Sunday, October 22, 2017

செயல் துறப்பு (எழுதழல் -80


   மனிதன் இயல்பிலேயே செயல் புரிபவன். அவனால் செயலற்று இருக்க முடியாது. ஏன் உயிர் வாழ்தலே ஒரு செயல்தான். அவனுள் உறையும் நான் எனும் அகங்காரம் அவனை செயலைச் செய்யும்படி தூண்டிக்கொண்டே இருக்கிறது.  அவன் ஏதாவது ஒரு நோக்கத்தை தனக்கென வைத்துக்கொண்டு அதன் காரணமாக செயல்களில் ஈடுபடுகிறான். புகழை அடைய, மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெற, தனக்கு  மற்றும் தம் குடும்பத்தினரின்  உணவு உடை, இருப்பிடத்திற்கான பொருள்தேட, மற்றவர்களைவிட தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள, தான் இருக்கும் சமூகத்தின் முன்னேற்ற, தன் ஞானத்தை விரிவு படுத்திக்கொள்ள என பல்வேறு காரணங்களுக்காக  பல்வேறு செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறான்.   என்றாவது ஒருநாள் அவன்  எதற்காக இதெல்லாம் என நினைத்து அதற்கு சரியான விடை கிடைக்காதுபோகையில்  அல்லது இனி தனக்கு வாழ்வில் இலக்கென எதுவும் இல்லை என உணர்கையில்  அவன்   செயலின்மையில்  ஆழ்ந்து விடுவது நேருகிறது.  அப்போது  செயல்களுக்கு ஆதாரமான எண்ணங்கள தோறுவிக்கும் மனம் பெரும் பாதிப்பை அடைகிறது. அப்போது ஒருவன்  உள்ளம் நொறுங்கி மனம் பேதலிக்கக்கூடும் சிலர் தன் உயிரை  மாய்த்துக்கொள்வது கூட நடக்கிறது.
  
        ஆனால் இப்படி வாழ்வதற்கான் நோக்கற்று போவ போய் ஆழும் செயலின்மையில் ஒரு தவமென தியானமென ஆவதும்  உண்டு.   இரமணர் தான் கற்பித்துக்கொண்ட  மரண அனுபவத்தின் காரணமாக அவர் மனம் முழுதடங்கிவிடுகிறது. வாழ்வதற்கு நோக்கமென எதுவும் இல்லாமல்  போகிறது.  அப்போது அவருக்கு  உலக நிகழ்வுகளிலான ஈடுபாடு குறைந்துவிடுகிறது. படிப்பில்  ஆர்வமில்லாமல் அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்துவிடும்  அவரை அவர்  அண்ணன் இப்படி  இருப்பவனுக்கு இதெல்லாம் எதற்கு என கடிந்துகொள்கிறார்.  அச்சொல் அவருக்கு ஒரு திறப்பாக அமைய அங்கிருந்து திருவண்ணாமலை வந்து முற்றிலுமாக செயலின்மையில் ஆழ்ந்து  விடுகிறார்.   அவர் தியானத்தில் இருப்பது எதையும் அடைவதற்கான தவம் இல்லை இனி அடைவதற்கு ஏதுமில்லை என்பதால் அவர் கொள்ளும் நிலை. அவர் இரவு பகல்,  தட்பவெப்பம், என எதுவும் தெரியாமல் கோயில் மண்டபத்தின் இருண்ட மூலைகளில் சமாதியில் ஆழ்ந்த வண்ணம் இருக்கிறார்.  அவருடைய உடலில் அழுக்குகள் சேர்ந்து அடைபிடித்துக்கொள்கிறது.  தலை முடி அடர்ந்து வளர்ந்து சடை பிடிக்கிறது. விரல் நகங்கள் நீண்டு வளர்ந்து சுருண்டுகொள்கின்றன.   உடலில் பூச்சிகள் கடித்து புண்கள் உருவாகி  சீழ்பிடித்து தரையோடு  அவர் உடல்  ஒட்டிக்கொள்கிறது. யார் குரலும் அவர் உள்ளத்தை எட்டுவதில்லை.  ஒரு சிலர் அம்மனின் அபிஷேகப் பாலை புகட்டி அவர் உயிரைக் காத்து வந்தனர்.  முற்றிலுமான மௌனத்தில் புதைந்துகொண்டிருந்தார். 
           
       இதைப்போன்ற நிலையில்தான்  கண்ணன்  சப்தஃபலத்தில் இப்போது இருக்கிறான். 
இளைய யாதவரின் தலையிலிருந்து சடைமயிர்க்கற்றைகள் முதுகிலும் தோள்களிலுமாக விழுந்து பரவியிருந்தன. அவற்றில் சருகுத் தூசியும் மண்ணும் கலந்து அகழ்ந்தெடுத்த கிழங்கு வேர்கள் போலிருந்தன. தாடியும் சடை கொண்டு பிடுங்கிய புல்லின் வேர்க்கொத்துபோல முகவாயில் தொங்கியது. இடையில் அணிந்திருந்த தோலாடை மட்கிக் கிழிந்து சிதிலங்களாக உடலுடன் சில இடங்களில் ஒட்டி புண்பொருக்கென தெரிந்தது. உடலெங்கும் தோல் பொருக்கடித்து மண்ணும் சேறும் படிந்து நெடுங்காலம் புதைந்திருந்து அக்கணத்தில் எழுந்தமர்ந்ததுபோல் தோன்றினார்.

          செயல்வீரன் கண்ணன் இப்போது செயல் துறந்து இருக்கிறான்,  அதற்கு அவன் ஜேஷ்டாதேவியில் பிடியில் தன்னை ஒப்புக்கொடுத்து இருக்கிறான் எனச் சொல்வது ஒரு கூறல் மட்டுமே.  அவன் அழிவின் விளிம்பில் இருந்த யாதவர்களை காத்து அவர்களுக்கென்று ஒரு வலுவான அரசினை நிறுவி  அவர்கள் வாழ ஒரு நகரினைக் கட்டி ஆட்சி கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறான். இது எங்களுக்கு போதும் என இனி நீ எங்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை என யாதவர்கள் அவனுக்கு குறிப்புணர்த்திவிட்டனர்.  அவன்  இனித் தேவையில்லை அவன் இருந்தால் எமக்கு தொந்தரவுதான் என அவர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.   ( இதுபோன்று ஒரு தலைவன் கைவிடப்படுதல்  நாம் தற்கால அரசியலிலும் பார்த்திருக்கிறோம். காந்தி அப்படி கைவிடப்பட்டவர்தான். அதுமிக வெளிப்படையாக தெரிவதற்குமுன் அவர்கொல்லப்பட்டுவிட்டார்.)         கண்ணனின் இருப்புக்கு இனி அவசியமில்லை என்ற நிலையை எடுத்திருக்கும் அந்தச் சமூகத்தில் கண்ணன் செய்வதற்கு ஒன்றுமில்லாதிருக்கும்போது அவன் தன்னில் தான் மூழ்கி இருக்கும் தவநிலை இது.
           

இத் தவத்தில் இருந்து எப்படி அவர்  வெளியில் வருவது? திரும்பவும் நாம்  இரமணரின் வாழ்வைப்  பார்க்கலாம்.  அப்படி நீள்தியானத்தில் இருக்கும் அவரைக் காண மக்கள் தேடி வருகின்றனர். அவர் முதலில் அவர்களை தவிர்த்து வேறு வேறு இடங்களுக்கு செல்கிறார். ஆனாலும் மக்கள் அவரை தேடி வந்த வண்ணம் இருக்கின்றனர். தம் ஆன்ம விடுதலைக்கு வழிதேடும் பலர் அவரிடம் வந்து இரந்து நிற்பது அதிகமாகிறது. அது உறங்கி இருக்கும் அவர் மனதை எழுப்புகிறது. அவர் தன் நீள் தியானத்திலிருந்து விழித்தெழுகிறார்.  தனக்கென ஒரு நோக்கத்தை உள்ளம் கண்டெடுத்துக்கொள்கிறது   பின்னர் தான் மண்ணை  விட்டு மறையும் வரை ஆன்ம விடுதலைக்கு ஒரு வழிகாட்டியாக,  மற்றவருக்கு தன்னையே ஒரு எடுத்துக்காட்டாக வைத்து வாழ்ந்துவந்தார். கண்ணனும் தன்  நீள் தியானத்திலிருந்து விழித்தெழ ஒரு நோக்கம் கண்டெடுக்கப்படும். அத்திசை நொக்கி இப்போது வெண்முரசு சென்றுகொண்டிருக்கிறது.  இனி விழிதெழும் கண்ணன் துவாரகையின்  பழைய கண்ணனாக இருப்பானா என்று தெரியவில்லை.  இது கண்ணன் ஒரே பிறவியில் எடுக்கும் மற்றொரு அவதாரமாக  இருக்கப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

தண்டபாணி துரைவேல்