Monday, April 13, 2015

பானுமதியும் தங்கையும்



அன்புள்ள ஜெ சார்

நான் வாசித்த மகாபாரதத்தில் துரியோதனன் மனைவி பானுமதி கலிங்கநாட்டைச்சேர்ந்தவள் கலிங்க ராஜாவான னின் மகள் என்றுதானே இருக்கிறது. நீங்கள் காசிராஜாவின் மகள் என்று எழுதியிருக்கிறீர்கள். அதனால் கேட்டேன்

செந்தில்

அன்புள்ள செந்தில்

ஆங்கில விக்கிபீடியாவிலும் அப்படி இருக்கிறது

அது ஓர் ஊகம் மட்டுமே. மகாபாரதத்தில் கடைசியில் சாந்திபர்வத்தி கர்ணன் துரியோதனன் நட்பை விதந்தோதும் போது அவர்கள் இருவரும் சென்று கலிங்கநாட்டரசன் சித்ராங்கதனின் மகளைக் கவர்ந்துவந்த செய்தி வருகிறது. ஆனால் அதில் அவள் பெயர் இல்லை. வெறுமே கன்னிகை என்றே உள்ளது

துரியோதனனின் மனைவிபெயர் பானுமதி என்பதே ஓர் ஊகம்தான். சில பாடங்களில்தான் அவள் பெயர் இருக்கிறது. மகாபாரதத்தின் வடக்கத்திய மெலதிக இணைப்பான ஸ்திரீபர்வத்தில் சில பாடபேதங்களில் உள்ளது

அவள் காசிமன்னனின் மகள் என்றுதான் வெட்டம் மாணி சொல்கிறார். ஏனென்றால் பின்னர் எழுதப்பட்ட ஸ்கந்தபுராணம் மார்க்கண்டேய புராணம் ஆகியவற்றில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் இரண்டு இடங்களில் காசிமன்னன் துரியோதனனுக்கு மகளைக்கொடுத்த மாமன் என வருகிறது. கேரளத்தின் கதகளி வடிவங்களிலும் காசிமன்னன் மகள்தான்

ஆகவே காசிமன்னன் மகள்தான் பானுமதி என்று எடுத்துக்கொள்வதே சரியானது என்று பட்டது. மகாபாரதத்திலேயே ஓரிருவரிகளுக்கு அப்பால் அவளுக்கு இடமில்லை


ஜெ