Thursday, April 2, 2015

யாதவரும் மாட்டிறைச்சியும்
காம்பில்யத்தின் உண்டாட்டில், இளங்கன்றின் இறைச்சி பரிமாறப்படுகிறது. யாதவ விருந்தினர்களுக்கு இது பரிமாறப்படுவதில் ஏதும் தவறில்லையா? யாதவர்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள் அல்லவா?

சங்கரன் இ.ஆர்

அன்புள்ள சங்கரன்,

உணவை கொல்லாமையுடன் தொடர்புபடுத்துவது, உண்பதை ஒரு வன்முறை அல்லது பாவம் என்பதெல்லாம் சமணம் உருவாக்கிய மனநிலை. அது இந்தியச்சூழலில் நல்ல விளைவுகளை உருவாக்கிய ஒரு கொள்கை.

மகாபாரதக் காலகட்டத்தில் அவ்வெண்ணம் இருக்கவில்லை. உணவாகும் மிருகம் புனிதமானது, தன் உடலை அளிக்கும் கருணை கொண்டது என்ற எண்ணமே இருந்தது. விளைபொருட்களையும் நீரையும் புனிதமானதென நினைத்துத்தானே உண்கிறோம்? உண்ணும்போது அவற்றுக்கு நன்றி சொல்லப்பட்டது.

அதாவது புனிதமானது என்பதனாலேயே உண்ணப்பட்டது. உண்ணும் ஊன்விலங்கை கொலைவெறியுடன் தான் அணுகுவார்கள் என்பது ஒரு தவறான மனப்பதிவு. உலகமெங்கும் மேய்ச்சல் குடிகளின் முதன்மை உணவு அந்த மிருகமே. மலைசார்ந்த பழங்குடிகளில் இப்போதும் அப்படித்தான்.


இந்த மனநிலை இருந்தமையால் நீரையோ மண்ணையோ அசுத்தமாக்குவதும் மிருகங்களை துன்புறுத்துவதும் பெரும் பாவமாகக் கருதப்பட்டதையும் காண்கிறோம்.உணவுக்கு அல்லாத உயிர்க்கொலையும் உயிர்வதையும் பாவம் என்றும் கருதப்பட்டது.

அனைவருமே ஊன் உணவு உண்டனர். ரிஷிகள் கூட.  யாக்ஞவல்கிய முனிவர் இளங்கன்றின் ஊன்சுவை பற்றிச் சொல்வதை உபநிடதத்தில் காணலாம். அவர் பிராமண ரிஷி. அப்போதே சமணர் ஊன் விலக்கு பற்றி பேசிக்கொண்டிருந்ததையும் மகாபாரதத்தில் இருந்து ஊகிக்க முடியும்

அன்றைய பொருளியலின் அடிப்படையே மாடுதான். [தமிழிலும் செல்வம் என்றால் மாடு என்றே பொருள்] அதிலிருந்து கிடைக்கும் பால் சேமிக்கப்படவோ வினியோகிக்கப்படவோ முடியாதது. மோர் சிறிதளவு அருந்தப்பட்டது. பெரும்பாலான பால் வீணாகியது. அதிலிருந்து எடுத்த நெய்தான் முதன்மையான வணிகப்பொருள். அதேபோல தோல், கொம்பு.

அன்று மிக அதிகமாக இருந்த ஊன் மாடுதான். அந்தப்பொருளியலில் மாட்டை உண்ணாமலிருக்க முடியாது. ஏனென்றால் விளையும் உணவில் பெரும்பகுதி அதுவே. நெடுங்காலம் கடந்து எழுதப்பட்ட பாகவதத்தில் இந்திரனுக்கு யாதவர்கள் பசு பலிகொடுத்த சித்திரம் வருகிறது. பலி என்பது கூட்டாக உண்ணப்படுவதுதான். அந்தவழக்கத்தை தடுத்த கிருஷ்ணன் மந்தரமலையை வழிபடும்படிப் போதித்தார்.

ஆனால் மக்கள்தொகை பெருகி, விவசாயம் விரிந்து மேய்ச்சல் குறையத்தொடங்கியபோது மாட்டின் தேவை கூடியது. எண்ணிக்கை மிகவும் குறைந்தது. சிறிய பஞ்சங்களின்போது மாடுகள் உண்ணப்படுவதனால் மாடுகள் ஒட்டுமொத்தமாக அழியத்தொடங்கியபின்பு மாடுகளைக் கொன்று உண்பது முழுமையாகவே தடைசெய்யப்பட்டிருக்கலாம். இன்றுள்ள மதத்தடை அதன் நீட்சியாக இருக்கலாம்

மாடுண்ண தடை இருந்தமையால்தான் பெரும்பஞ்சங்களைக் கடந்தும் இந்தியாவில் மாடுகள் அழியாமல் நீடித்தன என்று அமெரிக்க மானுடவியளாளர் மெர்வின் ஹாரீஸ் சொல்கிறார்

ஜெ