Thursday, April 9, 2015

திருதராஷ்டிரனின் மாற்றம் 2




 பால் மோரான தருணம் எது? பாலில் உறை மோர் ஊற்றிய நேரமா? அல்லது  தூய பாலின் மணம் குறைந்து மோரின் மணத்தை நாம் அறிய தொடங்கும் தருணமா?  ஒரு குடம் பாலில் ஒரு கரண்டியளவு மோரை ஊற்றிய  பின்னும் ஓரிரு மணிநேரம் பாலில் மோர் கலக்கப்பட்டதை யாரும் அறிய முடியாது. அது பாலாகவே தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும்.  அப்போது அதில் தேநீர், காப்பி தயாரித்தால்கூட இயலும்.   அப்புறம்தான்  அது இனி பாலில்லை மோர் என தெரிய ஆரம்பிக்கும்.

 அனுபவம் வாய்ந்த ஒரு சமையல் நிபுணர்கூட அது உறையூற்றப்பட்டது என அப்போதுதான் அறிவார். இப்போது பாலின் குணங்கள் குறைந்து மோரின் குணங்கள் தெரிய ஆரம்பிக்கும் தருணத்தையே இங்கு பால் மோராகும் தருணம் என ஆய்ச்சியர் சொல்வது.  துரியோதனன் வாலெடுத்து தன்னை மாய்த்துக்கொள்ளும்போது திருதராஷ்டிரன் பதறி எழுவதில் கண்ணன் மோரின் மணத்தை அறிகிறான். 


 திருதராஷ்டிரன் இனி பாலில்லை.  ஆனால் உறைமோர் ஊற்றப்பட்டது எப்போது? திருதராஷ்டிரன் தன் மகனை குழவியாக கையிலெடுக்கிறானே அப்போதுதான் என நினைக்கிறேன். அன்றே அவன் எக்காரணம் கொண்டும் என் மகனை கைவிடேன் என சொல்லிக்கொள்கிறான். அவன் தந்தைமை பிறந்த அந்த கணம் அவனுள் உறை மோர் ஊற்றப்பட்டது.  இன்று அவை நிகழ்வில் அவனுள் இருந்து மோர் மனம் வெளிப்பட ஆரம்பித்ததை கண்ணன் அறிகிறான். இனி திருதராஷ்டிரன் திரும்பவும் பாலாக ஆக முடியாது. பீஷ்மருக்கு இதை உணர்த்த கண்ணான் கையாளும் உவமைதான் இந்த பால் மோராகும் தருணம்.

தண்டபாணி துரைவேல்