Monday, April 6, 2015

வெண்முகில் நகரம்-59-நால்வரின் வளர்ச்சிஅன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

பீஷ்மர், துரோணர், கிருபர் மூவரின் அடுத்தக்கட்ட வளர்ச்சி அல்லது குணச்சித்திரம் இயல்பாக மாறிவிட்டது. காய் செங்காய் ஆனதுபோல.
மூன்றுபெருந்தெய்வகளில் ஒன்றுபோல் பீஷ்மர் இருப்பது ஒருவகை நிறைவான வளர்ச்சி. முன்னும் பின்னும் இயங்கியப்படியே நகர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் மானிட வாழ்க்கையில் சலிக்காமல் தான் பாதை எது என்பதில் மட்டுமே கவனம்கொள்ளும் சித்தத்தின் தெளிவு பீஷ்மர் உடையது. இந்த சித்தத்தின் தெளிவே அவருக்கு ஒரு தெய்வீக சாயலைத்தருகின்றது.

வாழ்க்கையில் எல்லாம் நமக்கு இருக்கவேண்டும் என்று விழைவு அடைந்துக்கொண்டே இருக்கின்றோம். எது எல்லாம் வாழ்க்கையில் வந்து சேர்கின்றதோ அதற்கும் அப்பால் பெரும் வெற்றிடம் தோன்றுவதுதான் ஆச்சரியத்தின் ஆச்சரியம். பெரும் குடும்பியாக ஆனவன்தான் மிகப்பெரிய வெற்றிடத்தில் இருக்கின்றான். பெரும் பணக்காரன்தான் ஒன்றும் இல்லை என்பதை உணர்கின்றான். சிந்தையில் சிந்தனை அலையடிக்க அலையடிக்கத்தான் சூன்யத்தில் மாட்டிக்கொண்டது புரிகின்றது. பெரும் காவியங்கள் படிக்கும்போதுதான் ஒன்றும் படிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றுகின்றது. பீஷ்மர் பேசாநோம்பில் இருக்கும் இடத்தை கண்ணன் சுட்டிக்காட்டுபோது அந்த இடத்தோடு பீஷ்மரைப் பார்க்கையில் ஒருவித தவிப்பு ஏற்படுகின்றது. ஓசையை ஓசையால்தான் எதிர்க்கமுடியும். பீஷ்மருக்குள் எத்தனை ஓசையிருந்தால் அந்த ஓசையை ஒழிக்க அவர் அந்த இடத்தை தேர்ந்து எடுத்திருப்பார்? அவர் மௌனம் பழகுவதே. தனக்குள் மீள மீள குவிந்துக்கொண்டு இருக்கும் சொற்களை ஒழிப்பதற்குதான். இருப்பதில் இருந்து இல்லாமைக்கு செல்வது.

கிருஷ்ணன் இடையில் கைவைத்து நின்றுஇங்கிருந்தால் சிந்தையில் ஏதும் நிலைக்காது. செவிநிறைக்கும் இந்தப் பேரோசை அமைக்கும் தாளத்தில் சொற்கள் மீள மீள ஒழுகிக்கொண்டிருக்கும்என்றான். சாத்யகி விழிகள் பஞ்சடைய நிமிர்ந்து காட்டை நோக்கியபின் குமட்டி ஓங்கரித்தான்.

நல்லது கெட்டது எது நடந்தாலும், இன்பம் துன்பம் எது வந்தாலும், பேசாநிலையில் நிற்கும் பீஷ்மரின் குணம் ஒளிபெறுகின்றது. சீவன் சிவனாகிவிட்டது போன்ற தோற்றம்.

மூம்முறைப்  திருதராஸ்டிரன்போல் பழுத்திருக்கிறார் துரோணர் என்ற இடத்தில் அவரே ஒரு குழந்தையாகி விட்ட குணச்சித்திரம். மகனை அன்றி மற்றொரு வழிபடும் தெய்வம் இல்லை என்ற எளிய அரசியலின் தொண்டன் மனநிலை.
கிருபர் ஆயுதங்கை வழிப்படத்தொடங்கிவிட்டார் என்ற இடத்தில் அவரும் ஒரு கொலைதெய்வமாக மாறிவிட்டார் என்பதை காட்டுகின்றீர்கள். கொல்வது படைக்கலங்களின் அறம் என்ற நிலைக்கு வந்துவிட்டார் என்ற குணச்சித்திரம் அவரையும் மனிதநிலையில் இருந்து மாற்றிவிட்டது.
மூன்றுபேருமே மூன்று தெய்வநிலையில்தான் இருக்கிறார்கள். அந்த தெய்வங்கள் வரம்கொடுக்குமா? என்றால் அந்த தெய்வங்களுக்கே அது தெரியாதபோது நாம் என்ன செய்யமுடியும்?

கண்ணன்கூட இங்கு மாறிவிட்டான், விளையாட்டுத்தனத்தில் இருந்து உயர்ந்து முழுதும் பொருப்பான மனிதனாக, எது எப்படி நடந்தால் என்ன என்ற பொதுவெளியில் நிற்காமல், இது நடந்தால்தான் நல்லது என்ற வரையருத்துச்சொல்லும் பக்குவத்தில், மானிட அகத்தில் நின்று பேசுகின்றான். குழந்தைத்தனமோ, கடவுளின் கட்டட்ட நிலையோ இல்லை. அதை விளக்கிக்காட்டுவதுபோலவே பீஷ்மரை வணங்கி ஆசிப்பெருகின்றான். இயற்கையை எப்போதும் அதன் சுபாவத்தோடு ரசிக்கும் கண்ணன், இங்கும் சத்தமிடும் நதியின் ஓசை மானிட சித்தத்திற்கு எதிராக செல்லும் வித்தையை சொல்கின்றான். இநத இடத்தில் இருந்து மானிடன் விலகவேண்டும் என்று காட்டுகின்றான். தியானத்தில் அமர்கின்றான். இதுவரை வந்த கண்ணன் ஒரு படி வளர்ந்து இருக்கிறான். ஆழ்ந்துப்பார்த்தால் இந்த அத்தியாத்தில்தான் அவன் தன்னை கொஞ்சம் மறைத்து, குறைத்து காட்டுகின்றான். தன்னை குறைத்தும் மறைத்தும் வாமனன்போல் காட்டுவதாலேயே இவன் திரிவிக்ரமன்போல பெரிதாகத்தெரிகின்றான்.

ஒருவனை குறைவாகக் காட்டுவதாலேயே அவன் பெரியவனாகத்தெரிவது கண்ணன் பாத்திரத்தில் மட்டும்தான் நடக்கும் என்று நினைக்கிறேன். இது உங்கள் எழுத்தின் வல்லமையா? கண்ணன் பாத்திரததை நீங்கள் படைத்த சிறப்பா? இரண்டுமே அந்த அற்புதத்தில் நிற்பதில் ஆனந்தம்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்