Tuesday, April 7, 2015

சர்வம் கண்ணன் மயம்:

 


“ .....சங்கு சக்ர கதாபானே
  துவாரகா நிலையாச்சுத...”

சிறிய வயதிலே பூணூல் போட்டால், “சந்தி” தினசரி செய்வேன் என்று என் தந்தை நினைத்து  இருந்தார். முதலில் நானும் தினசரி மூன்று வேளை அதை செய்ய பழக்க பட்டு இருந்தேன்பின்னர் அது தினமும் ஒன்று, வாரம் ஒன்று, மாதம் ஒன்று என்று மாறி கொண்டே இருந்தது.   இப்பொழுது எல்லாம் அவர் “ஆவணி அவிட்டதிற்கு” இரண்டு நாள் முன்னர் போன் செய்து, அன்றைக்காவது நான் சந்தி செய்ய மன்றாடுகிறார். மரபு தன்னுடன் அறு பட்டு போகும் கவலை என் தந்தைக்கு எப்பொழுதும் உண்டு  
சென்ற முறை ஆவணி மாதத்தில், நான் “ஷாங்காய்” நகரில் இருக்க வேண்டி இருந்தது. அதிகாலை நான்கு மணிக்கே எனக்கு தந்தையிடம்  “Reminder” வந்து விட்டது. பூணூல் மந்திரமமும் (யக்ஜோவித மந்திரம்) பூணூலையும் என் தந்தை எற்கெனவே என் பையில் வைத்து இருந்தார். கூடவே மறக்காமல் சந்தி” செய்யும்படியும் சொல்லி இருந்தார். மனம் லயித்து செய்ய முடியாத அனைத்தும் எனக்கு வெறும் சடங்காவே தெரிந்தது.  ஐந்து பத்து நிமிடங்களில் அவசரமாக செய்து அதை வெற்று கடமையாகவே பலர் ஆக்கி விட்டிருக்கிறார் கள் .
ஹோட்டலின் டம்ப்ளெரை பஞ்சாத்ரம் ஆகவும் ஸ்பூணைய் உத்ரனியாகவும் கொண்டு  சந்தி செய்ய உட்கார்ந்து விட்டேன். வீட்டில் இருக்கும் பொழுது புத்தகத்தை பார்த்து சொல்லி விடலாம். இப்பொழுது நினைவில் மந்த்ரத்தை மீட்டி சொல்ல வேண்டி இருந்தது. அதிசயமாக  எங்கேயெல்லாம் கிருஷ்ணன்/நாராயணன் பெயர் வருகிறதோ அது எல்லாம் சரியாக ஞாபகம் வந்தது. குறிப்பாக கடைசியாக “நமஸ்சவித்ரே...” என்று தொடங்கும் மந்த்ரம் அக்ஷ்ரம் பிழகாமல் ஞாபகம் வந்தது.  அதில் ஒரு வரிதான் மேலே குறிபட பட்டு இருக்கிறது.
அந்த வரியை சிறிய வயதில் படிக்கும் பொழுது எழுந்த கிளர்ச்சி அப்பொழுது நினைவில் மீட்டி எடுக்கும் பொழுதும் இருந்தது. “சக்ரம்” என்ற பொழுது தீபாவளி பட்டாசு ஞாபகம் வந்தது. கிருஷ்ணர் இது மாதிரி ஒன்றை தான் கையில் வைத்து இருப்பார் என்று நினைத்து இருந்தேன். பிறகு வளர்ந்தவுடன் அது ஒரு மாதிரி “பூமராங்” ( Boomerang) போல பழங்குடிகள் உபயோகிக்கும் ஆயுதம் என்று முடிவு செய்தேன். ஒரு விசையில் செழுத்த பட்டால் அது வெகு தூரம் சென்று பிறகு நம் கைகளுக்கே வரும் என்று தெரிந்து இருந்தது. Youtube யில் பல முறை அதை பார்க்கும் பொழுது கிருஷ்ணன் இந்த மாதிரிதான் அதை உபயோக படுத்தி இருப்பார் என்று எண்ணி கொள்வேன். வெண்முரசில் “பிரயாகை” படிக்கும் பொழுது, கிருஷ்ணன் சக்ரத்தை உபயோகிக்கும் பொழுது, அதை அர்ஜுனன் அதிசயமாக பார்க்கும் பொழுது .அதே கிளர்ச்சி எனக்கு ஏற்பட்டது.
 “வெண்முகில் நகரத்தில்” துவாரகை நகரை வருணனை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “துவாரகை” என்ற ஒற்றை சொல்லில் உள்ள ஆச்சரியத்தை  கொஞ்சம் கொஞ்சமாக விளக்க முடிந்தது. சங்கு சக்ரம் என்றால் இரு மலைகளின் பெயர் என்றும், துவாரகை என்ற நகரம் அது மீதுதான் அமைந்து இருந்தது  என்பதும்  எனக்கு ஒரு புது தகவல் ஆகவே இருந்தது. பாரதத்தின்   கடைசியில் அந்த மாபெரும் நகரம் அழிய போகிறதே என்ற வருத்தமமும் கூடவே தோன்றியது. சாத்யாகியுடன்  என் மனதும் கூடவே பயணம் செய்தது.
படித்து  கொண்டு இருக்கும் பொழுது எனக்கு நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு அய்யங்கார் நண்பனிடம் செய்த உரையாடல் ஞாபகம் வந்தது. அவன் ஒரு கமல் ரசிகன். வெறியன் என்றே கூறலாம். அவனை உசுப்பி விட வேண்டும் என்றே சொன்னேன் , “ஆமா, இவ்வளவு பேசிறியே, கமல் ஒரு நாத்திகர் என்று தெரியுமா?
அவன் முதலில் மறுத்து பிறகு ஓத்து கொண்டான். ஆனால் அவன் கூறினான், “இப்போ நாத்திகரா இருக்கலாம், ஆனால் அவர் “சமஷ்ரயணம் ” (அல்லது பகஷ்ரயனம்)செய்து விட்டார் “ அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். அவன் சொன்னது ஒன்றுமே புரிய வில்லை. ஆனால் அது ஒரு சடங்கு என்பதும் , சங்கையும் சக்ரத்தையும் உடலில் வரைவது என்றும் புரிந்தது. அதை செய்து விட்டால் பிறகு அவன் காலம் எல்லாம் பெருமாளுக்கு அடிமை என்றும்  சொன்னான். அப்பொழுது அதை ஒரு உளறல் என்றே நினைத்தேன். இப்பொழுது வெண்முரசு படிக்கும் பொழுது  சட்டென்று   அந்த உரையாடல் ஞாபகம் வந்தது. சாத்யாகியுடன் பயனபட்டு அவன் விழிகளில் கிருஷ்ணனை பார்க்கும் பொழுது அதே பரவசம் எனக்கும் வருகிறது.
அணங்கு கொண்ட கௌரவ இளவரசியுடன்  கிருஷ்ணன் ஏதோ பேசி கொண்டே இருப்பதை சாத்யாகி பார்க்கிறான். அப்பிடி என்ன தான் அவன் பேசி இருப்பான் என்று யோசித்து கொண்டு இருக்கிறான். பீஷ்மரை பார்த்து பேசிய பிறகு கிருஷ்ணன்  பாறை மேல் உட்கார்ந்து கொண்டு நதியை  நோக்கி கொண்டு இருக்கிறான். சிறது நேரத்தில் செய்தி வருகிறது அந்த கௌரவ இளவரசி இறந்து விட்டாள் என்று. அவன் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. அப்பிடி என்றாள் அவன் பாறை மீது உட்கார்ந்து கொண்டு அந்த இளவரசியுடனா பேசி கொண்டு இருந்தான்? அந்த இடத்தில்  ஏதோ கிருஷ்ணன்  மனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு படி மேலே நிற்பது போல இருந்தது.
பெரிய இந்த்ரப்ரஸ்தம் நகர் எழ போகிறது, தர்மன் அஸ்வமேத யாகம் செய்ய போகிறான், மகத நாட்டிற்கு சென்று அவன் ஜராசந்தனை கொல்ல போகிறான்., அந்த யாகத்திற்கு அவனே குருவாக இருக்க போகிறான்,சிசுபாலனிடம் கேவலமாண சொற்களை கேட்க போகிறான் பிறகு அவனை வதம் செய்ய போகிறான்,கிருஷ்ணன் பாண்டவர்கள் கூடவே இருக்க போகிறான்.  இன்னும் பல அத்தியாயம் கிருஷ்ணன் வர போகிறான் என்பதே மனதிற்கு உவகையாக இருக்கிறது.
என்னை என்றுமே பக்திமானாக உணர்ந்து இல்லை ஆனால் வெண்முரசை படித்துவிட்டு பிறகு மந்தரத்தை நினைவு கூறும் பொழுது ஆனந்தமாக இருக்கிறது. “ரக்ஷாமாம் சரனாகதம்.. ” என்று முடிவடையும் அந்த மந்த்ரத்தின்  முடிவில் நாம் மனமும், சாத்யாகி போல் கிருஷ்ணன்யிடம் சரண் அடைகிறது.

ரகுராமன்