ஜெயங்கொண்டம் திங்கள் கிழமை சந்தையில் காய்கறி விற்க சென்ற உறவினர் கடன் வாங்கி ஈடுவைக்க எடுத்து சென்ற மோதிரத்தை மண்ணில் தவறவிட்டுவிட்டார். மண்ணில் சாக்கைவிரித்து காய்களை கூறுகட்டும்போதுதான் வேட்டியில் சுற்றி மடியில் வைத்திருந்த மோதிரம் விழுந்திருக்கவேண்டும். மண்கூட தெரியாமல் மனித பாதங்களின் அடர்த்தி, மோதிரத்தை எங்கே தேடுவது? புற மனம் காய்கறியின்மீது, அகமனம் தவறிய மோதிரத்தின் மீது. வாழ்க்கையே கனமாகிப்போன கணம். ஒரு சின்ன ஓட்டைத்தான் விழுகின்றது எத்தனை சுமைகள் தொடர்ந்து விழுந்து அடர்ந்து மனிதனை புதைத்து விடுகின்றது.
காய்கறி எல்லாம் விற்று, மனித நடமாட்டம் அற்று, இருட்டியபின்பு விளக்கு வைத்து சந்தை மணலை சல்லடைப்போட்டு சலித்து மோதிரத்தை எடுத்துவிட்டார். ஈன்ற பொழிதில் பெரிது உவக்கும் மனம். மோதிரம் கிடைக்காவிட்டால் எப்படி இருக்கும்?
பூரிசிரவஸ்மீது காதல் கொண்ட கன்னியர்கள் அணைவரும் கடன்வாங்கி ஈடுவைக்கவேண்டிய மோதிரங்கள். பூரிசிரவஸ் அன்றாட வாழ்க்கைக்கு காய்கறி விக்கும் வியபாரி. அவன் பெற்றுக்கொண்டு வந்த மோதிரங்கள் எல்லாம் சந்தைமண்ணில் விழுந்த மோதிரங்கள். அவனும் விடாமல் சலித்துக்கொண்டுதான் இருக்கிறான்.
பூரிசிரவஸுக்கு கிடைத்த மோதிரங்கள் எல்லாம் அணிந்துக்கொள்ள கிடைத்தவை இல்லை மாறாக ஈடுவைக்க கிடைத்தவை. அவைகளின் மூலம் கிடைக்கும் பணமே பயனே அவனின் அடுத்த கட்ட வாழ்க்கையை நிலை நிறுத்தும். துரியோதனன் யாரையாவது காதலிக்கிறாயா? என்று கேட்டதும் துச்சளை என்று அவனால் ஏன் சொல்லமுடியவில்லை. கனவுகள் தடையில்லா பயணத்தில் நடக்கலாம். நிஜங்கள் தடையுள்ள பாதையிலேயே நடக்கின்றன. துச்சளை என்று அவன் சட்டென்று சொல்லி இருந்தால் துச்சளையை இழக்கும் கனத்திலேயே துரியோதனன் நட்பை இழக்க நேரிடும். துச்சளை பெரியதா? துரியோதனன் நட்பு பெரியதா?
பூரிசிரவஸின் கனவுகளும் காதலும் முதல் புள்ளியில் இருந்து பயணத்தை தொடங்கவில்லை மாறாக முடிவுப்புள்ளியில் இருந்து பயணத்தை பின்நோக்கி நகர்த்துகின்றன. பூரிசிரவஸ் ஒவ்வொரு கனவும் முடிவை தெரிவித்துவிடுகின்றது. அந்த முடிவு எப்படி வருகின்றது என்பதை விழையும் பயணங்களின் தொடர்ச்சிதான் பூரிசிரவஸ் வாழ்க்கை. சுருக்கமாக சொன்னால் மனிதர்கள் அனைவர் வாழ்க்கையும் பூரிசிரவஸின் கனவுகள்தான். இந்த கனவும் காதலும் கொண்டு பூரிசிரவஸை பார்க்கும்போது வளரவேண்டியவனின் வாழ்க்கை மேலிருந்து கீழ்என்று காட்டுகின்றது அதாவது புறத்திலிருந்து அகத்திற்கு என்று காட்டுகின்றது. எவ்வளவு உயரகோபுரம் என்று தெரிந்துக்கொண்டபின்பே அதற்கான அடித்தளம் அமைக்கமுடியும் என்ற கட்டுமானக்கோட்பாட்டு வாழ்க்கை. மலை மக்கள் வாழும் இயற்கை வாழ்க்கையில் இருந்து ஒரு வளர்ச்சி நிறைந்த சமூக வாழ்க்கைக்கு ஒரு எளிய மனிதன் எத்தனிக்க எத்தனை கனவு காணவேண்டி இருக்கிறது. எத்தனை கண்ணீர் விடவேண்டி இருக்கிறது. எத்தனை கரவு நெஞ்சம் கொள்ளவேண்டி இருக்கிறது. யாதார்த்தமான வார்த்தைக்குகூட அவமானப்படவேண்டி இருக்கிறது. யாருடைய காதலுக்காக போருக்கு செல்லவேண்டி இருக்கிறது.
துரியோதனன் காதல் புறத்திலிருந்து அகத்திற்கு செல்லும் அதே நேரத்தில் பூரிசிரவஸ் காதல் அகத்திலிருந்து புறத்திற்கு செல்லும் வாழ்க்கையின் முரணைக்காட்டுகின்றது.
எல்லோரும் ஒரே படகில்தான் பயணிக்கிறார்கள் ஆனால் ஒவ்வொருவரின் பயணமும் வெவ்வேறு.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.