Friday, September 4, 2015

சியமந்தகக் காலம்

இன்றைய இந்திரநீலம் 39 வெகு சுவாரஸ்யம். கங்கையினுள் கிருஷ்ணவபுஸ் துறைமுக போர்கள காட்சிகள் அமர்க்களம். நானும் திருஷ்டத்யும்னன் மற்றும் சாத்யகியுடன் கலத்தின் அகல்முனயிலிருந்து அம்பு தொடுத்தாற் போல உணர்ந்தேன். ஜெமோவின் போர் விவரிப்பும், உவமைகளும் எப்பொழுதும் போல பிரமிக்க வைக்கின்றன. திருஷ்டத்யுமனும், சாத்யகியும் மிகக் குறைந்த வீரர்களுடன் கிருஷ்ணவபுஸின் பன்னிரு மரக்கலங்களையும், காசியின் போர் படகுகளையும் முறியடித்து தப்பியது மிக விறுவிறுப்பான சம்பவக் கோர்வை. நாளை கிருஷ்ணன் வருகை நடந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடும்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இந்த சியமந்தக மணிக்காக நடந்த சம்பவங்கள் எப்பொழுது நடந்தன? நான் அறிந்த வரையில் பாண்டவர்கள் வாரணவதத்தில் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்ததாக செய்தி வந்தபோது கிருஷ்ணரும், பலராமரும் அஸ்தினாபுரம் செல்லுகிறார்கள். அப்போதுதான் சியமந்தக மணிக்காக சதி திட்டம் உருவாகி சத்ரஜித்தும் கொல்லப்பட்டு மணியும் களவாடப் படுகிறது. பிறகு கிருஷ்ணர் சததன்வாவை கொல்கிறார். இவையெல்லாம் பாண்டவர்கள் திரௌபதியை மணப்பதற்கு முன்பு. ஆகையால் இச்சம்பவங்களில் திருஷ்டத்யும்னனின் பங்களிப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஆனால் ஜெமோவின் விவரிப்பு படி இச்சம்பவங்கள் இந்திரபிரஸ்தம் அமைக்கப்பெறும் காலக்கட்டத்தில் நடப்பதாக வருகின்றன. எப்படியிருந்தாலும் கதை மாந்தர்களும், அவர்களின் ஆளுமைகளும், மணிக்கான அவர்களது விழைவும், அதனால் ஏற்படும் சிக்கல்களும் நம்மை கட்டிப்போடுபவை. தினமும் இரவு பன்னிரண்டு மணிக்காக காத்திருக்க வைப்பவை.  

ராதிகா

கூழாங்கல்



வைரம் போன்ற அருமணிகள் மண்ணின் ஆழத்தில் இருந்து அதி அழுத்தத்தால் உருவாகி, அம்மண் பிளந்து வெளிவருபவை. ஒரு வகையில் அவையும் வெறும் கற்களே. அப்படியென்றால் அக்கற்களை அருமணிகளாக்குவது எது? அதைக் கொள்பவரின் விழைவே என்று சொல்கிறது இந்திரநீலம். மானுடரின் விழைவுகள் அக ஆழத்தில் அழுந்தி, இறுகி வைரமென்றாகிறது. என்றோ முன்னுணரா திருக்கணத்தில் அது வெளிப்படுகின்றது. இந்திரநீலம் முழுவதிலும் மானுட அக இருளின் வெளிப்பாடாகவே சியமந்தகம் வழங்கப்பட்டுள்ளது. 

காம, குரோத, மோகங்களின் இருளையும் தாண்டிய இருளில் இருந்து, இருளே ஒரு துளியாக வந்தது தான் சியமந்தகம். ஒருவகையில் முக்குணங்களினால் விளையும் விழியின்மையைத் தாண்டிய தூய இருளால் விளையும் விழியின்மை. விழியின்மை என்பது நம் அறிதலைக் கட்டுப்படுத்தும், நம் எல்லையைக் கட்டுப்படுத்தும், விழியின்மை தனக்கோர் வழி தேர்ந்து அவ்வழியன்றி பிறவற்றை எளிதில் விலக்கும். பிற வழிகளை மறுப்பதாலேயே எப்போதும் விழித்திருப்பதாக உளமயக்களிக்கும். எப்போதும் விழித்திருக்கும் ஒருவர் அடையும் சோர்வும், அதனால் விளையும் பாதுக்காப்பின்மை உணர்வும் தாங்க இயலாதது. 

சியமந்தகத்தைக் கொள்ள விரும்பிய அனைவருமே விழியற்றவர்கள் தாம். எனவே தான் அவர்களுக்குத் தெரிந்த வகைகளில், அவர்களின் விழைவுகளை அம்மணியில் ஏற்றி விட்டனர். பிரசேனருக்கு அது அதிகார விழைவு. பாமாவுக்கு அடையாள விழைவு. ருக்மணிக்கு அவள் இச்சையின் விழைவு. ஜாம்பவதிக்கு அவள் பெருமிதத்தின் விழைவு. பத்ரைக்கு  அவள் அகங்காரத்தின் விழைவு. அக்ரூரருக்கு அது கிருஷ்ணனின் மீதான அவரின் மட்டுறுத்தலின் விழைவு. கிருதவர்மனுக்கு அவன் காமத்தின் விழைவு. சாத்யகிக்கு அவன் அர்ப்பணிப்பின் விழைவு. ஒவ்வொருவரும் அவரவர் விழைவிற்கு உகந்த வழியில் அதைக் கொள்ள விழைகிறார்கள். ஒருவகையில் இவர்கள் அனைவருமே சியமந்தகத்தைக் கிருஷ்ணனுடன் தொடர்பு படுத்தி அதைக் கொள்வதன் மூலம் கிருஷ்ணனையே கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் கிருஷ்ணனை வியந்து, அவனைப் பணிந்து, அவனை நினைந்து அவனை முழு உரிமை கொள்வதற்காக பிரயத்தனப்படுகிறார்கள். அவனோ கில்லாடித்தனமாக அவர்களின் இந்த விழைவுகளையே அவர்களைச் சமாளிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறான். ஒருவர் கையிலும் சிக்கவும் மாட்டேன் என்கிறான். சியமந்தகமும் அதையேத்தான் செய்கிறது. கிருஷ்ணன் ஒளி என்றால் சியமந்தகம் இருள். இவர்களுக்கு இருளும் சிக்கவில்லை, ஒளியும் சிக்கவில்லை. அவரவர் விழியின்மையால் விளைந்த இருளைப் போக்க, அவரவரின் கைவிளக்கு நறுக்கித் தந்த கிருஷ்ணனையே அவர்களால் அடைய இயல்கிறது. அடைந்த அவனை எப்போதுமே தனக்காக மட்டுமே வைத்துக் கொள்ள முயன்று பரிதாபமாகத் தோற்கவும் நேர்கிறது.

இங்கே தான் காளிந்தி பேருருவம் கொள்கிறாள். அவளைப் பற்றி எங்குமே, யாருக்குமே தெரிவதில்லை. சாத்யகி முதல் அக்ரூரர் வரை அவள் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லை. ஏனென்றால் இவர்கள் ஆடும் ஆடலில் அவள் இல்லை. இவர்களுடன் அவள் எங்குமே போட்டியிடவில்லை. இவர்கள் தேடும் கிருஷ்ணனையோ, அவனுருவாக வேறு எதையோ அவள் தேடுவதே இல்லை. அவளளவில் அனைத்துமே கிருஷ்ணன் தான். அவளும் கிருஷ்ணன் தான். அவளளவில் ஒரு கூழாங்கல்லுக்கும் அருமணிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் வித்தியாசப்படுத்த வேண்டிய எந்த விழைவும் அவளிடம் இல்லை. அவளுக்கு இருளும் இல்லை, ஒளியும் இல்லை. எனவே தான் பிறரின் விழைவின் நிறம் கொண்ட சியமந்தகம் கொஞ்சம் கொஞ்சமாக தான் கொண்ட அனைத்து நிறங்களையும் இழக்கின்றது. 

இறுதியாக தன் நிறமான நீலத்தையும் இழக்கிறது என்பது மிக நுட்பமான இடம். நீலம் என்பது கிருஷ்ணன் தான் என்பது நாமனைவரும் அறிந்ததே. அந்த நீலமும் போகிறது என்பது கிருஷ்ணன் என்று ஆகி வந்த அனைத்து ஆளுமைகளும் ஒன்றுமில்லாமல் ஆகிறது என்பதே தான். துவாரகையில் கிருஷ்ணன் என்று ஆகி நடம்புரியும் களிமகன் மீது சுற்றி இருக்கும் அனைவரும் அவரவர் விழைவுகளை ஏற்றி அவரவர்க்கான கிருஷ்ணனைச் சமைத்து வைத்துள்ளனர். அப்படியிருக்க தன்னை ஒருவரும் அறியாமல் இருக்கும் அவனது தனிமை தான் எப்படிப் பட்டது? அத்தனிமையில் அவனால் யோகத்தில் அமர்வதன்றி வேறென்ன செய்ய இயலும். அப்படி ஒரு யோகியை முழுதறிய மற்றொரு யோகியன்றி யாரால் இயலும்? இருமையற்ற கிருஷ்ணன் என்னும் யோகியை அறிந்த யோகியாக அங்கே காளிந்தி மட்டுமே இருக்கிறாள். வைரம், கூழாங்கல், மதிப்பு, மதிப்பின்மை, அரசன், களிமகன் என எந்த இருமையும் இல்லாதவனாக அவனை அறிவது தான் கிருஷ்ணனை உண்மையாக அறிவது என்பதே சியமந்தகத்தின் நிறமிழப்பு அனைவருக்கும் உரைக்கும் உண்மை.

இவ்வுண்மையை இயல்பாகவே உணர்ந்த காளிந்தியின் கதையை கிருஷ்ணனே சொல்வது என்பது அவளின் ஆளுமைக்கும், அதன் வழியாக நமது பிரபஞ்ச தரிசனத்தைத் தந்த யோக மரபுக்கும் ஜெ செய்த மரியாதை. பிற அனைவரின் கதைகளை மானுடர் கூற, தெய்வமே யோகியின் கதையைக் கூறியது என்பது அபாரமான மன எழுச்சியைத் தந்த தருணம். அத்துடன் வெறும் மரவுரியுடன் நகர் நுழைந்தவள் என்றே நினைத்துக் கொண்டிருக்கும் அக்ரூரர் முதல் முதல் அரசி என்ற இடத்துக்கு போட்டியிடும் ஒவ்வொருவருக்கும் அவர் அளித்த பதிலாகவும் இதைக் கொள்ளலாம். இறுதியில் சுபத்திரை அவளிடம் அளிக்கப்பட சியமந்தகத்தை கடலில் தூக்கி எறிவது என்பது அனைத்தும் சென்று சேர்வது ஒரே இடத்தில் தான் என்பதைத் தான் காட்டுகிறது. சியமந்தகத்தையும் கூழங்கல்லாக உணர்கையில் தான் உண்மையத் தரிசிக்க இயலும். அட்டகாசமான முடிவு!!!!!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.

Thursday, September 3, 2015

ம்காலிங்கமும் பிரபஞ்ச மையமும்


மகாபாரதத்தின் எளிய மனிதர்கள் அவர்களின் உணர்வால், எண்ணங்களால் வெண்முரசில் வளர்ந்து உச்சம் பெறுகிறார்கள் என்றால் அது மிகை இல்லை. ஆனால், இந்திரநீலத்தில் எளிய மனிதர்கள் பலர்  சிற்பங்களாக செதுக்கப்பட்டு, அணிகள் அணிவிக்கும் அழகிலேயே அஷ்டலெட்சுமிகள் என ஒளிகொண்டு, ஒன்றிணைந்து வான்தொடும் பொன்தேரென இதயவீதியில் ஓடிவருகிறார்கள். .

எளிய மனிதர்களைப்பற்றி நூல் என்றோ, அஷ்டலட்சுமிகளின் பொருள் என்றோ எளிதில் இதைப்பற்றி பேசிவிடமுடியாமல்,  உலகம் தோன்றிய நாள்முதல் உயிர்த்து தழைத்து பூத்து கனிந்து வனமென மாறிக்கொண்டே இருக்கும் காதலை, நட்பை, வாழ்க்கையின் இருண்டபாகமான விழைவை, ஒளிப்பாகமான பக்தியை பெரிதென பேசுகின்றது இந்திரநீலம்.

கண்ணனின் மகாமானிடதன்மையை மட்டும் அல்ல அவனின் மகாயோகிஸ்வரன் நிலையையும் வெளிக்கொண்டு வந்து அழகுப்படுத்துகின்றது இந்திரநீலம்.

இந்திரநீலத்தில் கண்ணன் இந்த நாவலின் மையமென்ற வரியை அள்ளி நம்முன் வைக்கிறான். இந்தநாவலின் மையம் என்று மட்டும் அதைச்சொல்லிவிட முடியாது. இந்த பிரபஞ்சத்தின் மையமும் அந்த வரிகள்தான்.

வேதாந்த சிந்தனைகளை வாழ்க்கையில் தேடத்தொடங்குபவன் காலத்தை வீணடிக்கிறான். அவை பாதி உலகிலும் மீதி உள்ளத்திலுமாக முழுமை கொள்கின்றன-இந்திரநீலம்-90

இ்ந்த உண்மையை கண்டு அடைந்து அதை வாழ்வில் சரியாக பயன்படுத்தும் மானிடன்.
கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்கு தக-என்று வள்ளுவன் சொல்லும் குறளுக்கு வித்தாகின்றான். கற்றும் கற்றப்படி நிற்க முடியாதவன், மீனுக்கு வாலையும், பாம்புக்கு தலையையும் காட்டும் விலங்குமீன் ஆகின்றான். விலாங்குமீன் உலகத்தில்தான் ஒற்றைமீன் கண்டு உலகத்தில் யோகிஸ்வரன் என்று மானிடமும் உள்ளது என்பதை நிலை நிறுத்துகின்றது இந்திரநீலம்.


கண்ணன் சொல்லும் வேதாந்த வாழ்க்கைப்படி, காதலின் பாதி வெளியில் இருக்கிறது, காதலின் மீதி அகத்தில் இருக்கிறது. அகக்காதலை பெண்  வடிவமைக்கிறாள், புறக்காதலை ஆண் வடிவமைக்கிறான். அகமும் புறமும் இணையும் அந்த மையத்தில் நிற்கும் ஆணும், பெண்ணும் என்றும் காதலில் இருக்கிறார்கள். அவர்கள் தளர்ந்த வயதிலும் அந்த முதல் காதல் கணத்திலேயே இருக்கிறார்கள். அப்படி இருக்கமுடியாதவர்கள் பருவவயதிலும் ஒருவருக்கு ஒருவர்சுமையென்றாகி துன்பப்படுகிறார்கள். காதலை அகத்தில் கட்டமைத்த சுஃப்ரையால் புறத்தை கட்டமைக்க முடியவில்லை. காதலை புறத்தில் கட்டமைத்த திருஷ்டத்யுமனால் அகத்தை கட்டமைக்கமுடியவில்லை. அவர்கள் இணையும்போதே அது மையத்தை அடையும். காளிந்தியும் கண்ணனும் இணைந்ததுபோல் அது. இந்த உண்மையை அறிய திருஷ்டத்யுமனுக்கு கண்ணன் காளிந்தி கதை வேண்டி உள்ளது. இந்திரநீலம் வேண்டி உள்ளது.

மனிதர்கள் கொள்ளும் நட்பு என்பது புறத்தில் கட்டமைக்கப்படுகிறது. புறத்தில் கட்டமைக்கப்படும்போதே அகத்திலும் அது பாவனையாக கட்டமைக்கப்படுகிறது. புறத்தில் கட்டமைக்கப்படும் நட்பு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் இடித்து நொருக்கி மாத்தி மாத்தி கட்டமைக்கப்படுகிறது. இந்த புறக்கட்டமைப்பைத்தாண்டி அகத்தில் எழும் பாவனை நட்பு அங்கேயே நிலைக்கிறது. நிலைத்தப்படியே வளர்கின்றது. அகமும் புறமும் இணையும் அந்த மையத்தில் வந்து நிற்கும் நண்பர்கள். நண்பர்களாகவே நிலைக்கிறார்கள். புறத்தில் ஏற்படும் சிதைவுகளைக்கொண்டு அகத்தையும் சிதைத்து சிதைத்து அடுக்குபவர்கள் மையம் கிடைக்காமல் சிதைகிறார்கள். கண்ணனும், பார்த்தனும் எத்தனை எத்தனை புறக்கட்டுமானத்தில் மாற்றம் கண்டாலும் அகத்தில் இருக்கும் நட்பை தக்கவைப்பதாலேயே என்றும் நண்பர்கள் என்றே வாழ்கின்றார்கள். திருஷ்டத்யுமனனும், சாத்யகியும் அந்த உள் உலக பிணைப்பை அறியும் தருணத்தில் நட்பின் மையத்தை அடைந்து பார்த்தன், கண்ணனெ ஆகின்றார்கள். அதற்கு இந்திரநீலம் வேண்டி உள்ளது.  

கண்ணனின் எட்டு மனைவியரும் எட்டுவகை வாழ்க்கையில் இருக்கிறார்கள். அவர்கள் எட்டுவகை வாழ்க்கையும் எட்டுவகை சியமந்தகமணி ஒளி என ஒளிர்கிறது. அந்த ஒளியின் வழியாக அவர்களின் குணங்கள் வெளிப்படுகின்றது. குணங்கள்வழியாக அவர்கள் விழைவை, வாழ்க்கையை அமைக்கிறார்கள். புறத்தில் அமைக்கும் அந்த வாழ்க்கை புறத்தோடு மட்டுமா உள்ளது? அதுதான் அவர்களின் அகவாழ்வாகவும் இருக்கிறது. அகம் அறியமுடியாமல் அவர்கள் அணைவரும் புறம் அறிந்து பூசல்கொண்டு இருக்கிறார்கள். கண்ணன் அவர்களின் புறத்தைக்கொண்டு அகத்தை அறியவைக்கிறான். இந்திரநீலம் அந்த இடத்தில் வந்து அக புற வாழ்க்கையின் கண் என்று நிற்கிறது.  

சியமந்தகமணி கிடைத்தால் பயன் என்று நினைக்கும் ஏழு மனைவியும், அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பயன் என்று நினைக்கும் காளிந்தியும், பயன் என்ற வட்டத்தின்  புறம் என்று இருக்க, சியமந்தகமணி கிடைத்தும் அதை பயன் என்று கொள்ளாமல் அதை கடலி்ல் வீசும் இடத்தில் சுபத்திரை கண்ணனின் பயன் என்ன என்று அர்ஜுனனுக்கு முன்பே காட்டுகின்றாள். பயன் என்ற வட்டத்தின் புறத்தையும் அகத்தையும் இந்திரநீலம் இங்கு மையம் காட்டிச்சுழல்கிறது. 

பார்த்தன், சாத்யகி, குசலன். கண்ணனின் ஏழு மனைவியர், சுபத்திரை என்று அவர்கள் கொள்ளும் புறத்தில் உள்ள பக்தியின் வழியாகத்தான் கண்ணனை அணுகுகின்றார்கள், ஆனால் அகத்தில் உள்ள பக்தி என்பது கறுப்பு திரையிட்ட அறையெனவே இருக்கிறது. அகத்தில் பக்தி இருக்கிறதா? புறத்தின் உருவம், அகத்தில் எழுகின்றதா? எழுந்தாலும் அது அந்த கணத்தின் என நிழல் எழுந்து வருகிறது. அக உலகின் உருவம் துளங்கவில்லை. ஜோதி இல்லை. காளிந்தியின் அகத்தையும், புறத்தையும், கதையென விளக்கும் இடத்தில் கண்ணன் அனைவர் இதயத்திலும் ஜோதிதரிசனம் செய்து அகஉலக உருவை, அகப்பக்தியை காட்டுகின்றான்.  இந்த அகபக்தியை அறியும் தருணத்தில் இருந்து திருஷ்டத்யுமனனும் கண்ணனை அகத்திலும் முழுமையாக குடிவைக்கிறான். கண்ணனை தன் கடவுள் என்று முழுதாக வைத்ததால் கண்ணனின் சொல்லை தன் தெய்வத்தின் சொல் என்கிறான்.  திருஷ்டத்யும்னன் மெய்ப்பு கொண்டான். மெல்லிய குரலில்அது என் தெய்வத்தின் சொல்என்றான்-இந்திரநீலம்-92. அக புற பக்தியின் மையம் என்று இங்குவந்து இந்திரநீலம் ஒளிவிடுகின்றது.

விஞ்ஞானம் புற உலகத்தை கட்டமைத்து புற உலகத்தை நிறுபிப்பதோடு நின்றுவிடுகின்றது. மெய்ஞானம் புற உலகத்தை கட்டமைக்கும்போதே, அக உலகத்தையும் ஒளிக்கொண்டு கட்டமைக்கிறது.விஞ்ஞானம் அறிந்தவன் பாதி உண்மையை மட்டும் அறிந்தவன், இந்த உலகம் தட்டை என்று வாதிடுபவன். மெய்ஞானம் அறிந்தவன் முழு உலகத்தையும் அறிகின்றான், இந்த உலகம் உருண்டை என்கிறான். அங்கு ஒரு தட்டையான புவியில் ஒரு வளைந்த ஆகயம் வந்து அமர்ந்து லிங்கம் என்று தன்னை தரிசி்க்கச்சொல்கிறது. இது இந்திரநீலம் காட்டும் லிங்கதரிசனம்.

இந்திரநீலம் வாழ்க்கையின் மையத்தை காட்டி, ஒவ்வொரு தொடக்கமும் மையம் என்று சொல்லி, ஒவ்வொரு மையமும் வாழ்க்கை உருண்டையின் அச்சென்று  சொல்லி, வாழ்க்கை தட்டையாய், உருண்டையாய் ஒன்றன்மீது ஒன்று அமர்ந்த லிங்கம் என்று காட்டும்போது இந்திரநீலம் லிங்கத்தின் முன் வைக்கப்ட்ட தீபம் என்று ஒளிகிறது. .

இந்திரநீலம் வாழ்க்கையின் புற உலக உணர்வுகளாகிய விஞ்ஞானத்தையும், அக உலக உணர்வுகளாகிய மெய்ஞானத்தையும் இணைக்கும் முழுமையான நூல். ஜெவின் ஈடு இணையற்ற உழைப்பால் விளைந்த அற்புத பொக்கிஷம். வெண்முரசு ஆறுநூல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு, இ்ந்த நூல் எழுதும்போது ஜெ  இந்தியாவின் மறு எல்லலையில் இருக்கும் அமெரிக்காவிலும் கால்பதித்து இருந்தார் என்பதுதான்.  நதியின் தொடக்கம் அதன் மையம் என்ற வேதாந்த கருபொருள்  இங்கு நினைவில் வந்து நிறைகின்றது. இதுவும் கண்ணனின் லீலையில் ஒன்று.  இந்திரநீலம் புறத்தில்தான் ஒரு சொல், அகத்தில் அது பிரபஞ்ச மையம். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

தீராநட்பு

திரு. ஜெ,

"திருஷ்டத்யும்னன் தன் பிடியை இறுக்கிவிட்டு கையை இழுக்க முயல சாத்யகி மீண்டும் ஒருமுறை பற்றி இறுக்கினான்."

அந்த நண்பர்கள் இருவரும் கொண்ட நட்பின் ஆழத்தையும், அந்நட்பினை பிரிய விழையாத தன்மையையும், அந்தப் பிரிவு அளிக்கும் பெருந்துயரையும், அந்தத் துயர் பெருக்கும் உள்மனப் போராட்டத்தையும், அப்போராட்டத்தைச் சமன் செய்ய முயற்சித்து, விழிபெருக்கத் துடிக்கும் நீரையும், நீர் வழியாமல் அடக்கி நிற்கும் உறுதியையும் நமக்கு ஒருசேர காண்பிக்கிறது சாத்யகியின் மீண்டும் பற்றி இறுக்கிய அந்த அன்பின் இறுக்கம்.

துவாரகையை விட்டு நீங்கும் மனவேதனை திருஷ்டத்யும்னன் மட்டும் அனுபவிப்பதாகத் தோன்றவில்லை.  நாம் அனைவரும் அவ்வேதனையை உள்ளத்தில் உணர்வதாகவே உள்ளது.

"ஒருகணம் உளஅதிர்வொன்றை அவன் உணர்ந்தான். அவன் அதைவிட்டு விலகுவதாகத் தோன்றவில்லை, அணுகிக்கொண்டிருப்பதாகவே தோன்றியது. விழிகளை மூடி மூடித்திறந்து அந்த உளமயக்கை வெல்ல முயன்றான். அவ்வெண்ணம் கற்பாறையில் செதுக்கப்பட்டதுபோல நின்றது. அவன் அதைநோக்கித்தான் சென்றுகொண்டிருந்தான்."

"இளையோனே, ஒவ்வொன்றின் ஊற்றுமுகமும் அதன் மையமே தான்" என்று இளைய யாதவர் சொல்வது போல், திருஷ்டத்தும்னன் இங்கு இப்போது பயணத்தை ஆரம்பிக்கிறான். ஒரு சுற்று முடித்து இங்குதானே வந்தாக வேண்டும்.  அப்படி துவாரகையும், இளையயாதவரும் அவனின் மையமாய் இருக்கையில் அவன் நெருங்குகிறானன்றி, பிறிகிறான் என்பது ஏது.  

கணபதி கண்ணன்

திருஷ்டதுய்ம்னன்

அன்புள்ள ஜெமோ!

இன்று இந்திர நீலத்தின் முழுமையை வாசித்து முடித்தேன்.
மிகவும் ஆச்சர்யமான ஒன்று என்னவென்றால், முந்தைய பகுதிகளில்
வரும் திருஷ்டத்யும்னனின் சித்தரிப்பு மிகவும் தட்டையானதாக இருந்தது.
நானே கூட ட்விட்டரில் 'வாளேந்திய திருஷ்டத்யும்னன்' என்ற பதம் எத்தனை
 முறை மீளவருகிறது என்பதையும் அதை 'இராஜகுமாரன்' வடிவேலுவிற்கு ஒப்பிட்டு
பகடி செய்திருந்தேன். ஆனால் இந்திர நீலத்தில் திருஷ்டத்யும்னனின் பாத்திரம்
 அதன் வருங்கால செய்கைகள் அனைத்தும் உட்பட கோடிடப்பட்டு செம்மை செய்த
 பொற்சிலை என ஜொலிக்கிறது. துவாரகை எனும் நகரைக்களமாக்கி எட்டு இலக்குமிகளின்
தன்மையும் ஆட்சியையும் அழகாக விளக்கிய நூல் எனும் முறையில் இந்திரநீலம்
 ஒரு முழுமையான படைப்பாய் மிளிர்கிறது. இனி மீண்டும் காண்டவம் தொடரும் என்று நினைக்கிறேன்
(அல்லது கனவு காண்கிறேன்).

அன்புடன்,
ஜெய்கணேஷ்.

Wednesday, September 2, 2015

அடுத்த நாவல்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,


தங்களது இந்திர நீலம், மிகவும் அருமை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தினமும் வாசித்தது வந்தேன். தங்களது கற்பனை வளம், என்னையும் தினமும் கிருஷ்ணனுடைய லீலைகளில் ஈடு பட வைத்து, ஓரு பட காட்சி போல் நானும் அதை அனுபவித்து வந்தேன். தினமும், துவாரகையிலும், யமுனையிலும் நானும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வாழ்ந்திருக்கிறேன். மிகவும் அற்புதமான அனுபவம்.


அடுத்த நாவலுக்கு 15ம் தேதியை நோக்கி காத்திருக்கிறேன்.
நன்றி


ஸ்ரீராம்
தாம்பரம்-சென்னை

அன்புள்ள ஸ்ரீராம்


நன்றி

அடுத்தநாவல் இன்னும் தொடங்கவில்லை. தொடங்குவதற்கு முந்தைய பதற்றம் சோர்வு அச்சம்...


ஜெ