Thursday, April 2, 2015

ஆசிரியன் என்னும் உருவகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

   நான் நலமாக இருக்கிறேன். தங்களின் நலம் அறிய ஆவல்.

தங்களது "வெண்முரசில்" கிருஷ்ணன் வரும் இடங்கள் எல்லாம் என்னை மிகுந்து வசீகரிக்கிறது. அவர் "பிரயாகையில்" விதுரரிடம் பேசும் இடங்கள், அதன் பின் அவர் "வெண்முகில் நகரில்" வரும் இடங்கள் அனைத்தும் எனக்கு என்னில் ஏதோ ஒன்று செய்கிறது. 

நானறிந்த மகாபாரதத்தில் எனக்கு பிடித்த இரு பெயர்கள் "கிருஷ்ணன்" மற்றும் "கர்ணன்". இங்கு நீங்கள் கிருஷ்ணனை உபயோகிக்கும் முறை, எனக்கு இது போல் ஒரு தலைவர், குரு இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனே என்னை கடக்க செய்கிறது. 

 நான் பல சமயங்களில் "கிருஷ்ணன்" போன்ற அபார திறமையான, கூர் நோக்குடன் கூடிய மனிதர்கள் என்று நம்பி "சாத்யகி" போல் அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்து , பழகிய பின் அவர்களும் சராசரி மனிதர்கள் என்று தெரிய, ஒரு ஏமாற்ற்றதுடன் என் வழியிலேயே செல்கிறேன். இதை ஏன் செய்கிறேன் என்று தெரியவில்லை ஆனால் தேடுவதை நிறுத்தவும் இல்லை.

"பிரயாகையில்" கிருஷ்ணனின் செயலை பீஷ்மர், விதுரரிடம் விவரிக்கும் இடம் மிக அருமை. அந்த அறிவையே வாழ்கையில் கற்று கொள்ள வேண்டும் என்றே நான் ஓடி, குதித்து கொண்டிருகிறேன். அத்தகைய அறிவே வாழ்கையை மிக இயல்பாக, மகிழ்ச்சியோடு, ஏமாற்றமில்லாமல் அனுபவிக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது.

 மேலே கூறியவை நீண்ட நாட்களாக "கிருஷ்ணனை" படிக்கும் தோறும் தோன்றும் எண்ணங்கள். மற்றபடி உளறியதற்கு பொருத்துக் கொள்ளவும். மிகுந்த ஆர்வமுடன் வெண்முரசைப் படிக்கிறேன். நன்றிகள் பல.

இப்படிக்கு,
வினோத்குமார்

அன்புள்ள வினோத்
நன்றி
அப்படி ஒரு மனிதன் கண்ணெதிரில் வந்தாகவேண்டும் என்பதில்லை. அவர் ஒரு உருவகமாக இருந்தாலும் ஆசிரியராக அமைய முடியும்
ஜெ