Tuesday, April 7, 2015

திறப்பு



அன்புள்ள ஜெ,

நலம் தானே. கடந்த பத்து நாட்களாக ஓர் நீண்ட ஐரோப்பிய பயணம், குடும்பத்தினருடன். எனவே கடிதம் எழுத இயலவில்லை. வெண்முரசு மட்டுமே தொடர்ந்து படித்து வந்தேன். வேறு எதையும் படிக்கவும் இணைய வசதி கிட்டவில்லை. ஆம், முடிந்த அளவு ஐரோப்பிய கிராமங்களிலே தான் இரவு தங்கி வந்தேன். அவற்றைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

விவாத தளத்தில் மதிப்பிற்குரிய ஜெயலக்ஷ்மி அம்மாவின் கடிதம் கண்டேன். எத்தனையோ வாழ்த்துக்களை, ஆசீர்வாதங்களை உங்களுக்கு வந்த கடிதங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் இக்கடிதம் படித்த உடன் மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்து விட்டது. தாய்மையுடன் கூடிய வாழ்த்து. உங்களை ஒருமையில் விளித்தது மேலும் ஓர் நெருக்கத்தைத் தான் தந்தது. ஒருவகையில் முற்றத்தில் தென்னையை நட்டு முற்றோதல் செய்த விசாலாக்ஷி அம்மாவே எழுதியது போலத்தான் தோன்றியது.

மேலும் ஓர் முக்கியமான திறப்பையும் சேர்த்து தந்தது. அது தான் ஆயுளின் எல்லை. பத்து வருடம் இன்னும் இருந்து படிக்க இயலுமா என்ற அவரின் விசாரம், நாங்களெல்லாம் இனியுள்ள ஆயுளையாவது குறைந்தபட்சம் எங்களுக்காவது பயன்படும் வகையில் கழிக்க வேண்டும் என்ற அறிவுரையைசொல்லாமல் சொல்லியது. சொல்லி வைத்தாற்போல நீங்களும் செண்பகம் பூத்த வானம் என்று எழுதியிருக்கிறீர்கள்!! வயதாக வேண்டாம் ஜெ. கமல் என்ற மனிதரின் மீது விமர்சனகளைத் தாண்டியும் ஓர் பிரியம் இருப்பது அவரிடம் இன்றும் துடிக்கும் இளமையால் தான். அந்த இளமை மனதின் ஒவ்வோர் அணுவிலும் இருப்பதால் தான் அறுபதிலும் அவரால் முப்பத்தைந்தாக தோன்ற முடிகிறது. நீங்களும் அவ்வாறே இருங்கள். இருக்கவேண்டும்.

வெண்முரசு எழுதி நீங்களே சேர்த்து வைத்த அனைத்தும் தீர்ந்து, மீண்டும் புதிதாக எழுதுங்கள். அதை என் மகனும் வாசிக்கட்டும்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்