நலமாக உள்ளீர்களா,
நீண்ட நாட்களிற்கு பின்பு எழுதுகிறேன். வெண்முரசை தவறாது படித்து வருகிறேன். நாள் ஒன்றில் தவறாத நிகழ்வாக அதை பெரும்பாலும் கடைப்பிடித்து வருகிறேன். ஒரு நாள் தவறினாலும் சிறிய ஒரு ஏக்கம் வந்து விடுகிறது. படித்துக் கொண்டிருக்கையில் ஒரு வரி தீடீரென எதிர்பாரா ஒரு சுழல்போல உள்ளிழுத்து உணர்வுகளை எங்கோ கொண்டு சென்று விடும்.
ரயிலில் செல்லும்போது கைத்தொலைபேசியில் படித்து செல்வேன். அந்த உள்ளிழுக்கும் கணம் தரும் அனுபவம் நிகரற்றது. அந்த அனுபவத்தை தரக்கூடிய எழுத்துக்கள் அரிதானவை. அதற்காக உடனடியாக உங்களிற்கு எழுத வேண்டும் என நினைப்பேன் ஆனால் நாளாந்த அழுத்தங்களும், நிகழ்வுகளும் அதை செய்ய முடியாமல் ஆக்கி விடும். இருப்பினும் என் அந்த உணர்வுகளால் எங்கோ ஒரு இடத்தில் உங்களை சந்தித்து விட்டதாகவே எண்ணுகிறேன். உங்களிடம் என் கருத்துக்களை சமர்பித்து விட்டதாகவும்.
கிருஷ்ணனின் தூது, பூரிசிரவஸின் உணர்வுகள் என சமீபத்திய அத்தியாயங்கள் ஒன்றை ஒன்று கடந்து உயரே சென்று கொண்டே இருக்கின்றன. மக்கள் அருந்தும் மதுவிலிருந்து, உணவுவரை கதை நடைபெறும் உலகை நுண்ணிய பல தகவல்களால் நீங்கள் நெய்து செய்வது ஒரு பறக்கும் கம்பளம். அதில் பயணிப்பது அலாதியாக இருக்கிறது.
மன்னன் அவையில் கோமாளிகளிற்கும் இடமுண்டு. தமிழ் எழுத்துலகிலும் அதற்கு குறைவில்லை போல. கோமாளிகள் மன்னன் போல வித்தை காட்டலாம் ஆனால் குடிமகனிற்கு தெரியும் மன்னன் யார் என.
எமக்கு மேலான அந்த சக்தி என்றும் உங்களை நிறைவாக ஆசிர்வதிக்க வேண்டி முடிக்கிறேன்.
அன்புடன்
ஷங்கர்