அன்புள்ள ஜெ சார்,
வணக்கம். வெண்முரசுடன் மகிழ்ச்சியாக கடக்கின்றன நாட்கள். நலம் விளைகிறேன்.
இன்றைய அத்தியாயத்தில் பூரிசிரவஸ் மண்டபத்துத் தோட்டத்திற்கு சென்று
அங்குள்ள மலர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பது தேவிகையின் ஆழ்மனதில்
இருக்கும் காதலைத் தான் அல்லவா? //மலர்கள் இதழ்களை சுருக்கிக்கொண்டு
தேனையும் மணத்தையும் உள்ளேயே தேக்கிக்கொண்டிருந்தன. மண்ணுக்கு அடியில்
வேர்களுக்குள் அவற்றின் தேனும் மணமும் நிறைந்திருக்கலாம். அங்கே அவை
மெல்ல வளர்ந்து நீண்டுகொண்டிருக்கலாம். மெல்லிய முணுமுணுப்பாக அவை அங்கே
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கலாம். விரல்நுனிகளால் தொட்டு
பிணைத்துக்கொண்டிருக்கலாம்.//
இருப்பினும் அந்த பத்தியைக் கடந்ததும் முன்னர் விஜயை அவன் சந்தித்துப்
பேசியதும் இதே மண்டபத்துத் தோட்டத்தில் தானே? என்ற எண்ணம் வர ஒருவேளை
அதற்குள் தேவிகையை மறந்துவிட்டு விஜயையைப் பற்றி நினைக்கத்
தொடங்கிவிட்டானோ என்று அஞ்சினேன். (ஒருவரிலிருந்து மற்றவருக்கு அலை
பாயும் இளைஞனாகத் தானே அவனின் அறிமுகம் இருந்தது.) ஆனால் இறுதியில் சலன்
"நீ விட்டுச்சென்ற பணி எஞ்சியிருக்கிறது" என்று கூற பூரிசிரவஸ் "உடனே..."
எனத் தயங்குகிறான். அவன் இன்னும் தேவிகையை மறக்கவில்லை; உறுதி
செய்துகொண்டேன். இளவரசன் பூரிசிரவஸ் முதிர்ந்துவிட்டான்; காதலிலும்.
நன்றி
அன்புடன்,
தினேஷ்
அன்புள்ள தினேஷ்
வெண்முரசின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் மாமனிதர்கள். நினைத்ததை அடையமுயல்பவர்கள். பூரிசிரவஸ் அவர்கள் நடுவே ஒரு சாமானியன்
ஜெ