந்துவிட்டான்.  

பக்தியை விட ஞானம் சிறந்தது ஞானத்தைவிட யோகம் சிறந்தது என்பார் பெரியோர். யோகம் கைகூடுவது என்பது எளிய கணக்கு அல்ல. அது பிறவிதோறும் நோற்றுபெறக்கூடியது.

கண்ணனை ஆழ்ந்து ஆராய்ந்து அவரின் யோகத்தைத்தாண்டி பிரேமையின் உயர்நிலையில் வைத்துப்பார்க்க இந்த எழுதழல்-41 களம் கண்டு  உள்ளது.

அன்பு முதிர்ந்து பக்தியாகின்றது, பக்தி முதிர்ந்து பாவனையாகின்றது, பாவனை முதிர்ந்து மகாபாவனையாகின்றது, மகாபாவனையில் இருந்து பிரேமை உண்டாகின்றது என்று குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் கூறுகின்றார். எல்லாவற்றையும் கொடுக்கும் இறைவன் தூயபக்தியை மட்டும் தரதயங்குகின்றான் என்கிறார்.

அபிமன்யூவின் மனைவி உத்தரை பெரிதாக கண்ணனை அறிந்தவள் இல்லை. ஆனால் ராதையின் காவியத்தை கற்று தெளிந்து இருக்கிறாள். அந்த காவியத்தின்வழியாகவே கண்ணனை நுணுக்கமாக தொடுகின்றாள். அபிமன்யூவை கண்ணன்பால் பிரேமையின் அமிர்தம் அறிய அனுப்புகின்றாள். இந்த விதத்தில் அபிமன்யூ கொடுத்துவைத்தவன்தான். மனைவி அவித்தையாக இல்லாமல் வித்தையாக இருப்பது கொடுப்பினை.

அருள்க!” என்று அபிமன்யூ சொன்னான். “ஆசிரியன் என்று புவியில் பிற எவருமில்லை.” இளைய யாதவர் “மாணவர்கள் பலர் எனக்கு.விடாய் கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தைநீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரைஉன்னை நான் கவ்விச்செல்கிறேன்என்னிடமிருந்து நீ தப்ப இயலாது” என்றார்அபிமன்யூ எழுந்து அவர் கால்களில் தன் தலையை வைத்து “ஆம்” என்றான்.அவன் தலைமேல் கைவைத்து “நிறைக!” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனனையும் அபிமன்யூவையும் கண்ணன் பிரித்துக்காட்டும் மையத்தில் வைத்து கண்ணனை விரிவராக புரிந்துக்கொள்ளமுடிகின்றது. அர்ஜுனன், அபிமன்யூ இருவருமே கண்ணன்தாள்மீது பக்திக்கொண்டவர்கள்தான் ஆனால் அந்த பக்தியின் வெளிப்பாடு இறைவனை இரண்டாக பிரித்து வைக்கிறது. ஒன்று வயிறு எல்லாம் முலையாகி பால்கொடுக்கவரும் வராகம். மற்றொன்று கொன்று கிழித்து குருதிசுவை கொண்டாளும் நரசிம்மம்.  
இறைவன் எப்படி வந்தால் என்ன? பிறவிப்பெருங்கடல் நீங்கி இடர்தீர்ந்து அவன் அடிக்கீழ் இன்பமாக இருத்தல் நலம்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக –செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று,-பொய்கை ஆழ்வார்.

எழுதழல்-41ல் மாறா புன்னகையும் மாறா விழியுணர்வும் கொண்ட கண்ணனை கற்சிலையென காணும் தருணம் அபிமன்யூவால் வைத்தது. அந்த காட்சி உள்ளத்தில் கருவறை சிற்பம் எக எழுகின்றது.  இந்த கண்ணன் வராகமாகவும் சிம்மமாகவும் ஆன்மாக்களைத்தேடி உலாபோகின்றவன். நாமா காண்கின்றோம் அவன் அருளால் அவள்தாள் காண்கின்றோம். அவன் தாள்வாழ்க.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.