ஜெ,
பூரிசிரவசின் வாழ்க்கையில் பெண்கள் வந்து உட்கார்கிறர்கள். சிறகடித்து போய்விடுகிறார்கள். கைவீசிபிடிக்கமுடியாத மரம் போல அவன் நின்றுகொண்டிருக்கிறான். ஒருவகையில் பரிதாபம்தான். ஆனால் அத்தகைய கதாபாத்திரங்கள் ஒரு கிளாஸிக் நாவலுக்கு அழகைச்சேர்க்கிறார்கள் என்று தோன்றியது.
ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு என்ன வகையான வலியை அளிப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அந்தவகையில் அவனுக்கும் சாத்யகிக்குமான உறவு நுட்பமானது
பூரிசிரவஸ் காணும் கனவுகள் முக்கியமானவை. அவற்றை தனியாகவே ஆராயவேண்டும். அவனுடைய முடிவு அந்தக்கதைகளில் வந்துகொண்டே இருக்கிறது இல்லையா? வேறு எந்தக்கதாபாத்திரமும் இத்தனை கனவு காணவில்லை. கனவில் உண்மைநிகழ்வுகளும் மனப்பிராந்திகளும் கலந்து கிடக்கின்றன.
பூரிசிரவஸை ஒரு கனவுஜீவி என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
கண்ணன்.