Thursday, April 2, 2015

மழைப்பாடலின் நிலம்



அன்புள்ள ஜெமோ

நலம்தானே? வெண்முரசின் பக்கங்கள் வழியாகச் சென்றுகொண்டிருக்கிறேன். கொஞ்சம் தாமதமாகத்தான் ஆரம்பித்தேன். இப்போதுதான் மழைப்பாடலை முடித்தேன். மழைப்பாடலின் நிலக்காட்சிகளை திரும்பத்திரும்ப வாசித்தேன். பசும்நிலத்துக்கும் பாலைநிலத்துக்குமான போர். அதில் வானம் விடும் ரத்தமழை. ஆனால் குறியீடாக இல்லாமல் வெறுமே அந்த நிலத்தை வாசிக்கும்போதே ஒரு பெரும் எக்களிப்பு மனசுக்குள் வருகிறது. ஒரு பெரிய வாழ்க்கையை வாழமுடிவது போலிருக்கிறது

விவரணைகளில் உள்ள துல்லியம். மிகச்சரியான உவமைகள். எதைச்சொல்வதென்றே தெரியவில்லை. மிகச்சரியானது என்று மட்டும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. படகுகள் கரைகள் மேல் முட்டமால் இருக்க மூங்கிலால் ஸ்பிரிங் அமைப்பது போன்ற நுட்பமான தகவல்கள் வாசிக்க பிரமிப்பாகவே உள்ளது.

மழையும் வெள்ளமும் முதலில் வருகின்றன. தீ பிறகு வருகிறது. அஸ்தினபுரியை மழையும் அனலும் மாறிமாறித்தாக்குவதுபோல இரண்டு வகை நிலங்களும் வந்து மோதுகின்றன. அதுதான் சுருக்கமாகச் சொன்னால் மகாபாரதத்தின் கதையே. இல்லையா?

கரு. சிதம்பரம்