காந்தாரியை சந்திக்க
அந்தபுரத்திற்குள் கண்ணன் நுழையும் தருணத்தில் சாத்யகி காண்பது கண்ணனின்
இணைப்பாதத்தை. மானிடர் எவருக்கும் இல்லாத தெய்வப்பாதத்தை.
காந்தாரியின் படுக்கை
அறையில் இருக்கும் பீடத்தில் அமராமல், வெட்கம் இல்லாமல் கண்ணன் காந்தாரியின்
படுக்கையில் சென்று அமர்கின்றான். அப்போது சாத்தியகி அடைவது வெட்க உணர்வு. வெட்கத்தால்
உருவாகும் கூச்ச உணர்வு.
கண்ணன்,காந்தாரியின்
பணிப்பெண்ணிடம் காதல்பேசி காமத்தில் மூழ்கியன், அந்த சுவடே இல்லாமல் காந்திரியிடம்
மார்பில் தவழும் குழந்தையென இருக்கின்றான். கண்ணன் வெக்கம்கெட்டவானா? வெட்கத்தை
தாண்டியவனா?
வெட்கம் கெட்டவனை ஒரு பெண்
தன் குழந்தையென உணரமாட்டாள், அவள் அறிவு ஒத்துக்காள்ள சொன்னாலும் அவள் உள்ளுணர்வு
அதை ஏற்றுக்கொள்ளாது. கண்ணான் காந்தாரியை மட்டும் இல்லை காந்தாரியின் நெஞ்சில் கண்ணன்
கைப்படும் அந்த கணத்தில் ஒன்பது காந்தாரிகளையும் தாய் என்றே அறிய வைக்கிறான்
அதனால் அவன் வெடக்கம் கெட்டவன் இல்லை வெட்கத்தை சுண்ட சுண்ட காய்ச்சி வற்றிப்போக
வைத்தவன். வெட்கத்திற்கு அப்பால் சென்றவன். அவனால் வெட்கத்தில் இருக்கமுடியும்,
வெட்கமே இல்லாமலும் இருக்கமுடியும், சாத்யகி மூழ்கி தத்தளிக்கும் இடம் இந்த வெட்கம்.
காந்தாரியின் பணிப்பெண், துச்சளை, காந்தாரி என்ற மூவாரிடமும் மூன்றுவித வெட்கம்
கொண்டு தவிக்கிறான் சாத்யகி. இது கண்ணன் உயர்ந்து நிற்கும் மற்றொரு கோணம்.
இளைய காந்தாரியை கண்ணன்
காணும் இடத்தில் சாத்யகி வெறுப்பில் நின்றுவிடுகின்றான் ஆனால் கண்ணனிடம் வெறுப்பு
என்பது இல்லை. மூத்த காந்தாரியை எப்படி பார்த்தானோ, எப்படி நடத்தினானோ அப்படியே
இவளையும் நடத்துகின்றான். காந்தாரி பேசப்பேசக்கேட்டுக்கொண்டு இருந்தவன்,
சம்படையிடம் பேசி்க்கொண்டே இருக்கிறான். காந்தாரியின் பாதம் பணிந்தது போலவே,
சம்படையின் பாதம் பணிகின்றான். இதை எல்லாம் பார்க்கப்பார்க்க சாத்யகி வெறுப்பில்
துவள்கின்றான்.
ஞானம் என்பது
வெட்கத்தையும், வெறுப்பையும் தாண்டுவது. வெறுப்போடும், வெட்கத்தோடும் ஒன்றை
அணுகினால் அதன் மூலத்தை தூய்மையை அறியமுடியாது என்பதை அறிந்து இருக்கும் கண்ணன்
சாத்யகிக்கு சொல்லவருவது. ஞானமும்,
தூய்மையும் வெறுப்புக்கும் வெட்கத்திற்கும் அப்பாற் பட்டது என்பது.
இருமைவகை தெரிந்து ஈண்டு
அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
கண்ணன்
பேணுவது அறம், அறம்
இருமைகளுக்கு அப்பால் நிற்பது. இருமைகளுகக்கு அப்பால் நிற்க இணைப்பதங்கள்
தேவை. மண்ணில் எந்த மார்க்கத்திலும் பாதம் இல்லாமல்கூட பயணம்
செல்லமுடியும் ஆனால் அறமார்க்கத்தில் இணைப்பாதங்கள் இல்லாமல்
பயணிக்கமுடியாது.
கண்ணன் பாதங்கள் இணையானவை.
கண்ணன் வைக்கும் அடிகளும் இணையானவை. மண்ணில் வேறு எந்த மனிதருக்கும் இல்லாதது இந்த
அதிசயம். அவன் அறமார்க்கத்தில் நடப்பவன்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.