Saturday, April 4, 2015

வெண்முகில் நகரம்-58-மூன்றாவது புள்ளி



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

தம்பி இல்லாமல் அக்கா பிறக்கலாம்,
அக்கா இல்லாமல் தம்பி பிறக்கக்கூடாது
பிறந்தால்-
ஆயுள் காலம்வரை ஆண் ஆணாகவே இருந்துவிடுவான்.

ஒருநாள் இப்படி ஒரு நினைவு.எனது சிற்றறிவுக்கு இது என்ன பொருள் சொல்கின்றது தெரியவில்லை “அக்கா” என்ற அந்த உறவு மட்டும்தான் புரிகின்றது அதற்கும் அப்பால் உள்ள அந்த நுண்ணிடம் என்ன? தெரியவில்லை.

அக்கா என்றதும் எனக்கு மிக பிடித்த இரண்டு “அக்காள்” உண்டு. ஒன்று ராஜராஜசோழன் அக்கையார் குந்தவைதேவி பிராட்டியார். மற்றொன்று மண்ணில் தன் வாழ்வு வாடி வதங்கி கருகிப்போனபோதுகூட தனது தம்பியை வான்வரை தழைக்க வாழவைத்த.தழைத்தப்படியே இருக்க வைத்த திருநாவுக்கரசர் அக்காள் திலகவதியார். திலகவதியாரைப்பற்றி எண்ண என்னால் முடியாது அதனால் குந்தவைதேவியாரைப்பற்றி எப்பவாவது எண்ணுவது உண்டு. என்ன ஒரு அற்புதமான அக்காள் இவள்! அந்த தம்பிதான் என்ன ஒரு அற்புதமான தம்பி. எதற்கும் வசப்படாத மங்கைபாகத்தானுக்கு வான்முட்டும்கோயில் எடுத்து வசப்படுத்தி சிவபாத சேகரன் என்று சொல்லிக்கொண்டவன் தன் வாழ்நாள் எல்லாம் சுமந்துபோனது குந்தவைபாதம் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?  புவியில் அவன் கொண்ட மண்ணில் எல்லாம் அவன் பூக்க வைத்தது அவள் பாதம் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும். 


அந்த அக்காவிற்கு பிறந்ததால் அந்த தம்பி அப்படி ஆகின்றானா? அப்படி ஒரு தம்பி தனக்கு பிறந்துவிட்டதால் அந்த அக்கா அப்படி ஆகின்றாளா? காந்தாரியும், சகுனியும் இப்படி ஏதோ ஒரு கணத்தில் ஆகிவிடுகின்றார்கள்.

பெண்ணை இரண்டு இடத்தில்தான் வைத்துப் பார்க்கமுடியும், ஒன்று அன்னை இடத்தில் வைத்து மற்றொன்று காமத்தின் இடத்தில் வைத்து. அன்னையின் இடத்தில் வைத்துப்பார்ப்பது எல்லாம் எளிதான காரியம் இல்லை.அன்னையின் இடத்தில் வைத்துப்பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அது காமத்தின் இடத்திற்கு நகர்ந்துப்போவதைக்காண்டு திகைத்த நாட்கள்தான் அதிகம்.பெண்ணின் இந்த இருமுனைகளுக்கு அப்பால் இருகும் ஒரு புள்ளியை இன்று காட்டுகின்றீர்கள். அந்த மூன்றாவது புள்ளி அதிநுட்பமும், உயர்வும் நிறைந்தது. ஒரு கோணத்தை உருவாக்கிவிடுகின்றது. காமம், அன்னை என்னும் இரண்டு எதிர் எதிர் புள்ளிகளால் உருவான பெண் என்னும் நேர்க்கோட்டை வளைத்தால், எதிர் எதிர் திசையில் இருந்த அந்த இரண்டு புள்ளிகளும் அப்படியேதான் இருக்கும் ஆனால் ஒன்றுக்கு ஓன்று செங்குத்தாக மாறி நிற்கும். காமத்திற்கு செங்குத்தாக அன்னை, அன்னைக்கு செங்குத்தாக காமம். ஆனால் அங்கு அதனால் ஒரு கோணம் உருவாகி விடும். அந்த கோணம் இரண்டு புள்ளிகளுக்கும் அப்பாற்ப்பட்ட ஓரு புள்ளி. அன்னையின் இடத்திலோ, காமத்தின் இடத்திலோ இல்லாத ஒரு நெகிழ்ந்த புள்ளி ஆனால் உடையாத புள்ளி.  

அந்த மூன்றாவது முள்ளி என்பதை பெரும்ஞானம் படைத்தவர்கள்தான் அறியமுடியும், சீதையை ராவணன் அறிந்தது ஒரு புள்ளி, அனுமன் அறிந்தது ஒரு புள்ளி இந்த இரண்டு புள்ளியும் இல்லாத ஒரு புள்ளியை அறிந்தவன் லட்சுமணன் என்று உங்களால் அறிகின்றேன். இதைதான் திரிபுரைதரிசனம் என்பதா? லட்சுமணன் சீதையை அறிந்தது எந்தவிதத்தில் அதை அவன்கூட சொல்லமுடியாது. அவனை சீதைக்கூட புரிந்துக்கொள்ளமுடியாது. வெண்முரசுக்கும், உங்களுக்கும்  இந்த இடத்தில் நன்றி சொல்லியே ஆகவேண்டும். லட்சுமணன் கண்ணால் சீதையைப்பார்க்கும் இடத்தை காண்டியதற்கு. மானிட வாழ்க்கையில் அன்னையையும், மனைவியையும் தவிர்த்து மற்றைய அனைவரையும் லட்சுமணன் கண்கொண்டு நோக்கினால் உய்யலாம்.  வாழ்வின் அனைத்து இடங்களிலும் மூன்றாவது இடம் ஒன்று உள்ளது. அதை உணரவே முடியும், அந்த உணர்தல்தான் ஞானத்தின் ஆரம்பப்படி என்று நினைக்கின்றேன்.  

துணையும் தொழும்தெய்வமும் பெற்றத்தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கணையும் கருப்புசிலையும் மென்பாசங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே-அபிராமி அந்தாதி

துணையையும், பெற்றத்தாயையும் பார்க்கமுடியும் தொழும்தெய்வத்தை உணரத்தான் முடியும். வேதவிருட்சத்தின் தண்டையும், தளிர்களையும்தான் பார்க்கமுடியும், அதன் வேரை உணரத்தான் முடியும். வில்லம்பையும், பாசஅங்குசத்தையும் பார்க்கத்தான் முடியும், அவை தைப்பதையும், கட்டுவதையும் உணரத்தான் முடியும்.

பெண் அன்னையின் இடத்திலும், காமத்தின் இடத்திலும் இருப்பதை பார்க்கமுடியும், ஆனால் லட்சுமணன் போன்றே தியாகமே வடிவெடித்தவர்கள் பெண்ணை அறியும் இடம் அவர்கள் மட்டுமே உணரக்கூடிய இடம். இது ஒரு அரிதான இடம், பெரும் ஞானிகளுக்கு வாய்க்கும் பெரும் வாய்ப்பு அது. துளியும் தியாக உணர்வு இல்லாத துரியோதனுக்கு அந்த அடம் அறியகிடைத்தால் எதிர்விளைவையே உண்டாக்கும். காந்தாரி இன்று தொடும் இடம் பெரும் இடம், முற்றும் புது இடம். பெண்களை அன்னையின் இடத்திலும் வைக்காமல் தாண்டிப்பார்க்க வைத்துவிட்டீர்கள் ஜெ.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமிவிவேகானந்தருக்கு ராதையின் ராதையின் தரிசனம் கிடைக்கவேண்டும் என்று “தாயே! உனது தரிசனத்தை அவனுக்கு கொடு” என்று தனது படுக்கையில் கைவிரால் எழுதுவார். விவேகானந்தர் ராதையின் தரிசனம் பெற்றப்பின்பு. “ராதையின் தரிசனத்தை பெறாமல்  போயிருந்தால் என்வாழ்வு வெறும் வறட்சியாய் போயிருக்கும்” என்று சுவாமி விவேகானந்தர் சொல்வார்.

எவ்வளவு மழைபெய்தாலும் அடுத்த கணம் அப்படியே இருகும் மணலும், மழைபெய்த உடனே சேறாகிவிடும் களிமண்ணும் என்று இரண்டுவகை ஆண்மனதில் யாரோ ஒரு பெண் மணலும் ஆக்காமல், களிமண்ணும் ஆக்காமல் ஈரப்பத்தோடு இருக்கிறாள். அதை ஒற்றைச்சொல்லில் சொல்வது என்றால் தெய்வீக சாயல் என்று சொல்லலாம். அது வாழ்விக்குமா? கொல்லுமா? என்பது காலம் சூழ்நிலை உண்டாக்குவது. வாழ்வித்தாலும், கொன்றாலும் அந்த ஈரப்பதம் மாறுவதில்லை. இதுவும் இயற்கைதானோ.
.“கண்ணா,மிகமிக அரியதோர் உணர்வுஇது. பெண்ணைதாய்மை வழியாகவோ காமம் வழியாகவோதான் ஆண்கள் அணுகுகிறார்கள், அறிகிறார்கள். என்றோ எவரிலோ அதற்கப்பால் ஒன்றுநிகழ்கிறது. அந்த ஆண் ஒருபெண்ணை வழிபடுகிறான். அவள்காலடிமண்ணையும் போற்றும் பெரும்பணிவை அடைகிறான்என்றாள்காந்தாரி.
அதுமிக ஆபத்தானதுயாதவனே. ஏனென்றால் அதன் அரியதன்மையாலேயே அதுபுரிந்துகொள்ளப்படாதுபோகும். அவ்வுணர்வை அடைபவனுக்கேகூட அதைவிளங்கிக்கொள்ள முடியாமல் ஆகலாம்

எனது சிற்றறிவுக்கு எளிதாக புரியும் வகையில் இப்படி எண்ணிக்கொள்கின்றேன். சீதையை லட்சுமணன் எந்த கண்ணோடு பார்த்து இருப்பானே அந்த கண்ணோடு பார்க்க சொல்லும் கட்டம். லட்சுமணனை சீதையாலேயே புரிந்துக்கொள்ள முடியவில்லை என்பதை நினைக்கும்போது, காந்தாரியின் தவிப்பு புரிகின்றது.
  
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்